வெள்ளி, 14 நவம்பர், 2008

இளைஞர்களின் எழுச்சிகளும் இயக்கங்களும்

ஏ.பாக்கியம்
இளமைபற்றிய இருவேறு சித்தாந்தங்கள்

ஒருநாட்டின் எதிர்காலம் நிகழ்கால இளைஞர்களின் நிலைமையைப் பொறுத்தே அமையும் என்பார்கள்.இயற்கை வளங்களிலேயே உயர்ந்த வளம் மனித வளமே ஆகும். இதைக்குறிக்கும் வகையிலேதான் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீக்கி பிறத்தல் என அவ்வையார் மனிதவளத்தின் அவசியத்தை பாடியுள்ளார்.இளைஞர்களை அதிகமாகப்பெற்றுள்ள சமூகம் மிகவும் சக்திவாய்ந்தது. கட்டுடலும், கவர்ச்சி உடையும், மிடுக்கு நடையும், அரும்பு மீசையும், குறும்புப் பார்வையும்தான் இளமை என்று புறத்தோற்றத்தையே இலக்கண மாக்கியுள்ளனர்.

ஆனால் இளமை என்பது தீவிரமான சமூகமயமாக்கல் (intensive socialisation) என்று சமூக விஞ்ஞானிகள் வரையறுத்துள்ளனர். இளமை என்பது ஆற்றலின் தோற்றுவாய் என்று எடுத்துரைத்துள்ளர்.

இளமையின் வயதை ஒவ்வொரு நாடும் தனது சமூக வளர்ச்சி போக்குகளுக்கு ஏற்ற வகையில் நிச்சயித்துள்ளது. 14 வயது முதல் 40 வயது வரை வேறுபட்ட வரையறை உள்ளது.

பெரும்பாலான சமூகவிஞ்ஞானிகள் இளமையை 35 வயது வரை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

குழந்தைகளின் வளர்ச்சிப்போக்கில் 6 வயதுக்குள் பெற்றோர்களைப்பற்றி அறிதல். 13 வயதுக்குள் சில குறிப்பான விஷயங்களை அறிந்து கொள்ளுதல், 19 வயதுவரை சீரான வளர்ச்சி அடைதல், 20 வயதுக்குமேல் அரசியல் சமூகங்களைப்பற்றிய வடிவங்களைப் பெறுதல், 30 வயதில் சமூகத்தின் வளர்ச்சி போக்குகள் எதார்த்தங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளுதலும் முடிவெடுக்கும் திறனை முழுமையாகப் பெறுதலும் நடைபெறுகிறது. 30 முதல் 35 வயதுக்குள் குறிப்பிட்ட தளத்தில் நிலைநிறுத்தும் பருவமாகும்.அதாவது படைப்பாளியாக ,அறிவுவிஷயமாக, விஞ்ஞானியாக ,எழுத்தாளனாக, இன்னும் பல தளத்தில் தடம் பதிக்கும் பருவமாக உள்ளது என்று சமூக விஞ்ஞானிகள் வரையறுத்துள்ளர்.

தனித்துவத்தின் சிறப்பம்சம் ?

பாலின வேறுபாட்டால் பெண்களுக்கு தனித்துவம் கிடைக்கிறது.கல்விச்சாலைகளில் குவிந்துள்ளதால் மாணவர்களுக்கு தனித்துவம் உள்ளது. தொழிலை மையமாக முன்னிறுத்தி தனித்துவம் கிடைக்கும் பிரிவினர்களும் உண்டு. ஆனால் அனைத்துப் பிரிவிலும் சமூகத்திலும் இடம் பெற்றுள்ள இளைஞர்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றனர்.?

மனித வாழ்வில் ஆற்றல் நிறைந்த பகுதியாக இருப்பதாலும், மக்கள் தொகையில் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாலும், வாழ்வின் அடிப்படைத் தேவைகளைத் தேடி நிலைநிறுத்துவதற்கான கட்டாயமான பருவத்தில் இருப்பதாலும் இளைஞர்கள் தனித்துவமும் முக்கியத்துவமும் பெறுகின்றனர் என்று சமூக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து முடிவுக்கு வந்துள்ளனர்.

இசைத்துறையிலும், கலைத்துறையிலும் ,விளையாட்டுத்துறையிலும், விஞ்ஞானத்துறையிலும், புதிய புதிய சாதனைகள் நிகழ்த்துவதும், அந்தச்சாதனைகளை முறியடித்து புதியசாதனைகள் நிகழ்த்துவதும் தனிநபர்களின் முயற்சியும்.ஆற்றலையும் அதிகமாக சார்ந்திருப்பதாகும்.

ஆனால் வரலாற்று ரீதியாக விடுதலைப்போராட்டத்திலும்,தேசிய அரசுகள் உருவாவதிலும், சமூகசீர்திருத்த இயக்கங்களிலும், அரசியல் மாற்றங்களிலும்,சமூக மாற்றப் போராட்டங்களிலும், இளைஞர்கள் தங்களது தடத்தை பதித்து வந்துள்ளனர். எனவே அந்தந்த காலத்தின் மாற்றத்தை விரும்பாத சக்திகள் இளைஞர்களை பற்றிய தவறான கருத்தை பரப்பியும், இளைஞர்களின் எழுச்சியை அடக்கியும் வந்துள்ளனர்.

அரசியலா ? மகிழ்ச்சியா ?

அரசியல் சமூகப் போராட்டங்களில் இளைஞர்கள் ஈடுபடுகின்றபோது இளைஞர்களை அரசியலிலிருந்து பிரித்திடும் பணியை செய்தனர். இளைஞர்களுக்கு அரசியல் வேண்டுமா? மகிழ்ச்சி வேண்டுமா? என்று கேட்டனர். மகிழ்ச்சி தேவையானால் அரசியலை துறக்க வேண்டும், அரசியல் வேண்டுமானால் மகிழ்ச்சியை துறக்க வேண்டும் என்று பிரபலமான பிரெஞ்சு நாட்டு கார்மல் கம்லெரி ,பிளவுட் டாப்பியா கூறுகின்றனர். இதையே நமது நாட்டில் இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு, பெண்களுக்கு அரசியல் எதற்கு என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இளைஞர்களை பார்த்து உனக்கேன் அரசியல் உனது பிழைப்பை பார் என்றும்,அரசியல் சார்பற்ற அமைப்பு என்று அறிவிப்பதில் அறிவாளித்தனமும் நடுநிலையும் இருப்பதாக நம்பவைத்து அவர்களை வாக்கு இயந்திரங்களாகவும் அரசியலற்ற அரசியல் கட்சிகளின் அடியாட்களாகவும் சுரண்டும் வர்க்கம் தக்கவைக்க முயல்கிறது.

இந்த கருத்தாக்கத்தின் விளைவுகள் அமெரிக்காவில் வெளிப்பட்டன,1971.ம் ஆண்டு வியட்நாம் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு இளைஞர்களின் அரசியல் நடவடிக்கைகள் வெகுவாக குறைந்துள்ளன. ‘’அமெரிக்க இளைஞர்களுக்கு சமாதானம், மூன்றாம் உலக நாடுகள் பிரச்சனைகள், ஆயுத ஒழிப்பு ஆகியவற்றின் பாலபாடம்கூட தெரியாது. இதையெல்லாம் தெரிந்து கொள்வது இளைஞர்களுக்கு தேவையற்றது எனபோதிக்கின்றனர். எனவே அமெரிக்க இளைஞர்கள் அரசியலில் பூஜ்யமாக உள்ளனர் ’ என்று அமெரிக்க வரலாற்று அறிஞர் ஆர்.பார்ஸ்ட்னர் கூறுகின்றார்

வயதா? வாழ்க்கையா?

இளைஞர்கள் வாழ்க்கைப்பிரச்சனைக்காக அணிதிரண்டு போராடிய போது அப்போராட்டங்களை கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை, பயப்பட வேண்டிய தேவையுமில்லை ,காரணம் இது வயதுக்கோளாறு 21.ம் வயதிலே கோஷம்போடுவார்கள் 22ம் வயதிலே ஓய்ந்துவிடுவார்கள் என்று எஸ்.பீஃவர் என்ற அமெரிக்க சமூக விஞ்ஞானி கூறுகின்றார்.

60ஆம் ஆண்டுகளுக்கு பிறகு உலகலாவிய இளைஞர் எழுச்சிகள் இடைவிடாது தொடர்ந்து நடந்து வந்ததைக் கண்டு சுரண்டும் வர்க்கம் கலங்கியது. ‘‘ இளைஞர்கள் சமுதாயத்தில் சிறுபான்மையினர் அவர்களது சுயநலம் காரணமாக இதரபகுதியினரை தாக்கி தங்களது மேலாதிக்கத்தை சமுதாயத்தில் நிலைநிறத்த முயலுகின்றனர் ’’ என்ற முரட்டு சித்தாந்தத்தை பேராசிரியர் எம்.ஜெரால்டு முன்மொழிந்தார். இளைஞர்கள் கலகக்கார சிறுபான்மையினர் எனவே இவர்களது போராட்டத்தை அடக்குவதில் எவ்வித தவறும் இல்லை என்று வாதிடுகின்றார்.

தனிவர்க்கமா ?

வர்க்க சமுதாயத்தில் இளைஞர்கள் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக அணிதிரள்வதை தடுக்கும் வகையிலும் புதிய புதிய சித்தாந்தங்களை விதைக்கின்றனர். இளைஞர்கள் அனைத்து மக்கட்பிரிவிலும் இருப்பதால் அவர்கள் வர்க்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று வாதிட்டனர். காலப்போக்கில் இளைஞர்கள் அணிதிரள்வதும் அரசியலில் பங்கெடுப்பதும் அதிகமானபோது இளைஞர்களை தனிவர்க்கம் என்று முத்திரை குத்தி உழைப்பாளி மக்களிடமிருந்து பிரித்திடும் சூழ்ச்சியினை செய்தனர்.எனவே தத்துவம் வயதிற்கு அல்ல வர்கக்த்திற்குதான் என்பதை வரலாறு துல்லியமாகவே நிரூபித்துள்ளது.

எனவே ஒரு தத்துவம் இளமையை ,இளமையின் ஆற்றலை தங்களது சுரண்டலுக்காகவும் சுரண்டல் சமுதாயத்தை பாதுகாத்திடவும் பயன்படுத்தியது. இளையசக்தி சுரண்டல் அமைப்புக்கு எதிராக அணிதிரண்டு களத்தில் இறங்கியபோது அவர்களை ஆயுதம்கொண்டு அடக்கியது மட்டுமல்ல பின்னுக்கு தள்ளும் சித்தாந்தங்களையும் வலுவாகப் பயன்படுத்தியது.

புதிய பார்வை?

காரல் மார்க்சும்,எங்கல்சும் மற்ற மார்க்சிய அறிஞர்களும் இளைஞர்களை சமூகப் பிரிவுகளுக்கு அப்பேற்பட்டவர்களாக, வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பொதுவானவர்களாக பார்க்க கூடாது என்றும் அவர்களை வர்க்கக் கட்டமைப்பு கொண்ட சமூகத்தின் பகுதியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கருதினார்கள்.

உழைக்கும் வர்க்கத்தின் எதிர்காலம், மனிதகுலத்தின் எதிர்காலம் அனைத்தும் வளரும் உழைக்கும் தலைமுறையை சார்ந்துதான் உள்ளது என்பதை ஞானம் பெற்ற தொழிலாளி வர்க்கம் புரிந்திருக்கிறது என்று 1844ம் ஆண்டிலேயே காரல் மார்க்ஸ் பாட்டாளி வர்க்கத்தின் வளரும் தலைமுறை என்ற கட்டுரையில் எழுதினார். 1848.ம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் நடைபெற்ற தொழிலாளர்கள் எழுச்சிக்கு இளைஞர்கள்/மாணவர்கள் ஆதரவாக செயல்பட்டதையும், 1865_66ஆம் ஆண்டுகளில் பிரான்சில் நடைபெற்ற எழுச்சியில் மாணவர்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

லெனின் காலத்தில் புதிய நிலைமைகள் தோன்றின. தொடக்கத்தில் சில சமூக ஜனநாயக கட்சிகளும், தொழிற்சங்கங்களும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் அமைப்புகளுக்கு உதவிட மறுத்தனர். நமது பிரதான கடமை இளைஞர்களை பயிற்றுவிப்பதுதான் .அவர்களை அமைப்பு ரீதியாக திரட்டுவதில்லை. அரசியல் அரங்கத்தில் போராட்டம் என்பது இளைஞர்களுக்கு இல்லை என்றும் வாதிட்டனர்.

இதற்கு மாறாக லெனின் இளம் போராட்ட வீரர்களை ஸ்தாபன ரீதியாக ஒன்று படுத்தியும், பாட்டாளி வர்க்கத்தின் பொதுப் போராட்டத்தில் அவர்களின் பங்கை அதிகரிக்கவும் இலக்குகளை தெளிவாக அமைத்தார்.

சமூக அரசியல் நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடுவது இயல்பானது வரவேற்கத்தக்கது அரசியலில் ஈடுபடுவது பற்றி கண்டிப்பது முட்டாள்தனமானது போலித்தனமானது என்று லெனின் உறுதியாக கூறினார்.இளைஞர்கள் கூர்மைபடுத்தப்பட்டு இருக்கின்ற ஆயுதம் அவர்களை யார் பயன்படுத்தப்போகிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றார்.

இளைஞர்களைப்பற்றி பயப்பட வேண்டாம் போராட்டம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும். நமது முன்னோர்களைவிட மாறுபட்ட முறையில் ,மாறுபட்ட வடிவில் ,மாறுபட்ட சூழலில் சோசலிசத்தை முன்னெடுத்துச்செல்வார்கள் என்று நம்பிக்கையுடன் அணுகினார்.

இளைஞர்களை இன்று அணிதிரட்டாத சமூகப் பிரிவுகளே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைவரும் இளைஞர்களை அணிதிரட்டுகின்றனர்.மதம் ,சாதி, இனக்குழு, மொழி,அரசியல் கட்சிகள்,ரசிகர் அமைப்புகள் என்ற பட்டியல் நீளும். யாருடைய நலனுக்காக திரட்டுகின்றனர் என்பதுதான் முக்கிய கேள்வி?

வரலாற்று நெடுகிலும் காலத்தின் தேவைக்கேற்ப இளைஞர்கள் தங்களது தடத்தை பதித்துள்ளனர். அதிலும் காலச்சக்கரத்தை முன்னோக்கி செலுத்திட ஏராளமான இளைஞர் அமைப்புகள் உள்ளன. மாற்றத்தின் மகுடமாக திகழ்ந்த ஐரோப்பா தொடங்கி அண்மைக்கால ஆப்பிரிக்கா வரை இளைஞர் இயக்கம் இயங்கியுள்ளது.

14ஆம் நூற்றாண்டு முதல் சிறு சிறு குழுக்களாக துவங்கி 18ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டு துவக்கத்திலும் எழுச்சி பெற்று முக்கியப் பங்காற்றத் துவங்கின, ஒவ்வொருநாட்டின் /பிரதேசத்தின் சூழலுக்கு ஏற்ப இந்த இயக்கங்கள் வெளிப்பட்டன. இந்தப்பின்னணியில்தான் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தையட்டிய பகுதியில் குடியிருப்பவர்களுக்கும் மாணவர்களுக்கும் டவுன் மற்றும் கவுன்என்ற கலவரம் தொடங்கியது..

தொடரும்



கருத்துகள் இல்லை: