திங்கள், 21 ஜனவரி, 2013

லஞ்சம் கொடு, கொள்ளை அடி, நாட்டை அடிமைப்படுத்து


இந்திய நிறுவனமாகிய ஜிஎம்ஆர் வசமிருந்த, 500 மில்லியன் டாலர் மதிப்புடைய மாலே சர்வதேச விமான நிலையத்தை, மாலத்தீவு அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டுவிட்டது. டிசம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவுக்குள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வெளியேறுங்கள் என்று மாலத்தீவு அரசு நவம்பர் 27-ஆம் தேதி  சொன்னது. அதேபோல செய்தும்விட்டது.
 ஜிஎம்ஆர் நிறுவனம் மாலத்தீவு அரசுடன் 2010-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி, மாலே சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, பராமரித்து 25 ஆண்டுகளுக்கு அதில் கிடைக்கும் வருவாயைப் பெறலாம். ஆனால் இந்த ஒப்பந்தம்,  மாலத்தீவு அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் சாதகமாக இல்லை என்பதால், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது மாலத்தீவு அரசு.
 "இந்தியாவில் இதே ஜிஎம்ஆர் நிர்வகிக்கும் புதுதில்லி சர்வதேச விமான நிலையத்தின் வருவாயில் இந்திய அரசு 45 விழுக்காடு பெறுகிறது. ஆனால், மாலத்தீவு அரசுக்கு 1 விழுக்காடு மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு பயணியிடமும் வசூலிக்கப்படும் விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் 25 டாலர் மிக அதிகம். மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. நிகழாண்டில் மட்டுமே இக்கட்டணம் மூலம் 7 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. எந்த வகையிலும் மாலத்தீவு அரசுக்குப் பயன் கிடைக்காவிட்டால் எதற்காக தனியார்வசம் எங்கள் விமான நிலையம் இருக்க வேண்டும்?' என்கின்றது மாலத்தீவு அரசு.
 மாலத்தீவு மிகச் சிறிய நாடு. ஆனால், அவர்களால் ஒரு இந்திய நிறுவனத்தை ஒரு வார காலத்தில் வெளியேற்ற முடிகிறது. இதை இந்தியாவில் நம்மால் செய்திருக்க முடியுமா?
 இந்தியாவில் நாற்கரச் சாலைகளை அமைத்துள்ள தனியார் நிறுவனங்கள் பல இடங்களில் டோல்கேட் அமைத்துக் கட்டணம் வசூலிக்கின்றன. எந்தெந்தப் பகுதிகளில், இவர்கள் செலவழித்த முதலீட்டையும், அதற்குரிய நியாயமான லாபத்தையும் மீட்டெடுத்தனர் என்று கணக்கிட்டு, நாற்கரச் சாலைகளை அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள முடியும். ""கட்டு - உரிமைகொள் - செயல்படுத்து - ஒப்படை'' (பி.ஓ.ஓ.டி) என்ற அடிப்படையில்தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் ஒப்பந்தப்படி முறையான சாலைப் பராமரிப்புகூடக் கிடையாது. ஆனாலும் மக்கள் நலன் கருதி இவர்களது ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்திய அரசினால் முடியுமா?
 பிரான்ஸ் மிகச் சிறிய நாடு. அந்த நாட்டில் தேனிரும்பு தொழிற்கூடம் வைத்துள்ள இந்திய வம்சாவளித் தொழிலதிபர் மிட்டல், பிரெஞ்சு அரசுக்கு உறுதி கூறியபடி சில நூறு பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கவில்லை என்பதற்காகவும், தொழிற்சாலை விதிமுறைகளை மீறியதற்காகவும் ""ஒழுங்காக இருந்தால் இரு, இல்லையேல் வெளியேறு'' என்று கூறிவிட்டது பிரெஞ்சு அரசு. இப்போது அந்நாட்டுடன் மிட்டல்  சமாதானம் பேசி, ""உடன்படிக்கையில் உள்ளபடி நடந்து கொள்கிறேன்'' என்று உறுதி கூறியிருக்கிறார்.
 ஆனால், உலகமயம், தாராளமயமாக்கல் என்கிற பெயரில் இந்தியாவில் இன்று நடப்பதென்ன? வோடஃபோன் நிறுவனம் வெளிநாட்டில் பங்குகளை விற்றதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பை நம்மால் பெற முடியவில்லை. போபால் விஷவாயு வழக்கில் இன்றளவும் கார்பைடு நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் பெற்றுத்தர முடியவில்லை. அந்தத் தொழிற்சாலையில் இருக்கும் விஷக்கழிவான சயனைடை அப்புறப்படுத்த முடியவில்லை. இந்திய மக்கள் பணம் ரூ.25 கோடி செலவிட்டு சயனைடு குப்பையை அள்ள நினைத்தாலும் முடியவில்லை.
 இந்நிலையில் அன்னிய நேரடி முதலீட்டை சில்லறை வணிகம் உள்பட அனைத்துத் துறைகளிலும் அனுமதித்துவிட்டோம். குறிப்பாக, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவது சில்லறை வணிகத்தைவிட மிக ஆபத்தானது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தும் அரசு கவலைப்படவில்லை.
 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தில் வெற்றி பெறுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன்வசப்படுத்த வால்மார்ட் நிறுவனம் ரூ.125 கோடி செலவிட்டுள்ளதாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இப்போது குரல் எழுப்புகின்றன. இது பொய் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே -பல "தியாகங்கள்' செய்திருக்கும்போது, இந்தியாவில் மிகப்பெரும் சந்தையை வளைத்துக் கொழிக்கப்போகும் வால்மார்ட், தனது சில்லறை வணிகத்துக்காகச் சில்லறையைச் சிதறவிடாதா என்ன!
 உள்ளே நுழைவதற்கே லஞ்சம் கொடுத்து வருவார்கள் என்றால், இவர்கள் மத்திய அரசு சொல்லும் எந்த நிபந்தனைகளைப் பின்பற்றுவார்கள், எந்த வேலைவாய்ப்புகளை உறுதி செய்வார்கள்? விவசாயிகளும் நுகர்வோரும் பயன்பெறுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது மாநில அரசின் விருப்பம் என்கிறார்கள். இந்த நிறுவனங்கள், முதலீட்டுக்காக அனுமதிக்கப்பட்ட விதிகளை மீறின அல்லது கடைப்பிடிக்கவில்லை என்று பொறுப்பாக்குவது யாருடைய வேலை? மத்திய அரசினுடையதா? மாநில அரசினுடையதா? 30% உள்நாட்டு கொள்முதல் கடப்பாட்டை இந்திய அளவில் இந்நிறுவனம் கணக்கு காட்டுமா? அல்லது மாநில அளவிலா? எதுவுமே தெளிவில்லை. ஆனால், கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன. இப்போதே 3 மில்லியன் டாலர் இறக்கியுள்ளது வால்மார்ட் என்கிறார்கள்.
 அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்குள் வருவதிலோ, பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே செயல்படுவதிலோ தவறில்லை. அரசு, மக்கள் நலனில் அக்கறையுடன் கண்காணிப்பு அமைப்புகளை முறையாகச் செயல்பட அனுமதிக்குமானால், தவறுகள் தட்டிக்கேட்கப்பட்டு அவ்வப்போது தடுக்கப்படுமானால், அது நிச்சயமாக நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாலே போன்ற குட்டித் தீவுக்கு இருக்கும் தேசநலனிலான அக்கறையும் துணிவும் சர்வ வல்லமை படைத்த இந்திய அரசுக்கு இல்லாமல் இருக்கிறதே, அதுதான் நமது பிரச்னை.
 பொருளாதார தாராளமயம் என்பது லஞ்சமும், ஊழலும், முறைகேடுகளும் தாராளமயமாக்கப்படுவதன் மறுபெயராகி விட்டதுதான் நமது பிரச்னை. இதை யார் யாரிடம் சொல்லித் திருத்துவது?

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Extremely intriguing topic , appreciate it for putting up.


deratizare sobolani
dezinsectie dezinfectie deratizare