செவ்வாய், 6 ஜனவரி, 2009

ஆண்டிற்கு 7 ஆயிரம் வரதட்சணைச் சாவுகள்!

1961 ஆம் ஆண்டிலிலேயே வரதட்சணை வாங்குவது தடை செய்யப்படுகிறது என்று சட்டம் கொண்டுவரப்பட்டாலும், வாங்குவது மட்டுமல்ல, கொடுக்காததால் மரணத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, 2004ல்

7 ஆயிரத்து 26 பெண்களும், 2005ல்

6 ஆயிரத்து 787 பெண்களும், 2006ல்

7 ஆயிரத்து 618 பெண்களும் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை அதிகாரபூர்வமாக

பதிவு செய்யப்பட்டுள்ளதாகும். இன்னும் பதிவு செய்யப்படாத மரணங்களும் ஏராளமாக உள்ளன.

தேசிய குற்றப்பதிவு ஆணையத்தில் இந்தப் புள்ளிவிபரத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்தும் கூறப்பட்டுள்ளது. வரதட்சணைத்தடுப்புச் சட்டத்தின் கீழ்

2004ல் 3 ஆயிரத்து 592 வழக்குகளும், 2005ல் 3 ஆயிரத்து 204 வழக்குகளும், 2006ல் 4 ஆயிரத்து 504 வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. பணம், ஆடு, மாடு, கோழி, படுக்கை, மெத்தை, டி.வி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெசின் என்ற வரதட்சணைப் பட்டியல் நீண்டு கொண்டே போய் மாப்பிள்ளைக்கு வேலையும் ஏற்பாடு

செய்ய வேண்டும் என்பது வரை சென்றுள்ளது.

காவல்துறையால் பதிவு செய்யப்படும் சம்பவங்கள் குறைவாகவே இருந்தாலும்

புதிய பொருளாதாரக் கொள்கைகள் என்ற பெயரில் நடைமுறைக்கு வந்த தாராளமய, தனியார்மய மற்றும் உலகமயக் கொள்கைகள் பெண்களை சந்தைப்பொருளாகவே மாற்றி விட்டன. 1980களின் நடுவில் ஆண்டிற்கு சராசரியாக 400 பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் பலியானார்கள். 1988ல் தான் இந்த எண்ணிக்கை கடுமையாக உயர்ந்தது. அந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்து 209 பெண்கள் வரதட்சணை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தார்கள். 1993ல் 5 ஆயிரத்து 377 என்று அதிகரித்த அந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போய் தற்போது ஆண்டிற்கு சராசரியாக 7 ஆயிரம் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

தலைநகர் டில்லியின் நிலைமை மிகவும் அலங்கோலமாக உள்ளது. ஒவ்வொரு பனிரெண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் வரதட்சணைக்காக கொல்லப்படுகிறார். அதோடு, இவ்வாறு நடைபெறும் சம்பவங்களைப் பதிவு செய்வதில் டில்லிக் காவல்துறை பெரும் அலட்சியம் காட்டுகிறது. பெண்கள் எரிக்கப்படும் சம்பவங்களில்

90 சதவீதம் விபத்துகள் என்றே பதிவு செய்யப்படுகின்றன. ஐந்து சதவீத சம்பவங்கள் தற்கொலை என்றும், மீதமுள்ள ஐந்து சதவீதம் மட்டுமே கொலை என்றும் தலைநகரில் பதிவு செய்யப்படுகிறது.

இந்தப் புள்ளிவிபரங்களைக் கொண்டுதான் தேசிய குற்றப்பதிவு ஆணையம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பெங்களூர் போன்ற நகரங்களின் நிலைமையும் மிகவும் மோசமானதாகவே உள்ளது. 1997 ஆம் ஆண்டில் செயற்கையான முறையில் பெண்கள் இறந்ததாக 1,133 வழக்குகள் அந்நகரில்

பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 546 வழக்குகளை தற்கொலை என்றும், 430 வழக்குகளை விபத்து என்றும் பதிவு செய்தார்கள். வெறும் 157 சம்பவங்களை மட்டுமே கொலை என்று கருதி விசாரித்தார்கள். ஆனால் சுமார் 550க்கு மேற்பட்டவை கொலை சம்பவங்கள்தான் என்று பின்னர் தெரிய வந்தது.

வழக்குகள் எண்ணிக்கை உயர்ந்ததற்கு குற்றங்கள் அதிகமானது மட்டுமே காரணமல்ல, மாதர் அமைப்புகளின் போர்க்குரல்களாலும் வழக்குகள்

அதிகமாகப் பதிவு செய்யப்பட்டன என்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

1995ல் தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் ஆண்டிற்கு சராசரியாக 6 ஆயிரம் பெண்கள் பலியானதாகக் கூறப்பட்டிருந்தது. வரதட்ணைக் கொடுமை பற்றி ஆய்வு

செய்த ஹிமேந்திர தாகூர் என்பவர் பலியாகும் பெண்களின் எண்ணிக்கை சராசரியாக ஆண்டிற்கு 25 ஆயிரத்தைத் தொடும் என்று 1999ல் குறிப்பிட்டிருந்தார்.

வீணா ஓல்டென்பெர்க் என்ற வரலாற்றாசிரியர் கூறுகிறார். “முதலாளித்துவத்தின் தாக்கத்தால், பழங்கால வழக்கம் என்றிருந்த வரதட்சணை தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள விரும்பும் குடும்பங்களின் வருமானத்தை ஈட்டும் ஒன்றாக மாறியுள்ளது”

கருத்துகள் இல்லை: