செவ்வாய், 25 நவம்பர், 2008

உலைக்களங்களில் இளம் ஜூவாலைகள்

இளைஞர் எழுச்சிகளும் இயக்கங்களும்-2
ஏ.பாக்கியம்

இளமை என்பது மனித குலத்தின் நிரந்தரப் பருவம். இளைஞர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள், இவர்களது பிரச்சனை என்ன? தேவைகள் என்ன? என்று இந்த சமூகம் சிந்திக்கத் துவங்கிய காலம் எது? இதற்கெல்லாம் விடைதேடினால் மாற்றங்களின் மகுடமாக இருந்த ஐரோப்பாவில் தான் கிடைக்கும். ஆம், 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் இளைஞர் அமைப்புகள் உருவானது ஆனால் அதற்கான அடித்தளங்கள் மேலும் ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்டது.

டவுண் அன்ட் கவுன் கலவரம்.

13ஆம் நூற்றாண்டுகளிலேயே இங்கிலாந்தில் கைவினைஞர்களும், வணிகர்களும், பட்டறைகளும் உருவாகத்தொடங்கின. தொழிற்புரட்சியின் துவக்கமும், முதலாளித்துவத்தின் தோற்றமும் ஒருசேர வளரஆரம்பித்தன. இதன் தொடர்ச்சியாக கல்விநிலையங்களும், சிறிய நகரங்களும், தோன்றின. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களும், அதைச்சுற்றி சிறிய நகரங்களும் உருவாகியது. 1354ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மாணவர்கள் அல்லாத நகரமக்களுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. இந்த மோதலில் உயிர்ச்சேதம் உட்பட பல சேதாரம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அங்கி அணிந்திருந்ததாலும். மற்றவர்கள் நகரத்தில் இருந்ததாலும் இந்தக் கலகத்தை “டவுண் அன்ட் கவுன் கலவரம்” என்று அழைக்கின்றனர்.

18ஆம் நூற்றாண்டில்

18ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் பல அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்திய காலம். இங்கிலாந்தில் நடைபெற்ற தொழிற்புரட்சி முதலாளித்துவத்தை வெடித்துக் கிளம்பச்செய்தது மட்டுமல்ல நிலை பெறவும் செய்தது. சிறிய கைவினைத்தொழில் வளர்ந்தது, வணிகம் பலமடங்கு பெருகியது, பட்டறைகள் பெரும்தொழிற்கூடங்களாக உருவெடுத்தன. கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி குடியேற்றங்கள் நடைபெற்றன. கிராம கூட்டுக்குடும்பங்கள் சிதையத் தொடங்கின. நகரங்கள் பெருகியது, குடிசைகளும் பெருகியது, 1750இல் ஐரோப்பாவின் மக்கள் தொகை 12.5 கோடியிலிருந்து 1800இல் 20 கோடியாக பெருகியது. 1700இல் சராசரி வாழ்நாள் 30முதல்40வரை இருந்தது 1800இல் 55 ஆக உயர்ந்தது.

தொழில் மயமும், நகர்மயமும் தீவிரமான சூழலில் மக்கள்தொகை அதிகரித்தது. இதனால் வேலையின்மை பெருகியது. அதேகாலத்தில் பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. ஜெர்மனி, இத்தாலி,இங்கிலாந்து ஐயர்லாந்து, பிரான்ஸ் என ஐரோப்பா முழுவதும் இந்த மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. வேலையற்ற இளைஞர்கள் பலஇடங்களில் கலவரங்களில் ஈடுபட்டனர். தேவைகளை பூர்த்தி செய்யமுடியாத மாணவர்கள் நிர்வாகத்தை எதிர்த்த கலவரத்திலும், காவலர்களுடன் மோதவும் ஆரம்பித்தனர். ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக உருவாகி பாடத்திட்டங்களில் மாற்றங்களைக் கோரினர் .மறுபுறத்தில் அரசியல் களத்தில் மிதவாதிகள், முற்போக்காளர்கள், புரட்சியாளர்கள் என எதிரும் புதிருமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. லாக், மாண்டஸ்க்கியூ ,ரூசோ போன்ற அறிஞர்கள் பழமைவாதிகளையும், அதிகாரத்திலிருப்பவர்களையும் கடுமையாகச் சாடினர். இளைஞர்கள் அரசியலிலும், சமூகத்திலும் மாற்றத்தைத் தேடினர்.

அமைப்பாகவோ, ஒரேநேரத்திலோ இது நடைபெறாவிட்டாலும்.பல நேரங்களில் பலதிசைகளில் இப்போராட்டம் வெடித்தது. எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளில் இளைஞர்களைப்பற்றி படைக்கத் தொடங்கினர். 1774இல் கெதே எழுதிய “இளம் வெர்தரின் துன்பங்கள்”என்ற நாவலும், சில்லர் எழுதிய “கொள்ளைக்காரர்கள்”(1781) மற்றும் “வில்லியம் டெல்” என்ற நாவல்களும் இளைஞர்களின் தேவைகளையும், விருப்பங்களையும், அபிலாசைகள் பற்றி எழுச்சி கொள்ளும் வகையில் எழுதப்பட்டு வெளிவந்தன. எனவே,இளைஞர்கள் அரசியல் பிற்போக்கு வாதத்திற்கு எதிராகவும், பழமையான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்தது மட்டுமல்ல, கலைத்துறையிலும் இசைத்துறையிலும் மாற்றத்தைக்கோரி களத்தில் இறங்கினர். 1756 1791இல் வாழ்ந்த இளைஞன் மொசார்ட் இசையை அரண்மனைக்குள்ளிருந்தும், தேவாலயங்களிலிருந்தும் தெருவிற்கு கொண்டு வந்தான். மதச்சார்பற்ற இசையை பிரபலப்படுத்தினான். இளைஞர்களின் முதல் நட்சத்திர நாயகனாக வலம் வந்தான்.

1776இல் அமெரிக்காவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டமும், பிரான்ஸ் நாட்டில் 1791இல் பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமை பிரகடனமும், அரசியல் வானில் மின்னலையும் இடிமுழக்கத்தையும் ஏற்படுத்தியது. 1789இல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியில் இடதுசாரி சிந்தனைக்கொண்ட ஜேக்கோபியன்கள் பிரிவில் கணிசமான அளவில் இளைஞர்கள் இருந்தனர். எனவே 18ஆம் நூற்றாண்டுகள் முழுவதும் ஐரோப்பா நெடுகிலும் இளைஞர்களும், மாணவர்களும் பொருளாரதம் மட்டுமல்ல அரசியல்,கல்வி மற்றும் கலை, இசை என பல்துறைகளிலும் மாற்றத்தைக்கோரி கொந்தளித்துக் கொண்டிருந்தனர். இந்தப் பின்னணியில் இந்தக் கோபக்கனல் 19ஆம் நூற்றாண்டில் புதிய வடிவில் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது,

19ஆம் நூற்றாண்டில் அமைப்புகளை நோக்கி...

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் 1815இல் வாட்டர்லூ என்ற இடத்தில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டது ஐரோப்பாவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. யுத்தமுடிவில் ஏற்பட்ட வியன்னா ஒப்பந்தத்தால் ஐரோப்பா மீண்டும் கூறுபோடப்பட்டது. அன்றைய முதலாளித்துவத்தின் தேவையான தேசியவாதம் மேலோங்கியது. தனிமனித உரிமை, நாட்டிற்கு விசுவாசமாக இருத்தல்,பொது மொழி, பண்பாடு, பாரம்பரியம், தேசியஅரசு ஆகியவற்றிற்காகப் போராடும் சக்திகள் வீறுகொண்டு எழுந்தன. மறுபுறத்தில் தொழில்மயத் தீமைகள், அரசபரம்பரை ஊழல்கள், பட்டினிச்சாவுகள், வேலையின்மைகள் காரணமாக சைமன், பியூரியர், ஓவன் போன்றவர்களின் கற்பனாவாத சோஷலிச கருத்துக்கள் வேகமாகப் பரவின. இந்தச்சூழலில் இளைஞர் அமைப்புகள் இருவடிவங்களில் வெளிப்பட்டன. ஒன்று, உழைக்கும் வர்க்க இளைஞர்கள், மற்றொன்று உயர்நடுத்தரவர்க்க மாணவர்கள் ஆவார்கள்.

இருவேறு “இளம் ஜெர்மானி”.

1815இல் வியன்னா ஒப்பந்தத்தில் ஜெர்மனி கூறு போடப்பட்டதற்காக தாராளவாத இளைஞர்களும், இளம் ஹெகலியவாதிகளும் தங்களது முன்னோர்களையும் தலைமையேற்றவர்களையும் கடுமையாகச் சாடினர், இதேகாலத்தில் 1815இல் மாணவர் சங்கம்) என்ற அமைப்பை ஜெர்மனியின் ஜினா பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கினர். இதுதான் வரலாற்றில் முதல்மாணவர் அமைப்பாக இருக்கிறது. இந்த அமைப்பு வேகமான முறையில் எட்டுக்கும் மேற்பட்ட ஜெர்மானிய நகரங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பரவியது, இவ்வமைப்பினர் முற்போக்கான, ஜனநாயகத்திற்காகவும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர். “எங்களது சுதந்திரத்தை யாரும் எடுத்துக் கொள்ள உரிமையில்லை, அப்படிசெய்பவர் களுக்கு எதிராக நாங்கள் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் நியாயமானதே” என்று பிரகடனப்படுத்தினர்.

அந்நாட்டு அரசு “பல்கலைக்கழகங்கள் ராஜதுரோக நடவடிக்கைகளின் ஊற்றுக்கண்” என்று அறிவித்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. வகுப்பறைக்குள் ஒற்றர்களை உட்காரத்தது, மாணவர்களின் விபரங்களை சேகரித்தது. ஆசிரியர்களிடம் பாடப்புத்தகத்தின் பெயர்பட்டியலை அளித்திட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.

 அடக்குமுறைகளும் அடக்குமுறைகளுக்கு எதிரானப் போராட்டமும் தீவிரமடைந்தது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடிகொடுக்க மாணவர்கள் வார்ட் பர்க் என்ற இடத்தில் நடைபெறும் விழாவை தேர்ந்தெடுத்தனர், ஆண்டுதோறும் இவ்விடத்தில் நடைபெறும் இவ்விழா புதுமையை வரவேற்கும் விழாவாகும். 1817ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவிற்கு மாணவர் சங்கம் என்றபெயரில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து மாணவர்களும் இளைஞர்களும் கூடினர்.

அங்கு நெப்போலியனின் சட்டத்தையும், ஹேலரின் மீட்டமைப்பு என்ற நாவலையும், கோட்சுபுவின் ஜெர்மனி வரலாறு என்ற புத்தகத்தையும் தீயிட்டுக் கொளுத்தினர். இந்த வார்ட்பர்க் விழா பிரெஞ்சுநாட்டு ஜேக்கோபியன் அராஜகம் போன்றது என்று அரசு குற்றம் சாட்டி இளைஞர்களை வேட்டையாடியது. போராட்டத் தின் தொடர்ச்சியாக 1819இல் மான்ஹேம் என்ற இடத்தில் இலக்கிய வாரஇதழ் ஆசிரியரும் அரசு ஆதரவாளருமான கோட்சுபு என்பவரை காரல் சான்ட் என்ற மாணவன் படுகொலைசெய்தான். இதனால் அனைத்து முற்போக்கு இளைஞர் அமைப்புகளும், மாணவர்சங்கங்களும் உடனடியாக சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டது. காரல் சான்ட் விசாரணை நடத்தப்பட்டு 1820ஆம் ஆண்டு அவனது தலை துண்டிக்கப்பட்டது,அமைப்பு ரீதியில் எழுந்த போராட்டத்தின் முதல் பலியாக காரல் சான்ட் வீழ்ந்தான்.

காரல் சான்ட் அவன் கோட்சுபுவை கொலை செய்ததைப் பற்றிக் கூறும்போது “எனது விருப்பத்தையும், புனிதத்தையும், உறுதியையும் அவன் நசுக்கினான்” என்று நியாயப்படுத்தினான். உலகம் சுத்தமான. சுதந்திரமான, தூய்மையான மாணவர்கள் ஒருபக்கமும்,ஊழல் நிறைந்த அரசு மறுபுறம் என இரண்டாக பிரிந்திருப்பதாக நினைத்தான். நான் சாவதாக இருந்தால் மெச்சத்தகுந்த உயரிய காரணத்திற்காக மட்டுமே சாவேன் என்றான். 1818இல் “விரைவான வெற்றி, இளமையில் மரணம்” என்று தனது விருப்பத்தை எழுதினான்,

காரல் சான்ட் தலைதுண்டாடப்பட்டதும், இவ்வியக்கத்திற்கு தலைமையேற்க ஜெர்மானியின் மற்றொரு நகரமான ஜிசன் நகரிலிருந்து காரல் ஃபாலன் என்ற இளைஞன் முன்வந்தான், இவன் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் தலைவனாகத் திகழ்ந்தான், எந்த வழியிலாவது நாம் நினைத்ததை முடிக்க வேண்டும் என்றால் நாம் “நிபந்தனையற்ற” குழுக்களாக மாற வேண்டும் என்றான், வாழ்வதும் சாவதும் பொதுநலத்திற்காக மட்டுமே என்று இளைஞர்களை அறைகூவி அழைத்தான், இவனது செயல்கண்டும். இளைஞர்களின் எழுச்சி கண்டும் இவனை 1821இல் அமெரிக்காவிற்கு நாடுகடத்திவிட்டனர். அன்றைய ஜெர்மானியில் மாணவர் சங்கம் மட்டுமல்ல அர்மீனிய மாணவர் அமைப்பும் இளம்தலை முறையினரிடம் செல்வாக்கு செலுத்தின.முன்னது முற்போக்கானதாகவும், பின்னது பழமைவாத கிறிஸ்துவ அமைப்பாகவும் செயல்பட்டது, இந்த அமைப்புகள் 1848 வரை செயல்பட்டன,

1830ஆம் ஆண்டுகளில் இளம் ஜெர்மானியர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் செயல்பட்டனர், இவர்கள் இலக்கிய படைப்புகளில் அதிகம் கவனம் செலுத்தினர். முடியாட்சியை எதிர்த்து எழுதினர். பத்திரிக்கை சுதந்திரம், மற்றும் வழிபாட்டு சுதந்திரத்தையும் வலியுறுத்திப் போராடினர். இதே காலத்தில் பெர்லின் பல்கலைக்கழகத்தில் இளம் ஹெகலியவாதிகள் உருவாகி வந்தனர், 1770 முதல் 1831. வரை வாழ்ந்த பிரடெரிக் ஹெகல் இங்கு விரிவுரையாளராக இருந்தார்.இவர் கருத்து முதல்வாத இயக்கவியலை விரிவாக்கம் செய்தார். இது இயக்கவியல் பொருள்முதல்வாதம் தோன்று வதற்கு அடிப்படையாக அமைந்தது, இவரைப் பின்பற்றியவர்கள் இளம் ஹெகலியவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். 22 வயதுள்ள காரல் மார்க்° உட்பட பலர் இவரைப் பின்பற்றினர் நாளடைவில் இதில் ஒருபகுதியினர் ஜெர்மனியில் முதலாளித்துவ சீர்திருத்த அவசியத்தை நிரூபிக்க மதத்துடன் இணைக்கவும் இயக்கவியலை பயன்படுத்தினர்.

மார்க்சும் எங்கல்சும் இதற்கு எதிராகப் போராடி இயக்கவியல் பொருள் முதல்வாதத்தை நிறுவினர். மார்க்ஸ் 26வது வயதில் “புனிதக் குடும்பம்” என்ற நூலையும், 27 வது வயதில் “ஜெர்மன்சித்தாந்தம் ” என்ற நூலையும் படைத்து தனது கருத்தை நிறுவினார்.38.க்கும் மேற்பட்ட பிரதேசங்களாக பிளவுபட்டு பலநாடுகளுடனும், சில தனியாகவும் இருந்த ஜெர்மனியில் இளைஞர்கள் ஒன்றுபட்ட நாட்டிற்காகவும், முதலாளித்துவ ஜனநாயகத்திற்காகவும் கலகம் செய்திருக்கிறார்கள், எழுச்சிபெற்றிருக்கிறார்கள், இயக்கங்களாக பரிணமித்திருக்கிறார்கள். இதேபோன்று இந்த இளம் ஜுவாலைகளின் எழுச்சிகள் ஐரோப்பா முழுவதும் ஏன் தென் அமெரிக்காவிலும்,ஆசியாவிலும் பற்றி எரிய ஆரம்பித்தது, அன்று இளம் ஐரோப்பா முழுவதும் அறியப்பட்ட இளைஞனாக இத்தாலி யின் மாசினி இருந்தான், அவனது கவிதையும், கோபக்கனல் நிறைந்த பேச்சாற்றலும் ஆயிரக் கணக்கான இளைஞர்களை ஆயுதங்களுடன் போர்க்களத்தில் இறக்கியது.

இளைஞர் எழுச்சிகளும் இயக்கங்களும்-1

கருத்துகள் இல்லை: