ஞாயிறு, 30 அக்டோபர், 2011

விவசாயத்தின் வேர்களை அழிக்கும் அரசு!




விவசாயிகள் அதிக அளவு பயன்படுத்தும் பொட்டாஷ் உரத்தின் விலை கடந்த 6 மாதங்களாக கடு மையாக அதிகரித்து வருகிறது. “வல்லான் வகுத் ததே வாய்க்கால்” என்பது போல் உர நிறுவனங்கள் வைத்ததே விலையாக இருக்கிறது. நாள் தோறும் உரத்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது, என்பதுதான் இன்றைய விவசாயி களின் வாழ்நிலையாக நீடிக்கிறது. இதில் மென் மேலும் உர விலை உயர்வு என்றால் விவசாயம் என்னவாகும்? விவசாயிகளின் நிலை என்ன வாகும்? என்பதை பற்றியெல்லாம் மத்திய அரசு யோசித்து பார்க்கக் கூட தயாராக இல்லை. அதற்கு மாறாக, மிகப்பெரிய உர நிறுவனங்களின் லாபம் மட்டும் எந்த விதத்திலும் குறைந்திடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு ஒதுங்கி நிற்கிறது. அதே போன்று தற்போது உரத்தின் விலையையும் உர நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இதன் விளைவு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 50 கிலோ பொட்டாஷின் விலை ரூ.232 ஆக இருந்தது. ஆனால் இன்று அதே 50 கிலோ பொட் டாஷின் விலை ரூ.656 என விலை உயர்வு விண் ணில் றெக்கை கட்டிப் பறக்கிறது.

உரத்தை தயாரிக்கும் உர நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு தாங் களே விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருக் கும் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருளுக்கு விலையை தீர்மானிக்க முடியாது. இது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? அதுமட்டுமல்ல, உரவிலை எவ்வளவு கூடினாலும், விளை பொருட்களின் உற்பத்திச் செலவு எவ்வளவு கூடினாலும் அரசு நிர்ணயிக்கும் விலைக்கோ அல்லது மொத்த வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கோதான் விவசாய உற்பத்திப் பொருட்களை விற்றாக வேண்டும். இதுதான் இன்றும் எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது. இதனால் காலம் காலமாக விவசாயம் செய்து வந்த பலரும் கட்டு படியாகாத விவசாயத்தை விட்டு எட்டி நிற்கின் றனர். மாற்றுத் தொழிலை தேடி நகர்ப்புறங் களுக்கு இடம்பெயர்ந்தும் வருகின்றனர்.

ஆனால் விவசாயிகளைப் பற்றியும் விவசா யத்தை பற்றியும் கவலை கொள்ள மத்திய காங்கி ரஸ், திமுக அரசு தயாராக இல்லை. இப்போது கூட உரிய காலத்தில் பொட்டாஷ் இறக்குமதி ஒப்பந்தத்தை புதுப்பித்திருந்தால் இந்த அளவு விலை உயர்வு ஏற்பட்டிருக்காது. 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் புதுப்பிக்க வேண்டிய பொட்டாஷ் இறக்குமதி ஒப்பந்தம் இன்றுவரை புதுப்பிக்கப் படவில்லை. மாற்று ஏற்பாடும் செய்யவில்லை. திமுகவை சேர்ந்த மு.க.அழகிரியே மத்தியில் உரத்துறை அமைச்சராக இருக்கிறார். விவசாயி களின் மனக்குமுறலுக்கும் வேதனைக்கும் காங் கிரசுடன் சேர்ந்து திமுகவும் பொறுப்பேற்க வேண்டும்.

இனியாவது உரவிலையை தீர்மானிக்கும் பொறுப்பை மீண்டும் அரசே ஏற்க வேண்டும். விவசாய இடுபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, விளைபொருட்களுக்கு நியாய மான விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். விவசாயிகளை பாதுகாப்பதாக வாய்ப்பந்தல் போடுவதால் மட்டும் பயன்ஏற்படாது.

நன்றி :தலையங்கம் தீக்கதிர்

1 கருத்து:

வவ்வால் சொன்னது…

//இதன் விளைவு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 50 கிலோ பொட்டாஷின் விலை ரூ.232 ஆக இருந்தது. ஆனால் இன்று அதே 50 கிலோ பொட் டாஷின் விலை ரூ.656 என விலை உயர்வு விண் ணில் றெக்கை கட்டிப் பறக்கிறது.//

இந்த விலை உயர்வு தற்போது கஷ்டமா இருக்கலாம், ஆனால் இப்படியே விலை ஏறிக்கிடே போகணும் அப்போ தான் நம்ம மக்கள் வாங்காம புறக்கணிப்பாங்க. இந்த செயற்கை உரம் போடுவதால் மண்வளம் தான் கெடுகிறது, மீண்டும் இயற்கையா தொழு உரம், கிடை அடித்தல், பசுந்தாள் உரம், உயிர் உரத்துக்கு விவசாயிகள் மாறனும், அப்போ தான் எதிர்காலத்துக்கு நல்லது.

நாம எவ்வளவு தான் கரடியா கத்தினாலும் கேட்காத மக்கள் இப்போவாது மாறுறாங்களாப்பார்ப்போம்.

முதலில் விவசாயிகளுக்கான மானியத்தை நேரடியா அவங்களுக்கு கொடுக்கணும், உர ஆலைகளுக்கே மானிய தொகை போகுது.