செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

இலங்கைத் தமிழர் இன்னல் தீர்க்க இயக்கம். இனியொரு தாமதம் என்றுமில்லை

கடந்த ஜூலை மாதம் 30ம்தேதி சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டில் இலங்கைத் தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேசும் பொழுது, இந்த மாநாட்டில் எனக்கு பேசுகின்ற வாய்ப்பு கிடைத்ததை “நான் ஒரு வரப்பிரசாதமாகவே கருதுகிறேன்’’ என்றார். அதற்கான விளக்க மாக அவர் சொன்னது “ஒரு அகில இந்திய கட்சி என்ற முறையில் மார்க்சிஸ்ட் கட்சி குரல் கொடுத்தால் அது நாடு முழுவதும் எதிரொலிக்கும். நாட்டு மக்கள் கவனத்தை மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் கவனத் தையும் ஈர்க்கும்” என்றார்.

அதுமட்டுமல்ல, இலங்கைத் தமிழர் விசயத்தில் அரசியல் தீர்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சி சொல்வதைத்தான் நாங்கள் இலங் கையில் சொல்கிறோம் என்றார்.

1964ல் இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டார நாயகா, இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதி களாக லட்சக்கணக்கானோர் அனுப்பி வைக் கப்பட்டார்கள். அன்றைய இந்திய சூழ்நிலை யில் இங்கே வந்த அந்த அகதிகளுடைய வாழ்க்கை உருட்டிவிடப்பட்ட பந்தை போல எங்கெங்கோ உருண்டு ஓடியது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்தை நெருங்கிவிட்ட சூழலில், அவர்களுக்கு தாங்கள் அகதிகளாக வந்தவர்கள் என்பது மறந்து போயிருக்கும். வாழ்க்கைக்கான அன்றாட போராட்டம், நேற்றைய வாழ்க்கை நிகழ்வுகளை கூட அசைபோட முடியாத அளவுக்கு அலைக் கழிக்க கூடிய இன்றைய சூழலில் அரை நூற்றாண்டு பிரச்சனைக்கு ஏது நேரம்?

இந்த வலியை சம்பந்தப்பட்டவர்கள் மறந் தாலும், இந்த பிரச்சனையின் மீது அக்கறை உள்ளவர்கள் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள். சமீபத்தில் வெளிவந்த கொற்கை என்ற நாவலில் அதன் ஆசிரியர் ஜோடி குரூஸ் இதை மிக அழகாக கையாண் டிருப்பார். இலங்கை அகதிகள் பிரச்சனை பற்றி சொல்ல வரும் நிலையில், அவர் களுக்கென்ன, சட்டையில் ஒரு ரோஜா பூவை குத்திவிட்டால் போதும். அதன் அழ கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதுபோல, அங்கேயிருக்கும் ஆட்சியாளர்கள் இவர்களுக்கு ரோஜா பூவை குத்திவிட்டி ருப்பார்கள் என்று குறிப்பிட்டிருப்பார்.

அதாவது, சிரிமாவோவும், நேருவும் நடத்திய பேச்சுவார்த்தையைத் தான் அவர் இப்போது அப்படி குறிப்பிடுகிறார். இப்படி, இலங்கை சுதந்திரம் வாங்கிய 1948லிருந்து சிறு பொறி நெருப்பாய் கிளம்பிய இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது ஊழித்தீயாய் மாறி உலகமெங்கும் இருக்கக்கூடிய அரசியல் இயக்கங்களையும், நல்லெண்ணம் கொண் டோரையும் மனம் பதைபதைக்க வைத் திருக்கிறது.

1983ல் கிளம்பிய இப்பிரச்சனை மிகப் பெரிய அரசியல் வன்முறை, கலவரங்களில் முடிந்தது. தமிழ்நாடு ஏறத்தாழ ஓராண்டு காலத்திற்கு மேல் இதே பிரச்சனையில் அன் றாடம் ஏதேனும் ஒரு இடத்தில் இயக்கத்தை கண்டுகொண்டே இருந்தது. அன்றைக்கு இப்பிரச்சனைக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியையே துறந்தோம் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டவர்கள், கடைசி யில் தேர்தல் நேரத்தில் காலை 10 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதத்தை அடுத்த 2 மணி நேரத்தில் முடித்துக்கொண்டு, எல்லாம் முடிந்துவிட்டது என்று சொல்லிய காட்சி களையும் பார்த்தோம்.

எல்டிடிஇ என்ற அமைப்பு இலங்கை யில் நடைபெற்ற யுத்தத்திலிருந்து அறவே துடைத்தெறியப்பட்டு 2 வருடமான நிலை யில் அந்த யுத்தத்தை சொல்லியே இலங்கை யில் இருக்கக்கூடிய அப்பாவி மக்களை கொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறது ராஜபக்ஷே அரசு.

பிடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களை விடுவிக்கவில்லை. இதேபோல் பிடித்துச் செல்லப்பட்ட குடும்பத் தலைவர்களும் வீடு வந்து சேரவில்லை. இதற்கு மேல் பலியான இளைஞர்களும், குடும்பத் தலைவர்களும் ஏராளம் உண்டு. ஆகமொத்தத்தில், வீட்டில் ஆண்கள் இல்லாமல் வெறும் பெண்களை மட்டுமே கொண்டதாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக் கின்றன.

கட்டிய கணவன் இல்லையெனில் மனைவி என்பவள் விதவைதானே. எனவே, விதவைகள் எண்ணிக்கை அங்கு பெருத்துப் போயிருக்கிறது என்பது சொல்லித்தீர வேண்டிய சோகச்சித்திரம்.

அகதிகள் முகாமில் உள்ள பல்லாயிரக் கணக்கானோருக்கு ஒவ்வொரு முகாமிலும் 2 அல்லது 3 கழிப்பறைகளே உள்ளன என்று நேரில் பார்த்தோர்கள் சொல்லும் பொழுது, அந்த முகாமின் சுகாதாரம் எவ்வளவு கேடா னது என்பதை நாம் புரிந்து கொள்வதற்கு இன்னொரு புத்தி தேவையில்லை.

எல்டிடிஇ-யுடன் நடந்த யுத்தத்தை யொட்டி வீடிழந்த லட்சக்கணக்கானோருக்கு இன்னும் வீடுகட்டும் பணிகளே துவங்க வில்லை என்பது மிகப்பெரிய சோகம்.

“எலி வளையானாலும் தனி வளை வேண்டும்’’ என்பது வீட்டின் அவசியத் திற்காக சொல்லப்பட்ட முதுமொழி.

இருந்த வீட்டையும் யுத்தத்தில் இழந்து விட்டு அனாதையாக நிற்கும் தமிழர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை இதற்கு மேல் விவரிக்க தேவையில்லை.

யுத்தத்தின் இறுதி நிலை என்பது சுடு காடே என்பதற்கு இன்றைக்கு இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்த பகுதி என்பது கண் கொண்ட காட்சியாக நிற்கிறது. எல்டிடிஇ மீது கொண்ட குரூர கண்களோடேயே அப்பாவி தமிழ் மக்களையும் ராஜபக்ஷே அரசு பார்ப்பது “காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்” என்பதையே நமக்கு நினைவு படுத்துகிறது.

ஒரு நாட்டில் குடிமக்கள் வாழும் அனைத்து இடங்களிலும் ராணுவம் தான் அனைத்தையும் தீர்மானிக்கும். சர்வமும் ராணுவமயம் என்றால் சாதாரண பிரஜைகள் சகஜமாக வாழ முடியுமா?

எனவே, சாதாரண குடிமக்கள் வாழு மிடங்களில் இருக்கக்கூடிய இராணுவம் உடனடியாக விலக்கப்பட வேண்டும். காவல் துறை வசம் அதற்குண்டான பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானதொரு கோரிக்கையாகும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது ராஜபக்ஷே அரசின் முதற்பெரும் கடமை என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால், அதை வசதியாக மறந்துவிட்ட நிலையிலிருக்கும் ராஜபக்ஷேவுக்கு அதை நினைவுபடுத்த வேண்டிய கடமையும், கட்டாயமும் இந்திய அரசுக்கு உண்டு.

ஏனெனில் அங்கே அல்லலுறும், அவதிப்படும் தமிழர்கள் இங்குள்ள தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள், வம்சாவழிகள், வாழையடி வாழைகள்.

எனவேதான் இந்திய அரசினுடைய கவனத்தை இதில் ஈர்ப்பதற்காகவும், நடந்த போர்க்குற்றங்களுக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தியும், இனியாவது தன் நாட்டு குடிமக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை பாரபட்சமின்றி ஆற்ற வேண்டுமென்பதை ராஜபக்ஷேவுக்கு எடுத்துக்காட்டும் விதத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் 9ம்தேதி தமிழகம் முழுவதும் லட்சக்கணக் கானோரை திரட்டி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருக்கிறது.

அடுத்தக்கட்டமாக நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் இதற்கான குரல்கள் இந்திய மொழிகள் அனைத்திலுமாக ஓங்கி ஒலிக்கவிருக்கிறது. வெறும் உணர்ச்சிக்கு மட்டும் இடம்தராது, உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் அறிவார்ந்த சிந்த னையோடு நடைபெறவுள்ள இந்த ஆர்ப் பாட்டத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை மீது பற்று கொண்ட அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டியது அவர்தம் தலையாய கடமையாகும்.

ஜூலை 30ம்தேதி நடைபெற்ற இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் முழக்கங்கள் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கும் விதத்தில் அலைகடலென ஆர்ப்பரித்து அனைவரும் சந்திப்போம் ஓரிடத்து.

அணிதிரண்டு வருக! வருக!!

இரா.ஜோதிராம்

1 கருத்து:

Yazhini munusamy சொன்னது…

arumaiyaana pathivu .. Ore sinthanai udaiyavargal onrinaiyavendum ..
neram irunthaal padithu paarkavum ..
http://yazhinimunusamy.blogspot.com/