செவ்வாய், 17 மே, 2011

கம்யூனிஸ்ட் கட்சிகள் இனி............?பிசினஸ் லைன்


“மார்க்சிஸ்ட் கட்சிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுவிட்டது.”

“இடதுசாரி அணி இனி தலைதூக்க முடியாது”

“மேற்கு வங்கத் தோல்வியால் மூன்றாவது அணி இனி கானல் நீர்தான்”.

இவையெல்லாம் மேற்கு வங்கத் தேர்தல் குறித்து ஊடகங்கள் வெளியிடும் செய்திகள். இடதுசாரிகளின் எதிரிகள் மட்டுமல்ல; அதன் ஆதரவாளர்கள் கூட எதிர்காலம் குறித்த தவறான மதிப்பீடுகளுக்கும் சோர்விற் கும் ஆட்பட்டுள்ளனர். பொருளாதாரப் பிரச்சனைகளில் அல்லது மதச்சார்பின்மை பிரச்சனையில் வலதுசாரி சாய்மானத்தை தடுக்கும் வல்லமையை மார்க்சிஸ்ட் கட்சி இழந்து விட்டதோ என ஒரு பகுதியினர் கவலை கொண்டுள்ளனர். ஏனெனில் ஊடகங்கள் அந்த அளவிற்கு மேற்குவங்க மற்றும் கேரளா தோல்வி குறித்து இடைவிடாது அவதூறு பொழிகின்றன.

மேற்குவங்கத்தில் இடதுசாரி அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. எனினும் சில ஊடகங்கள் தமது ஆசைகளை வெளியிடுவது போல மார்க்சிஸ்ட் கட்சியோ அல்லது இடதுசாரி அணியோ தலை தூக்க முடியாத அளவிற்கு தோல்வி அடைந்துள்ளதா? மிகப் பெரும்பாலான மக்கள் இடதுசாரி அணியிட மிருந்து விலகிவிட்டனரா?

இக்கேள்விகளுக்கு, இல்லை என்பதே பதிலாகும்.

இடதுசாரி அணியின்

வலுவான தளம்

2011 தேர்தலில் இடதுசாரி அணி 41.2 சத வீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இது குறைவான வாக்குகள் என எவரும் கூற முடியாது. இன்று பல்வேறு மாநிலங்களை ஆளும் கட்சிகள் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு, பீகாரில் நிதிஷ் குமார் அணி 40சதவீதத்திற்கும் குறைவாகவே வாக்குகளைப் பெற்றுள் ளது. இதே போல ஆந்திரா மற்றும் மகாராஷ் டிரா மாநிலங்களிலும் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்துள்ளனர். இந்த பிண்ணனியில் 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகும் இடதுசாரி அணி 41.2 சதவீத வாக்குகள் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2009 நாடாளுமன்றத்தேர்தலில் 1.84 கோடி வாக்குகளைப் பெற்ற இடதுசாரிஅணி 2011ல் 1.95 கோடி வக்குகளைப் பெற்றுள்ளது. சுமார் 11 இலட்சம் வாக்குகள் கூடுதலாக இடதுசாரி அணிக்கு கிடைத்துள்ளன என்ப தும் குறிப்பிடத்தக்கது. எனினும் இதே கால கட்டத்தில் எதிர் அணி 33 இலட்சம் வாக்கு கள் கூடுதலாக பெற்றது என்பதே இடதுசாரி அணியின் பின்னடைவுக்கு காரணம் ஆகும். இடதுசாரி அணி கூடுதலாக வாக்குகளை ஈர்த்த அதே சமயத்தில் எதிர் அணியினர் அதை விட கூடுதலாக வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

எனவே மேற்கு வங்கத்தில் இடதுசாரி அணிக்கு எதிர்காலம் இல்லை எனும் மதிப் பீடு அபத்தமானது ஆகும். எனினும் அதே சமயத்தில் தோல்வியின் ஆழத்தை குறைத்து மதிப்பிடுவதும் தவறானது ஆகிவிடும். தனது தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, மக்களிடமுள்ள தொடர்புகளை செழுமைப் படுத்திடும் திறன் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரி அணிக்கும் உண்டு.

கேரளாவில் தேர்தல் முடிவுகள் மார்க் சிஸ்ட் கட்சிக்கோ அல்லது இடதுசாரி அணிக்கோ பாதகமாக அமைந்தது என எதிரி கள் கூட கூற முடியாது. இரு அணிகளுக்கும் இடையே வாக்குகளின் வேறுபாடு என்பது வெறுமனே 0.83 சதவீதம் மட்டும்தான். அதா வது இடதுசாரி அணி, காங்கிரஸ் அணியை விட 1.62 இலட்சம் வாக்குகள்தான் குறைவாக வாங்கியுள்ளது. 7 தொகுதிகளில் 1000க்கும் குறைவான வாக்குகளில் இடதுசாரி அணி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

கட்சிக்கு எதிராக வன்முறை

எனவே இடதுசாரி அணி, தான் வலுவாக உள்ள மாநிலங்களில் தொடர்ந்து மக்களின் நலன் காக்க இயக்கம் உருவாக்கும் என்பது மட்டுமல்ல; அகில இந்திய அளவிலும் காங் கிரஸ்-பா.ஜ.கவின் முதலாளித்துவ கொள் கைகளுக்கு மாற்றாக உழைக்கும் மக்களின் வலுவான இயக்கங்களை உருவாக்கும் வலிமை படைத்தது.

ஒரு பொதுவுடைமை இயக்கம், தேர்தல் வெற்றி- தோல்விகளின் அடிப்படையில் மட் டுமே உயிர்வாழ்வதில்லை. உழைக்கும் மக்க ளின் இயக்கங்களை கட்டுவதும் அடிப்படை வர்க்கங்களை திரட்டுவதும்தான் கட்சியின் முக்கியப்பணி. அதன் நீண்ட பயணத்தில் தேர்தல்களும் ஒரு முக்கியமான அம்சம். ஆனால் அதுவே தீர்மானகரமான அம்சம் அல்ல. தேர்தல் தோல்விகளால் மார்க்சிஸ்ட் கட்சி முடங்கிப் போய்விடுவதில்லை. மார்க் சிஸ்ட் கட்சிக்கு முடிவுரை எழுத முனை வோர் விரைவில் இதனை புரிந்துகொள்வர்.

மேற்கு வங்கத்தில் 2009ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலுக்கு பின்பு கட்சிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் வன்முறை ஏவி விடப்பட்டது. கட்சியும் இடதுசாரி இயக்கமும் சுமார் 350க்கும் அதிகமான ஊழியர்களை இழந்தது. அதுபோன்ற ஒரு வன்முறையை மீண்டும் ஏற்படுத்த அனுமதிக்கக்கூடாது என கட்சியின் அரசியல் தலைமைக்குழு எச்சரித்துள்ளது. எனினும் வன்முறைகள் மீண்டும் அரங்கேற அரம்பித்துள்ளன. கடந்த 4 நாட்களில் கட்சியின் நான்கு தலைவர்கள் கொல்லப் பட்டுள்ளனர்; கட்சியைச் சார்ந்த பெண் ஊழியர்கள் பாலியல் வன்முறைக்கு பலியாகி யுள்ளனர்; ஏராளமான ஊழியர்களும் அவர்தம் குடும்பங்களும் தமது இருப்பிடத் தை விட்டு விரட்டப்பட்டுள்ளனர்; கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன; கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கத்தி முனையில் பதவி விலக மிரட்டப்படு கின்றனர்.

இவையெல்லாம் 1971-75ல் பேயாட்டம் ஆடிய அரைப்பாசிச அடக்கு முறையை நினைவுபடுத்துவதாக உள்ளது. எத்தனையோ சோதனைகளை தாங்கிய மேற்கு வங்க கட்சிக் கிளை, இந்த சோதனைகளையும் முறியடித்து சாதனைகள் புரியும். ஏனெனில் கட்சி எப்பொழுதும் உழைக்கும் மக்களின் நலன்களுக்காக அவர்கள் பக்கம் நின்றுள் ளது. மக்களும் கட்சியை ஒரு போதும் கைவிடமாட்டர்கள்.

அ.அன்வர்உசேன்

(விவரங்கள்- 17.05.2011 பிசினஸ் லைன் இதழில் சி.பி. சந்திரசேகர் மற்றும் ஜெயதிகோஷ் எழுதிய கட்டுரையிலிருந்து)

கருத்துகள் இல்லை: