வியாழன், 19 மே, 2011

கம்யூனிஸ்ட்டுகள் இன்றி இந்தியா நகராது : ஹிந்துஸ்தான் டைம்ஸ்




சட்டமன்றத் தேர்தல்களில் இடதுசாரி களின் தோல்வியினை சிலர் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்க ளது குதூகலத்தின் மீது பெட்ரோல் விலை உயர்வு பேரிடியாக இறங்கியிருக்கிறது. இடது சாரிகளின் தோல்வியினைக் கொண்டாடு கிற வேளையில், வலுவான இடதுசாரி அர சியலின் தேவையினை உணர்த்துகிற முரண் பட்ட சூழ்நிலையல்லவா இது? தேசத்தின் தார்மீக மனச்சாட்சியின் காவலர்களாக மட்டுமல்லாது, சாமானிய மக்களின் மீது சுமத்தப்படும் பொருளாதாரச் சுமையினை எதிர்த்துப் போராடும் களப்போராளிகளாகவும் செயலாற்றும் இடதுசாரிகளின் தேவையைத் தான் இந்த முரண்பட்ட சூழ்நிலை உணர்த் தியிருக்கிறது.

தேர்தல்களில் சில கட்சிகள் வெற்றிபெறு வதும், சில தோல்வியடைவதும் ஜனநாயகத் தில் சகஜமானதேயாகும். ஆனால் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் தொடர்ந்து 34 ஆண்டுகள் ஆட்சியிலிருந்ததால்தான் அவர்களது தோல்வி இன்று பெருமளவு பேசப்படுகிறது. ஏழுமுறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு முதல் முறையாக தோல்வி என்பதால்தான் இது பரபரப்புச் செய்தியாக மாறியிருக்கிறது.

கேரளாவில்...

கேரளாவில், கடந்த நாற்பது ஆண்டுகால மாக மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் நடை பெறும்போதெல்லாம் ஆட்சி மாற்றமும் தொடர்ந்து வந்திருக்கிறது. ஆனால், இம் முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெற்றிருக்கும் பெரும் பான்மை, அண்மைக்கால வரலாற்றில் மிகக் குறுகிய பெரும்பான்மை ஆகும். 10 கட்சிக ளின் கூட்டணியான ஐ.ஜ.முன்னணி அரசு பெற்றிருக்கும் 2 சீட் மட்டுமேயான பெரும் பான்மை, இயல்பாகவே ஒரு உள்ளார்ந்த நிலையற்ற தன்மையினை உருவாக்கியிருக் கிறது. மலையைக் கெல்லி எலியைப் பிடிப் பது என்பார்களே அத்தகைய வெற்றிதான் போலும் இது. ஆட்சிக்கெதிரான உணர்வுகள் எதுவுமில் லாத நிலையில் இடது ஜனநாயக முன்னணி 45 சதவீத வாக்குகளைப் பெற்றி ருக்கிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணி பெற் றிருக்கும் சதவீதத்துடன் ஒப்பிடும்போது, இடைவெளி 1 சதவீதத்திற்கும் குறைவான தேயாகும். வாக்குகளின் எண்ணிக்கையில் கூறப்போனால், வெற்றி பெற்றிருக்கும் ஐ.ஜ. முன்னணியை விட 1.55 லட்சம் வாக்குகள் மட்டுமே குறைவு.

மேற்கு வங்கத்தில்...

மேற்குவங்கத்தில் இடதுமுன்னணி 41 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இடது முன்னணி இதுவரை பெற்றிருப்பதில் இதுவே மிகக்குறைந்த சதவீதம். வேட்பாளர் வெற்றி களின் அடிப்படையிலான தேர்தல் முறை யின் காரணமாக, பெற்றிருக்கும் வாக்குகள் சத வீதத்திற்கும் இணையாக சட்டமன்ற இடங் கள் கிடைப்பது சாத்தியமல்ல. இன்னும் கூட சொல்லப்போனால், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இடது முன்னணிக்கு வாக் களித்தவர்களைவிட, இந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் கூடுதலாக 11 லட்சம் பேர் வாக் களித்திருக்கின்றனர்.

அதேபோன்று 2006 சட்டமன்றத் தேர்த லில் இடதுமுன்னணி பெற்ற வாக்குகள் 1.98 கோடி. இந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 1.96 கோடி. அதாவது 2006 தேர்தலில் பெற்றதைவிட இந்த தேர்தலில் பெற்றது 2 லட்சம் வாக்குகள் மட்டுமே குறைவு. ஆனால் 2006ல் பெற்ற இடங்கள் 294க்கு 235. இப்போது கிடைத்திருப்பது 294க்கு 61 இடங்கள் மட்டுமே.

இந்த முரண்பாட்டிற்கு முக்கியக்காரணம் 2006ல் எதிர்க்கட்சி வாக்குகள் பிளவுபட்டி ருந்தன. அது இடதுமுன்னணிக்கு பயன்பட் டது. ஆனால் 2011ல் எதிர்க்கட்சிகளின் ஒற் றுமை வலுவாக அமைந்தது. அதாவது, 2006 தேர்தலுடன் ஒப்பிடும்போது ஏறக்குறைய அதே எண்ணிக்கை வாக்குகளை இம்முறை யும் பெற்றிருப்பினும், பெற்ற இடங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் தகவல்களின் படி, 2009க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத் தில் 48 லட்சம் பேர் புதிய வாக்காளர் பட்டிய லில் இடம் பெற்றிருக்கின்றனர். இதில் 37 லட்சம் இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வங்கத்தில் இடதுமுன்னணி ஆட்சி அமைந்த பின்னர் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 48 லட்சம் புதிய வாக்காளர்களில் 10 லட்சம் பேருக்கு மேல் இடதுமுன்னணிக்கும், 34 லட்சம் பேருக்கு மேல் ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளுக்கும் வாக் களித்திருக்கின்றனர் எனக்கொள்ளலாம். இந்தத் தகவல்கள் தேர்தல் முடிவுகளை பெருமளவு விளக்குவதாக உள்ளன.

41 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கும் இடதுமுன்னணியின் வாக்காளர் பலம், பல மாநிலங்களிலுள்ள ஆளும் கட்சிகளின் வாக் காளர் பலத்தைவிட அதிகம். ஆந்திரப்பிரதே சம், மகாராஷ்டிரா, ஏன் இன்று எடுத்துக் காட்டாக பேசப்படும் நிதிஷ் குமாரின் பீகார் உள்ளிட்ட அனைத்து மாநில ஆளும் கட்சி களின் வாக்காளர் பலமும், மேற்குவங்க இடது முன்னணியின் வாக்காளர் பலத்தைவிடக் குறைவானதே ஆகும்.

இரத்தத்திலேயே இடதுசாரி எதிர்ப்புத் தன்மை கொண்டவர்களை விட்டுத் தள்ளுங் கள். இடதுசாரிகளின் எதிர்காலம் குறித்து உண்மையிலேயே அக்கறையுள்ளவர்களின் கவலை புரிந்துகொள்ளக்கூடியதே. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவெடுத்த பின் வந்த 1967 தேர்தல்களில், மக்களவையில் பெற்ற இடங்கள் 19; இன்று நாம் பெற்றிருப்பது 16 இடங்கள். அதே போன்று கேரளம் மற்றும் மேற்குவங்கத்தில் முறையே 52 மற்றும் 43 சட்டமன்ற இடங்கள்; இன்று நாம் பெற்றிருப் பது 45 மற்றும் 40 இடங்கள்.

எது அளவுகோல்?

ஆனால் நவீன இந்தியாவின் உருவாக் கத்தில் இடதுசாரிகள் செலுத்திய செல்வாக் கினை, தேர்தல் வெற்றிகளுக்கு உட்படுத்தியோ அல்லது அதை அளவுகோலாக வைத்தோ மட்டும் மதிப்பிட முடியாது. தேச விடுதலைப் போராட்ட காலத்தில் நாட்டின் எதிர்காலம் குறித்து மூன்று காட்சிகள் முன் நின்றன. ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா என்பது காங்கிரசின் நோக்கமாக இருந்தது. அத்தகைய இலக்கோடு சேர்த்து, அரசியல் சுதந்திரத் தினை பொருளாதார சுதந்திரமாகவும் மாற்ற வேண்டும் என்பது இடதுசாரிகளின் இலக் காக இருந்தது. இத்தகைய இரண்டு இலக்கு களும் இடதுசாரிகளுக்கு இருந்ததால்தான், இந்து மதவெறியும் இஸ்லாமிய மதவெறியும் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கக் கூடி யவை என்ற மூன்றாவது காட்சியினையும் அவர்களால் எளிதில் காணமுடிந்தது. நவீன இந்தியா என நாம் அறிந்திருக்கும் இன்றைய இந்தியாவின் உருவாக்கத்திலும், மக்களது மன உணர்வுகளைச் செம்மைப்படுத்துவதி லும் இடதுசாரிகளின் பங்கு மகத்தானது. இவையெல்லாம் அவர்களின் தேர்தல் வெற்றி- தோல்விகளை தாண்டி நிற்பவையாகும்.

இரண்டாவது- நிலப்பிரபுத்துவக் கொடுமைக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய தீரமிக்க பல்வேறு போராட்டங்கள் குறித்த அம் சங்கள். ஜமீன்தாரி ஒழிப்பு உள்ளிட்ட நில உடைமை அமைப்பினைத் தகர்க்கும் ஆலோ சனைகளை நாட்டின் மையமான விவாதத் திற்கு ஆளாக்கிய பெருமை கம்யூனிஸ்ட்டு களையே சாரும். இதன் விளைவாக கிராமப் புறங்களிலிருந்த பெருந்திரள் மக்கள், இந்தியா வின் ஜனநாயகப் பெரு நீரோட்டத்திற்குள் ஈர்க் கப்பட்டனர் என்பதெல்லாம் வரலாறு.

மூன்றாவது- சுதந்திர இந்தியாவில் மொழி அடிப்படையில் மாநிலங்களின் மறுசீரமைப் பிற்கான போராட்டங்கள். விசால ஆந்திரா, சம் யுக்த மகாராஷ்டிரா, ஐக்கிய கேரளம் ஆகிய வற்றில் இடதுசாரிகள் ஆற்றிய பங்கு, இந்திய அரசியல் வரைபடத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கேரளாவிலும், மேற்குவங்கத்திலும் நிலச்சீர்திருத்தங்களின் அமலாக்கத்திற்கான போராட்டங்கள். மறுபுறத்தில் ஜனநாய கத்தினை அடிமட்டம் வரை கொண்டு செல் லும் பஞ்சாயத் ராஜ் திட்டத்திற்கான அரசி யல் சாசன திருத்தங்களுக்கு வித்திட்டதி லும் இடதுசாரிகளுக்கு பெரும் பங்கு உண்டு. அனைத்தையும் இழந்து வாழ்க்கையில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் பலரை ஜனநாயகப் பெருநீரோட்டத்திற்குள் ஈர்ப்பதற்கு இவையெல்லாம் உதவின.

பயணம் தொடரும்!

நவீன - தாராளமயக் கொள்கைகள் இன்று இரண்டு இந்தியாக்களை உருவாக்கி வருகின்றன. இந்திய நாட்டினையும், இந்திய மக்களின் வாழ்வாதாரங்களையும் சூறையாடு கின்ற மெகா ஊழல்கள் இன்று பெருகிவரு கின்றன. இதில் எந்தத் தொடர்புமில்லாமல் நேர்மையுடன் நெஞ்சு நிமிர்த்தி நிற்பவர்கள் இடதுசாரிகள். அவர்களது நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் சிற்சில தவறுகள் நடந்திருக்கக்கூடும்.

தவறுகள் அடையாளம் காணப்பட வேண் டும்; அவை களையப்பட வேண்டும்; அவை திரும்ப நேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதுவே இடதுசாரிகளின் தொடர்ந்த நிலைப் பாடு. இது ஒரு கடுமையான போராட்டம். இதில் ஏற்கெனவே கடந்த 48 மணி நேரத் தில் மேற்குவங்கத்தில் இரண்டு உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம்.

ஒரு உண்மையான நாகரீகமான சமுதா யத்தினை உருவாக்குவதற்கும், மேம்பட்ட இந்தியாவினை படைப்பதற்குமான நீண்ட நெடிய பயணம் தொடர்கிறது. இடதுசாரி களைப் புறந்தள்ளிவிட்டு இந்தப் பயணத் தினை எவராலும் நிறைவு செய்ய இயலாது என்பது உறுதி.


சீத்தாராம் யெச்சூரி எம்.பி,

தமிழில் : இ.எம். ஜோசப்

நன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ்

கருத்துகள் இல்லை: