திங்கள், 1 டிசம்பர், 2008

உறுப்பினரா? தலையைத் துண்டியுங்கள்

இளைஞர் எழுச்சிகளும்-இயக்கங்களும்-3

ஏ.பாக்கியம்

உறுப்பினரா தலையைத் துண்டியுங்கள். ஆம் இப்படியொரு அரசாணையை ஆஸ்திரிய அரசு 1834இன் துவக்கத்தில் அறிவித்தது உறுப்பினரானாலே உயிர் பறிக்கும் அளவிற்கு ஆஸ்திரிய நாட்டின் அறியணையை ஆட்டம் காணச்செய்த அமைப்பு எது? வேறு எதுவாக இருக்க முடியும்? ஜோசப் மாசினியின் “இளம் இத்தாலி” என்ற இளைஞர் அமைப்புதான்.

இந்தியாவில் பரங்கியர்களை எதிர்த்து பாளையக்காரர்களும், சிற்றரசர்களும் போராடிக் கொண்டிருந்தபோது, போர்களும், போராட்டங்களும், கலகங்களும் ஐரோப்பாவின் ஒரு பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்தது. முதலாளித்துவத்தின் முக்கியத் தேவையான தேசங்களும், தேசிய அரசுகளும் அமைப்பதற்கான எழுச்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இப்போராட்டத்தின் இதயப்பகுதியாக இத்தாலி இருந்தது. ஜெர்மனி 39 பிரதேசங்களாக பிளவுபட்டிருந்தது போல். இத்தாலியும் பிரான்ஸ் மற்றும் ஆ°திரியாவால் துண்டாடப்பட்டிருந்தது. மேலும் பல குட்டி மன்னர்களால் பல பகுதிகள் ஆட்சி செய்யப்பட்டு வந்தன.

ஒருமொழி பேசக்-கூடிய இத்தாலிய மக்களை இணைத்து ஒரு தேசமாக்கும் போராட்டம் 1821ல் துவங்கி 1871 வரை நடைபெற்றது. இப்போராட்டத்தின் நாயகனாக 25 வயதே நிரம்பிய ஜோசப்மாசினி என்ற இளைஞன் இருந்தான். அவன் தனியாக இல்லை. உலகின் முதல் இளைஞர் அமைப்பான “இளம் இத்தாலி” என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கி போர்க்களத்திலே இறக்கினான். 1848 ல் காரல் மார்க்சும். எங்கல்சும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வெளியிடும்வரை ஐரோப்பா முழுவதும் அறியப்பட்டு, ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஆகர்ஷித்தது மாசினியும் அவனது இளம் இத்தாலியும்தான் என்றால் மிகையாகாது.

மாசினி கார்போனரி என்ற இரகசிய அரசியல் இயக்கத்தில் இருந்ததற்காக 1830ல் கைது செய்யப்பட்டு 6 மாதம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டான். சிறையிலிருந்தபோது பரந்த வானமும் விரிந்த கடலுமே அவன் சந்திக்கும் நபர்களாக இருந்தது. அவனது மூளை மட்டும் எதிர்கால இத்தாலியைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தது. அப்போதே இனி கார்போனரி இயக்கத்தை நம்பி பயனில்லை என்ற முடிவிற்கு வந்தான். 6 மாதத்திற்குப் பிறகு காவல்துறை அவனை விடுதலை செய்து ஒரு குக்கிராமத்தில் வாழவேண்டும் என உத்திரவிட்டது.வெளிஉலக தொடர்பில்லாமல் மீண்டும் தனது வாழ்வு முடங்குவதை மாசினி விரும்பவில்லை. எனவே சுவிட்சர்லாந்திற்கு குடியேறினான்.

அரசுக்கு எதிராக அங்கு செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு வந்ததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பிரான்ஸ் நாட்டின் மார்சேய்ல்ஸ் நகரில் குடி யேறினான். அங்குள்ள இத்தாலிய இளைஞர்களை திரட்டி 1831ன் கடைசியில் இளம் இத்தாலி என்ற அமைப்பை உருவாக்கினான். இவ்வமைப்பின் நோக்கமாக ஒருதேசம், விடுதலை, சுதந்திரக் குடியரசு, என்று அறிவித்தார்கள். குட்டி மன்னர்களிடம் கட்டுப்பட்டுக் கிடக்கும் மாநிலங்களையும், அண்டைநாடுகளிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் பிரதேசங்களையும் ஒன்றிணைப்பதுதான் இதன் நோக்கம் என்றனர். ஒன்றுபட்ட இத்தாலி என்ற கோரிக்கை உயரே எழும்பிக் கொண்டிருந்த போது ஆஸ்திரிய நாட்டின் அமைச்சர் மெட்டர்னிச் “ஒன்றுபட்ட இத்தாலி ஒரு புவியியல் மாயை” என்று ஏளனம் செய்தான். ஒன்றுபட்ட இத்தாலி என்பது தவிர்க்க முடியாதது. இளம் இத்தாலியர்கள் இதை உருவாக்கி காட்டுவார்கள்” என்று மாசினி பதிலடி கொடுத்தான்.

1833ஆம் ஆண்டில் இளம் இத்தாலி அமைப்பில் சுமார் 60000 உறுப்பினாகள் இருந்தனர். டஸ்கனி, அப்ரூசி, சிசிலி, பியட்மன்ட், ஜெனோவா ஆகிய நகரங்களில் இளம் இத்தாலி வலுவானதாக இருந்தது. சிறந்த கவிஞனாகவும், பேச்சாற்றல் மிக்கவனாகவும் இருந்த மாசினியின் கருத்துக்கள் இளைஞர்களையும், மக்களையும் கட்டி இழுத்தது. “மக்கள் எழுச்சிக்கு இளைஞர்களை தலைமை ஏற்கச் செய்யுங்கள். அவர்களது உள்ளங்களில் உறைந்து கிடக்கும் சக்தியை நீங்கள் அறியவில்லை. இளைஞர்களின் குரலுக்கு மக்களிடையே மந்திர சக்தி போன்ற மதிப்பிருக்கிறது” என்று மக்களிடையே வேண்டுகோள் விடுத்தான்.

“தியாகிகளின் ரத்தம், நீராய் பெருக்கெடுக்கும்போது, கருத்துக்கள் துரிதமாய் வளர்கின்றது” என்று தியாகத்தின் அவசியத்தை எடுத்துரைத்தான். “ஓ ... இளைஞர்களே, மலைக்குச் செல்லுங்கள், தொழிற்சாலைக்கும், வயல்களுக்கும் செல்லுங்கள், அவர்களுடன் உணவருந்துங்கள், அவர்களது உரிமைகளைப் பற்றி பேசுங்கள், அவர்கள் அடையும் எல்லையற்ற அடக்குமுறைகளை உணரவையுங்கள்” என்று, இளைஞர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பினான்.

கடிதம் .. பிரகடனம் .. கைது

1831-ல் சார்டீனிய அரசில் சார்லஸ் ஃபெலிக்ஸ் என்ற மன்னர் பதவி இழந்து, சார்லஸ் ஆல்பர்ட் என்பவர் பதவி ஏற்றார். இவர் 1821ல் அரசியல் சட்ட ஆட்சிக்கான இயக்கம் நடந்தபொழுது கார்போனேரி இயக்கத்தில் இருந்து செயல்பட்டவர். எனவே இவருடன் இருந்து செயல்பட்டதால் மாசினி இவருக்கு ஒரு கடிதம் எழுதினார். ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்க செயல்திட்டத்தில் இறங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். இக்கடிதத்தில் ஒற்றுமையின் அவசியம் பற்றியும், அதை எப்படி பெறவேண்டுமென்பதையும் விரிவாக எழுதியிருந்தார். ஆனால் சார்லஸ் ஆல்பர்ட், மாசினியின் கடிதத்தை அலட்சியப்படுத்தினான்.

இதனால் இளம் இத்தாலியினர் இக்கடிதத்தை அச்சடித்து நாடுமுழுவதும் விநியோகம் செய்தனர். கடிதம் இளைஞர்களையும், பொதுமக்களையும் அணிதிரட்டியது. மன்னனுக்கோ ஆத்திரத்தையும், அச்சத்தையும் மூட்டியது. கொதிப்படைந்த சார்லஸ் ஆல்பர்ட் பிரான்ஸ் அரசிடம் நிர்பந்தித்து மாசினியை கைதுசெய்ய முயற்சிசெய்தான். வேறுவழியில்லாமல் பிரான்° அவரை மீண்டும் 1832 ஆகஸ்ட்டில் °விட்சர்லாந்திற்கு நாடு கடத்தியது. மாசினியின் கடிதத்தை அச்சடித்து விநியோகித்த பல இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். போராட்டத்தை உசுப்பிய இக்கடிதமே இளம் இத்தாலியின் பிரகடனமாக அறிவிக்கப்பட்டது.

இழப்புகளை ஏற்படுத்திய முதல் எழுச்சி

1833ஆ-ம் ஆண்டு இளம் இத்தாலியினர் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சியை ஏற்படுத்தினர் அலெக்சாண்டரீயா, டூரின், ஜெனோவா, சாம்பரி, ஆகிய நகரங்களை முற்றுகையிட்டனர். அரசு படைக்கும், இளைஞர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த எழுச்சி நசுக்கப்பட்டாலும் ஐரோப்பா முழுவதும் இத்தாலியை நோக்கி பார்க்கவைத்தது. பன்னிரெண்டு இளைஞர்கள் தண்டிக்கப்பட்டு, அவர்களின் தலை கொடூரமான முறையில் துண்டிக்கப்பட்டது. மாசினியின் நெருங்கிய நண்பரும், இளம் இத்தாலி அமைப்பின் ஜெனோவா பிரிவு தலைவருமான ஜேகோபின் ரூபினின் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார். மாசினி தலைமறைவாக இருந்தாலும் அவருக்கு அக்கொடிய அரசு மரண தண்டனை விதித்தது.

இத்தாலிய இளைஞர்கள் தோல்வி கண்டு துவளவில்லை. 1834 பிப்ரவரி முதல் தேதி சுவிட்சர்லாந்திற்கு தப்பிச்சென்ற இளைஞர்கள் ஒன்றுகூடி பியமன்ட் நகரை கடுமையாக தாக்கினர். மறுபுறத்தில் ஜெனோவா நகரிலிருந்து அப்போதுதான் இளம் இத்தாலியில் இணைந்திருந்த கரிபால்டி தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தார்.

இதனால் கோபம் அடைந்த சுவிஸ் அரசு 1834ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் அவரை பாரீசுக்கு நாடுகடத்தியது. பாரீசிலும் சார்டினீய அரசின் நிர்பந்தத்தினால் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இதன்பிறகு 1837-ஆம் ஆண்டு ஜனவரியில் லண்டனுக்குச் சென்றார். இரண்டு எழுச்சிகளாலும் சிதறுண்டு இருந்த இளைஞர்களை மீண்டும் லண்டனில் ஒன்றுகூட்டி அமைப்பை புனரமைத்தார். இதைத் தொடர்ந்து அதே ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி மீண்டும் ஒருதாக்குதலை சார்டீனிய அரசு மீது தொடுத்தார். 1843ஆ-ம் ஆண்டு இளம் இத்தாலியினர் போலக்னா நகரில் பெரும் கலகத்தை ஏற்படுத்தினர். இளம் இத்தாலியரின் வீரம் செறிந்த போராட்டத்தினால் ஆஸ்திரிய நாட்டின் இரு கப்பல்படை அதிகாரிகள் இளம் இத்தாலியில் இணைந்தனர். அட்டிலோ, எமிலோ என்ற புகழ்பெற்ற அதிகாரிகள் நேப்பிள்ஸ் நகரை தாக்குவதற்காக திட்டமிட்டு செயல்பட்ட போது கைது செய்யப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

1852-ல் மன்சூவா நகரத்திலும், 1853 -ல் மிலான் நகரத்திலும் இளம் இத்தாலியர்கள் அரசுக்கெதிராக எழுச்சிக்கொண்டனர். இப்போராட்டத்தின் மீது அரசு இதுவரை இல்லாத அளவு அடக்குமுறைகளை ஏவியது. இதனால் இளம் இத்தாலி பெரும் பின்னடைவை சந்தித்தது. 1856ல் ஆங்காங்கே இருந்த குழுக்கள் சில போராட்டங்களை நடத்தினர். 1862-ல் மாசினி கரிபால்டியுடன் இணைந்து ரோம் நகரை விடுவிக்கும் யுத்தத்தில் கலந்துகொண்டார். 1870-ல் சிசிலியை விடுவிக்கும் போரின்போது மாசினி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1831-ல் ஆரம்பிக்கப்பட்டு 1870 வரை இளம் இத்தாலியர்கள் ஒன்றுபட்ட இத்தாலி உருவாவதற்காக தொடர் எழுச்சிகளை ஏற்படுத்தினர். 1848-ம் ஆண்டுவரை இந்த இளைஞர் அமைப்பினரின் போராட்டங்கள் ஐரோப்பிய இளைஞர்களை எழுச்சிகொள்ளச் செய்தது. இவர்களின் எழுச்சிகள் நசுக்கப்பட்டாலும், பலநூறு தலைகள் துண்டிக்கப்பட்டாலும், சிறைகொட்டடிகள் நிரம்பினாலும், ஒவ்வொரு எழுச்சிக்குப் பிறகும் ஒன்றுபட்ட இத்தாலி என்ற கருத்து வலுவடைந்தது. மக்கள் உள்ளங்களிலே வலம் வந்தது. எனவேதான் இத்தாலியின் பகுதியை தன்னுடன் வைத்திருந்த ஆஸ்திரிய அரசு, இளம் இத்தாலியில் உறுப்பினர்களாக சேர்ந்தாலே தலைதுண்டிக்கப்படும் என்று மிகக்கொடூரமான அரசாணையை பிறப்பித்தது.

இளம் இத்தாலிய அமைப்பின் உறுப்பினராக இருந்த கரிபால்டி ஒன்றுபட்ட இத்தாலிக்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார். இவர் கருஞ்சட்டை என்ற அமைப்பை உருவாக்கி, ராஜதந்திரரீதியிலும், ராணுவரீதியிலும் நுட்பமாக செயல்பட்டு வெற்றியை கண்டார். 1872-ல் ஒன்றுபட்ட இத்தாலி உருவானது. ஆனால் மாசினியின் கனவான சுதந்திர குடியரசு உருவாகவில்லை. 1870-ல் கைது செய்யப்பட்ட மாசினி அதே ஆண்டு அக்டோபரில் விடுதலை செய்யப்பட்டார். 1872ம் ஆண்டு பைசா நகரத்தில் உடல்நலம் குன்றி மரணமடைந்தார். இவரது இறுதி நிகழ்ச்சி சொந்த ஊரான ஜெனோவாவில் நடந்தபொழுது ஒரு லட்சம் மக்கள் பங்கேற்றுள்ளனர்.

இளம் இத்தாலியில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொருவர் ஜோசப் வெர்டி. இவர் தனது 29வது வயதிலேயே தன்னுடைய மேடை நாடகத்தின் மூலமாகவும், சேர்ந்திசை மூலமாகவும் இத்தாலியின் ஒற்றுமைக்கும், விடுதலைக்கும் ஒரு பேரலையை ஏற்படுத்தினார். இளம் இத்தாலி என்று இளைஞர் அமைப்பு ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தது மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி பல இளைஞர் அமைப்புகள் உருவாவதற்கு வழிகோலியது 1840 - களில் இளம் சுவிட்சர்லாந்து, இளம் ஜெர்மனி, இளம் போலந்து என்ற அமைப்புகள் உருவாகின. இதன் தொடர்ச்சியாக இளம் ஐரோப்பா என்ற இளைஞர் அமைப்பு உருவாகியது. இளம் ஐரோப்பாவின் தாக்கத்தினால் இளம் துருக்கியர்கள் என்ற அமைப்பை துருக்கியில் உருவாக்கினர். எனவே இளம் இத்தாலி, என்ற அமைப்பின் வேர்களும், விழுதுகளும் ஐரோப்பாவையும் தாண்டி துளிர்க்க ஆரம்பித்தது.

இளைஞர் எழுச்சிகளும்-இயக்கங்களும்-1

இளைஞர் எழுச்சிகளும்-இயக்கங்களும்-2

கருத்துகள் இல்லை: