வெள்ளி, 11 நவம்பர், 2011

“தேவதைக்கதையை உண்மையாக்கும் கம்யூனிஸ்டுகள்”
உலகின் முதல் புரட்சி நடைபெற்று 94 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ரஷ்யக் கம்யூனிஸ்டுகள் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். தலைநகர் மாஸ்கோவில் உள்ள வெர்ஸ்க்யா சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். பெரும்பாலானவர்கள் கைகளில் செங்கொடிகளை ஏந்தியிருந்ததால் சாலை முழுவதும் செம்மயமாகக் காட்சியளித்தது. இந்த ஊர்வலத்திற்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கென்னடி ஜூகானோவ் தலைமை வகித்தார். நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்றும், ஒவ்வொரு ரஷ்யருக்கும் அந்த வெற்றியால் பலன் கிடைக்கும் என்றும் அவர் ஊர்வலத்தில் பேசும்போது குறிப்பிட்டார். சிவப்பு அமைச்சரவையில் பங்கேற்கப்போகும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெயர்களையும் அவர் பட்டியலிட்டார்.

புரட்சியைக் கொண்டாடும் வகையில் வெர்ஸ்க்யா சாலையில் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக ஊர்வலம் நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் 3 முதல் 5 ஆயிரம் பேர் வரை இந்த ஊர்வலத்தில் பங்கேற்பது வழக்கம். ஆனால் இம்முறை ஊர்வலத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் தாண்டிச் சென்றுவிட்டது. பொதுவாக, இந்த ஊர்வலத்தில் வயதானவர்களே கடந்த ஆண்டுகளில் பங்கேற்று வந்தனர். ஆனால் தற்போது நடந்த ஊர்வலத்தில் கம்யூனிஸ்டு இளைஞர் யூனியனில் உறுப்பினர்களாக உள்ள இளைஞர்கள் ஏராளமான அளவில் திரண்டிருந்தார்கள்.

15 ரூபிளுக்கு பெரிய அளவிலான ஜோசப் ஸ்டாலின் படம் கிடைத்தது. ஊர்வலத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறையினர் தடுக்க முயற்சித்தனர்.

வழக்கத்திற்கு மாறாக, ஆயிரக்கணக்கான மக்கள் அதிகமான எண்ணிக்கையில் வந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த கடைகளின் சொந்தக்காரர்கள் கடைகளை இழுத்துமூடிவிட்டு, கூட்டத்தைப் பார்ப்பதற்காக வந்துவிட்டனர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் சிலர், தேவதைக் கதையை உண்மையானதாக மாற்றவே நாங்கள் பிறந்துள்ளோம் என்று முழக்கமிட்டனர்.

ஊர்வலத்தின் நிறைவில் பேசிய கென்னடி ஜூகானோவ், இம்முறை வெற்றி நமக்குதான். அதிகாரத்தைக் கைப்பற்றியபிறகு என்ன செய்வோம் என்பதை நாங்கள் செய்து காட்டுவோம்.

சர்வதேச அளவில் முதலாளித்துவம் அழிவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதனால் கம்யூனிஸ்டுகள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள். புதுப்பிக்கப்பட்ட சோசலிசத்தின் காலம் துவங்குகிறது. புடின் மற்றும் மெத்வதேவ் ஆகிய பிரபுக்கள் வசம் இருக்கும் கோடானு கோடி ரூபிள்களை கம்யூனிஸ்ட் கட்சி நாட்டு மக்கள் வசம் ஒப்படைக்கும். இந்தப் பணம் நாட்டில் தொழில் துவங்குவதற்கும், விவசாயத்திற்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் செலவிடப்படும் என்று குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு ரஷ்ய ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிற்கவிருக்கும் கென்னடி ஜூகானோவ் மற்றும் தற்போது பிரதமராயிருக்கும் விளாடிமிர் புடினுக்கும் இடையில்தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகளை போட்டியிலிருந்து ஒதுக்குவதற்கான ஊடகங்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளதோடு, தற்சமயம் அந்த செல்வாக்கு அதிகரித்துள்ளதும் அதற்குக்காரணமாக உள்ளது.

ரஷ்ய ஆட்சியாளர் அச்சம் முன்னாள் சோவியத் நாட்டில் அன்றைய ரஷ்ய ஜனாதிபதி போரிஸ் எல்ட்சின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்குத் தற்போது இருபது ஆண்டுகள் ஆகின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில் ‘அகில ரஷ்ய பொதுமக்கள் கருத்துக் கணிப்பு மையம்’ ஒன்று மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்தக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 47 சதவிகிதம் பேர் எல்ட்சினின் தடைவிதிப்புக்கு எதிராக வாக்களித்தனர். தடையை ஆதரித்து வாக்களித்தவர்கள் 26 சதவிகிதம் பேர்தான். சோவியத் நாடு பிளவுபட்ட பிறகு 1993ல் தான் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. கே.பி.ஆர்.எஃப் என்று சுருக்கமாய்ப் பெயரிட்டு அழைக்கப்படும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 35 சதவிகிதத்திற்கு அதிகமான மக்கள் ஆதரவு உள்ளது.

‘டூமா’ என்று சொல்லப்படும் ரஷ்ய நாடாளுமன்றத்திற்கு அடுத்த மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பத்திரிகையின் 84 ஆயிரம் பிரதிகளை போலீஸ்அக்கிரமமாகப் பறிமுதல் செய்தது. கட்சியின் தேர்தல் பணியைத் துவக்குவதற்காக ஒரு ட்ரக்கில் பத்திரிகைக் கட்டுகள் கொண்டுபோகப்பட்ட போதுதான் அரசாங்கத்தின் கட்டளைப்படி போலீஸ் அதை மடக்கித் தடுத்துப் பறிமுதல் செய்தது. இவ்வாறிருக்க, நியாயமான தேர்தல் நடைபெற்றால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் முன்னேற்றம் கிடைக்குமென்று நிபுணர்கள் கருதுவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரதமர் புடின்-ஜனாதிபதி மெத்வதேவ் அரசின் சுயநல ஆட்சிக்கும் ஊழலுக்கும் எதிராக எழுந்துள்ள மக்களின் கோபம், தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றி வாய்ப்பைக் குறைத்து விடும் என்பதால் தான் அரசு அதிகாரிகள் இரண்டாவது பெரிய கட்சியாகிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர். மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று முயற்சி செய்கிற விளாடிமிர் புடினுக்கு அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: