வெள்ளி, 29 ஜூலை, 2011

ஹிலாரி கிளிண்டனின் வஞ்சக வார்த்தைகள்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்து சென்றிருக் கிறார். இந்திய அதிகார வர்க்கமும், ஊடகங் களும் அவரது பயணத்தைக் கொண்டாடி மகிழ் கின்றன. இந்த உற்சாகப் பெருவெள்ளத்தில், மயக்கத்தில் இந்திய இறையாண் மையைக் கேள்விக்குறியாக்கும் சில உண்மைகளை மறந்துவிடக் கூடாது.

தனது பயணத்தின் முதல் நாள் புதுதில்லியில் ஹிலாரி வெளியிட்ட அறிக்கையில், அணுவிபத்து இழப்பீட்டுச் சட்டம், சர்வதேச அணுசக்தி முகமையின் அணுசக்தி விபத்துத் தொடர்பான சாசனத்தை முழுமையாக உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மிகவும் கவனமாக, அர்த்தம் பொதிந்த விதத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை சாமானியர்கள் புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை. ஆனால் அந்த வார்த்தைகளுக்குள் வஞ்சகம் ஒளிந் திருக்கிறது.

ஹிலாரியின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பது என்றால் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதாகும். வெளிநாடுகளிடம் வாங்கும் அணுஉலைகளில் விபத்து ஏற்படுமானால் அந்த விபத்துக்கான இழப்பீட்டுக்கு அந்த நிறு வனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பது அணுசக்தி இழப்பீட்டுச் சட்டத்தில் உள்ள ஒரு பிரிவாகும். நம் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இந்த அம்சத் தை நாம் கைவிட வேண்டும் என்பதே ஹிலாரி சொல்லியிருப்பதன் வெளிப்படையான அர்த்தம்.

மேலும் சர்வதேச அணுசக்தி முகமையின் சாசனம் என்பது உலக நாடுகளைக் கட்டுப் படுத்தும் சட்டம் கிடையாது. நம் நாட்டு நாடாளு மன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை அது கட்டுப்படுத்தாது. எனவே அமெரிக்க தனியார் அணு உலை நிறுவனங்களின் நலன்களுக்காக பேசும் ஹிலாரியின் வார்த்தைகளுக்காக இந்திய ஆட்சியாளர்கள் நமது 120 கோடி மக்களின் நலன்களைப் பிணையாக வைக்கக் கூடாது.

அதுமட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் சட்ட மாக்கப்பட்டு ஓராண்டு காலம் கடந்த பின்னும் அந்த சட்டத்தை வெளிப்படையாக அறிவிக்கை செய்யாமல் இழுத்தடித்து வருகிறது மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. அதன் நோக்கம் வெளிப்படை யானது. தங்கள் அமெரிக்க எஜமானர்கள் எக்கார ணம் கொண்டும் கோபித்துக் கொள்ளக்கூடாது என்பதே அது.

தமிழ் மக்களின் நலன்களுக்காக மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பில் அக்கறை செலுத்தும் தமிழக முதல்வரின் ஆர்வம் புரிந்து கொள்ளக் கூடியதே. எனினும் அமெரிக்க நிறுவனங்களின் செயல்பாடு, நம்பகத்தன்மை குறித்து மிகுந்த கவனம் தேவை என்பதை மறந்துவிடக் கூடாது. தமிழ்நாடு அரசு தலா 300 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட 10 சூரிய சக்தி பூங்காக்களை உருவாக்க திட்டமிட்டுள் ளது. இதற்கு அமெரிக்க முதலீடுகளைக் கொண்டுவருவதற்கு முயற்சி செய்யப்படுகிறது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் மின் உற்பத்தியில் ஈடுபட்ட என்ரான் என்ற அமெரிக்க நிறுவனத் தின் அனுபவத்தை நாம் எளிதில் மறந்துவிட முடியாது.

மொத்தத்தில் ஹிலாரியின் பயணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை முன்நிறுத்தியே அமைந்தது என்பதை நம் நாட்டின் நல் எதிர்காலத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: