புதன், 2 நவம்பர், 2011

கருவாட்டுப் பானைக்கு காவல் இருக்கும் பூனைகள்

ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். தில்லி யில் நடந்த மாநில ஆளுநர்கள் மாநாட்டில் நிறைவுரையாற்றிய அவர், இந்த ஆருடத்தை வெளியிட்டிருக்கிறார். ஊழலுக்கு எதிராக நட வடிக்கை எடுப்பதற்காக இவர் காத்திருந்தது போலவும் இப்போதுதான் அதற்கான நேரம் வந்துள்ளது போலவும் தூக்கத்திலிருந்து திடீரென்று எழுந்தவர் போல கூறியிருக்கிறார் நாட்டின் பிரதமர்.

சுதந்திர இந்திய வரலாற்றில் ஊழல் மிகுந்த ஒரு ஆட்சிக்கு தலைமை தாங்குபவர் என்ற அவப்பெயரை சம்பாதித்திருப்பவர் பிரதமர் மன் மோகன் சிங். இவரது அரசினால் பின்பற்றப் படும் தாராளமய பொருளாதாரக் கொள்கைதான் பெருகிவரும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது என்பது ஊரறிந்த உண்மை.

இவரது அமைச்சரவை சகாக்கள் சசிதரூர், ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி, தயாநிதிமாறன் ஆகியோர் ஊழல் புகார்களில் அடுத்தடுத்து சிக்கி, பதவி விலகியுள்ளனர். ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். இதன் பொருள், மற்றவர்கள் எல்லாம் உத்தமர்கள் என்பது அல்ல. அவர்களில் பலர் இன்னமும் சிக்கவில்லை என்பதுதான்.

ஊழல் குறித்த மன்மோகன் சிங் அரசின் கண்ணோட்டம் என்ன? போபர்ஸ் ஊழலில் சிக்கிய இத்தாலி தொழிலதிபர் குவாத்ரோச்சியை தப்பவிட்டது இவரது அரசுதான். அவரை துன் புறுத்தக்கூடாது என்று மனமிரங்கி கூறியவரும் சாட்சாத் மன்மோகன் சிங்தான்.

2ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்காமல் இருந்திருந்தால், போபர்ஸ் ஊழலை போல அதையும் ஆழக் குழிவெட்டி புதைத்திருப்பார்கள். காமன் வெல்த் விளையாட்டு போட்டி ஊழலில் கல்மாடியை காப்பாற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இயன்றவரை முயன்று, கடைசியில்தான் அவரை கைவிட்டது.

இப்போது அலைக்கற்றை ஊழலில் முத லாளிகள் சிலரும் சிக்கியுள்ள பின்னணியில் இவ்வாறு அவர்களை துன்புறுத்தினால் தொழில் முதலீடு குறையும் என்று ஆதங்கப்படுகிறார் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஆ.ராசா வானாலும், காமன்வெல்த் போட்டி ஊழலில் சிக் கிய கல்மாடியானாலும் பிரதமருக்குத் தெரிந்து தான் எல்லாம் நடந்தது என்று சாதிக்கின்றனர். ஆனால் பிரதமரோ இதுகுறித்து வாய்திறப்பதில்லை.

லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமர் பதவியையும் கொண்டுவருவது குறித்து மன் மோகன் சிங் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கருத்தை வெளியிடுகிறார். லோக்பால் மசோதா விசயத்தில் முடிந்தவரை காலதாமதப்படுத்தி, அதை நீர்த்துப்போகச் செய்யும் உத்தியையே இவரது அரசு பின்பற்றி வருகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக இவரது சகா சிதம்பரத்தை சிக்கவைக்கும் வகையில் மற் றொரு சகாவான பிரணாப் முகர்ஜி எழுதிய கடி தம் வெளியானது. ஆனால் இருவரையும் அழைத்து சமரசம் செய்து, விசயத்தை வெளியில் வராமல் பார்த்துக் கொண்டவர்தான் இவர். இப்போது வெளிநாடு பயணங்களின்போது பிரணாப் முகர் ஜியும், சிதம்பரமும் தனது பொறுப்புக்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று இவர் கூறியுள்ளார்.


கருவாட்டுப்பானைக்கு பூனையை காவல் வைத்த கதைதான் இது. இந்த லட்சணத்தில் ஊழலை ஒழிக்க நேரம் வந்துவிட்டது என்று இவர் கூறுவது நகைக்கத்தக்கதன்றி வேறல்ல.

நன்றி :தலையங்கம் தீக்கதிர்

கருத்துகள் இல்லை: