உலகிலேயே தற்கொலைகள் அதிகம் நடக்கிற நாடு இந்தியா என்கிற செய்தி அதிர்ச்சியூட்டுகிறது. இப்போதேல்லாம் அதைப்பற்றி பேசாத ஆள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .அதிலும் தமிழகம் இந்தியாவில் நாலாவது இடத்தில் இருக்கிறது என்பதும் தலைநகர் சென்னை தற்கொலையின் தலைநகராக இருக்கிறது. பகுதி அளவில் மக்கள் தொகையை கணக்கீடும் போது புதுச்சேரி முதல் இடத்தில் இருப்பது என்பதும் மிகவும் வேதனையூட்டும் தகவலாகும். இந்தியா முழுவதும் ஒரு லட்சம் பேரில் 10.5 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் தமிழகத்தில் 18.9 பேராக இருக்கிறது. அதிலும் சென்னையில் 37.8 ஆக இருக்கிறது. புதுவை கணக்கு இன்னும் கொடுமை 62.2 பேராக ஆக இருக்கிறது.
இவற்றை வெறும் புள்ளி விவரம் என்று ஒதுக்கிவிட முடியாது.தினசரி 16 இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இளைஞர்களின் தற்கொலையில் பெரும்பாலும் தேர்வு பயம், பரீட்சை தோல்வி, காதல் தோல்வி இவையே பிரதானமாக முன்நிற்கிறது. அதே சமயம் 30 வயது முதல் 44 வயது வரையான வயதினரின் தற்கொலை விகிதம் அதிகரித்திருக்கிறது. விவசாயிகள் தற்கொலை என்பது இன்று இந்தியாவில் இருக்கிற ஒரு முக்கிய பிரச்சனை. இதன் அடிப்படையாக இருப்பது மத்திய - மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கை, விவசாயத்தை புறக்கணிப்பதில் அடங்கியிருக்கிறது. இதுகுறித்து ஏராளமான செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆனால் தற்போது, வந்துள்ள செய்திகளில் நகரங்களில் நடக்கும் தற்கொலைகளுக்கு என்ன காரணம் என ஆராய்ந்தால் அங்கேயும் இதே பொருளாதாரக் கொள்கைகள் மூக்கை நீட்டுவதுதான் வியப்பான ஒற்றுமை.
உளவியல் நிபுணர் டாக்டர் லட்சுமி விஜய குமார் ஒரு வார ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார், "வேகமாக மாறி வரும் பொருளாதாரச் சூழல்தான் தற்கொலைகளுக்கு காரணம். வேலையின்மை, வேலையில் மிகப்பெரிய நிலையை அடைய முடியாமை. இந்த இரண்டும் தற்கொலைக்கான மிகப்பெரிய காரணங்களாகிக் கொண்டிருக்கின்றன." இந்த வரிகள் சமூகத்தின் உண்மையை சுட்டிக்காட்டுகிறது. வேலையின்மை என்பது மிகவும் கொடூரமாக மக்களை வேட்டையாடத் துவங்கியிருப்பதை இது காட்டுகிறது.
அடுத்து ஊடகங்களும், நவீனப் பிரச்சாரகர்களும், சில படிப்புகளையும் பதவிகளையும் மட்டுமே கவுரவத்திற்குரியதாக சித்தரிப்பதால் அதன் மீது ஒரு மயக்கமும் வெறியும் ஏற்பட்டு எல்லோரும் அதை நோக்கி ஓடுகிறார்கள். விளைவு-கடும் போட்டியால் தாக்குப் பிடிக்க முடியாமல் பலர் இடறி விழுகின்றனர். ஏற்கனவே வாழ்க்கையை அதன் எதார்த்தமான கசப்புகளோடும் இனிப்புகளோடும் கற்றுக் கொடுக்காமல் வெறும் கனவுகளில் இளைஞர்களை மிதக்கச் செய்வதால் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் தாங்க முடியாமல் தற்கொலைக்குச் செல்கின்றனர்.
போட்டி நிறைந்த இன்றைய சமூகச் சூழலும், பணத்தை மையப்படுத்திய வாழ்க்கை மதிப்பீடுகளும் மனிதர்களிடையே மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கி விடுகிறது.
அதிலும் புதிய பொருளாதாரக் கொள்கை, ஏழை, பணக்காரர் இடைவெளியை மேலும் ஆழமாக்குகிறது. இதில் அந்த பணக்காரத் தீவில் சேர வேண்டும் என்கிற வெறியும் உந்துதலும் ஊட்டப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் நவீன ஆடம்பர வசதிகளை நுகர்வதுதான் வாழ்க்கையின் லட்சியம். அதைத் தவிர லட்சியங்களுக்காக வாழ்வது என்பது ஏமாளித்தனமானது என்பது போன்ற மனோ நிலை ஊடகங்களாலும், புதிய பொருளாதாரக் கொள்கை ஆதரவாளர்களாலும் பரப்பப்படுகி றது. இதனுடைய சமூக விளைவுதான் தற்கொலை என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.தற்கொலை என்பது தனி நபர் முடிவுதான். அது ஒரு உளவியல் பிரச்சனைதான். ஆயினும் அதை வெறுமே அந்த வட்டத்திற்குள் நின்று மட்டும் அணுகித் தீர்வுகாண முடியாது.
தனி நபர் மனிதர் என்பவர் தனித் தீவல்ல. சமூகத்தின் அங்கம். அவருக்கு நம்பிக்கையையும் போராட்ட குணத்தையும் வளர்க்க வேண்டிய சமூகம் அவநம்பிக்கையையும் விரக்தியையும் விதைக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எனவே இந்த சமூகச் சூழலை மாற்றுவதற்கு ஒரு கடுமையான போராட்டம் தேவை. தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்பது ஒரு தற்கொலைப் பாதை என்பதை எல்லா கோணங்களும் நிரூபிக் கிறது. இந்த தற்கொலை விவாதமும் அதற்கு ஒரு சாட்சி.
1 கருத்து:
//தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்பது ஒரு தற்கொலைப் பாதை என்பதை எல்லா கோணங்களும் நிரூபிக் கிறது. இந்த தற்கொலை விவாதமும் அதற்கு ஒரு சாட்சி//
ஹூம்! ஜீரணிக்க முடியாத உண்மைதான்!
கருத்துரையிடுக