சனி, 3 ஜனவரி, 2009

பொன்விழா கியூப புரட்சி: வலிமைமிகு டேவிட்டின் வெற்றி

-சீத்தாராம் யெச்சூரி

கியூப சோசலிசப் புரட்சி அரை நூற்றாண்டு காலம் நிலைத்திருந்ததோடு மட்டுமல்லாமல் அதையும் கடந்து ஐம்பது ஆண்டு காலத்தில் வலிமைப் படுத்தப்பட்டுள்ளது. இது மனித உழைப்பும், விடாமுயற்சியும் படைத்த வீரகாவியமாக மனிதகுல வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. 1989ல் புரட்சியின் 30வது ஆண்டு கொண்டாட்டத்தில் கியூப மக்களோடு இணைந்து கலந்துகொண்டபோது ஹவானாவிலுள்ள மாலிகானில் (மும்பை மெரைன் டைவ் போன்ற இடம்) பெரிய விளம்பரப் பலகை வைக்கப் பட்டிருந்ததைக் கண்டேன். அப்பலகை யில் அமெரிக்க ஏகாதிபத்தியச் சூழ்ச்சி களைத் தோல்வியுறச் செய்த கியூபப் புரட்சியின் வெற்றியினை இதிகாசக் கதையான அரக்கன் கோலியாத்திற்கு எதிரான சிறுவன் டேவிட்டின் வெற்றி யோடு ஒப்பிடப்பட்டிருந்ததை நினைவு கூர்கிறேன். அது சாலப் பொருத்த மானதே. இன்றைக்கும் பொருத்தமானதே.

1989க்குப் பிந்தைய இருபது ஆண்டு களில், சோவியத்யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சோசலிசம் சிதைக் கப்பட்ட பின்னர், கியூபாவின் சோசலிச அமைப்பு பிழைத்திருக்காது என பலரும் நினைத்தார்கள். ஆனாலும் கோலியாத் திற்கு எதிரான ஒவ்வொரு களத்திலும் டேவிட்டின் வெற்றியே தொடர்ந்தது.

முதலாளித்துவத்தை விட சோசலிச அமைப்பு மேன்மையானது என்பதை இதைவிட வேறெந்த வகையிலும் அழுத் தமாக உறுதி செய்ய முடியாது.

சோசலிச கியூபாவின் அனைத்துவித சாதனைகளும் ஏற்கனவே ஆவணப்ப டுத்தப்பட்டிருப்பதால் அவற்றை மீண் டும் இங்கு குறிப்பிடவேண்டியது அவ சியமில்லை.

இருந்தாலும் ஒரு உண்மையை எவராலும் மறுக்கமுடியாது. கியூபப் புரட்சியின் அரைநூற்றாண்டு வெற்றியும், அதன் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் இந்த ஐம்பது ஆண்டு கால வாழ்க்கை யும் ஒன்றுக்கொன்று பிரிக்க இயலாதது. ஒரு உண்மையான கம்யூனிஸ்டாக சுய புகழ்ச்சிக்கு என்றுமே அவர் இடமளித் ததில்லை. பிடலாக மாற இயலாவிட்டா லும் கூட அவரைப் பின்பற்றுவதற்காக வாவது புதிய கம்யூனிசத் தலைமுறையினர் இவ்வகையில் முயற்சிக்க வேண்டும். அவருக்கு சிலைகள் இல்லை. பெரிய உருவப் படங்கள் இல்லை. அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை இல்லை. நாணயம் இல்லை. ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படவில்லை. இருந்த போதிலும் கியூபப் புரட்சியே சுவாசமாகவும் அதன் ஆற்றல்மிகு அதிர்வுகளைச் சுமப்பதாகவும் பிடலின் வாழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சென்ற வருடம், 2007ல், “என் வாழ்வு - பிடல் காஸ்ட்ரோ“ என்கிற ஆங்கிலப் புத்தகம் வெளிவந்தது. கியூபப் புரட்சிக்கும் அதன் தொடர் வெற்றிக்கும் நாம் செலுத்தும் மரியாதையாக இத்தொகுப்பு அமைந்துள்ளது.

ஏறத்தாழ 600 பக்க விவரிப்பில் பிடல் காஸ்ட்ரோவின் பிரமிக்கத்தக்க வாழ்க்கை, பணி மற்றும் அவர் வாழ்ந்த காலம் ஆகிய அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அதிகமாகப் பேசும் சுபாவமற்ற பிடல், அடுத்தடுத்த நேரடி கலந்துரையாடல்கள் மூலம் மூன்று ஆண்டு காலத்தில் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரது பெற்றோர், இளவயது தாக்கங்கள்,1953ல் புரட்சியின் தோல்வி, மெக்ஸிக்கோவிற்கு நாடு கடத்தல், கொரில்லாப் போர், ஜனவரி 1,1959ல் வெற்றி கண்ட புரட்சி உள்ளிட்ட அனைத்தும் இக்கலந்துரை யாடல்களில் இடம் பெற்றுள்ளன. இயல் பாகவே சே குவேராவுடனான அவரது உறவுகள், பன்றி வளைகுடா நெருக்கடி ஆகியன குறித்தும், சோவியத் யூனியன் சிதைவில் தொடங்கி மதம் மற்றும் ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட பரந்துபட்ட பல விசயங்களின் மீதான அவரது பார்வையும் இடம் பெற்றுள்ளன.

பிடல் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு ஏதும் இல்லாத நிலையில், அவரும் அதை எழுதிட வாய்ப்பில்லாத நிலையில், இக்னாசியோ ரமோநெட், இக்கலந்துரையாடல்களை தொகுத்ததன் மூலம் பிடல் வாழ்க்கையினை மிகச்சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். அந்த வகையில் இருபதாம் நூற்றாண்டின் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவரைப் பற்றி முழு மையாக அறிந்து கொள்ளச் செய்யும் குறிப் பிடத்தக்க பங்களிப்பு இந்நூல் எனலாம். நூலாசிரியரே குறிப்பிட்டுள்ளதைப் போல “வரலாற்றில் பிடலுக்கான இடம் உத்தர வாதப்படுத்தப்பட்டதுதான் - பிடலின் குறிக்கோளும் அதுவே”. கடிதங்களின் மறுபதிப்பு, ஏனைய ஆவண இணைப்புக் கள் ஆகியன மூலம் இவ்விவரிப்பு செழு மைப்படுத்தப்பட்டிருக்கிறது. வரலாற்று இணை நிகழ்வுகளும் சமகாலத்தை யொத்த புரிதலோடு இணைக்கப்பட் டுள்ளன.

இதைக் குறிப்பிடுகிற அதேவேளையில், வாழ்க்கைக் குறிப்பினை நேர்காணல்கள் மூலம் மறுநிர்மாணம் செய்கிற போது, அதற்கேயுண்டான பலவீனங்க ளும் நேரிடும். நேர்காணல் செய்தவரே அதை ஒப்புக் கொண்டுள்ளார். கேள்வி கேட்பவருக்கும் பதில் அளிப்பவருக்கு மான அறிவுரீதியான ஏற்றத்தாழ்வு சில உரையாடல்களை பரஸ்பர பொருளி சைவு அற்றதாக ஆக்கிவிடும். தனிப்பட்ட பிடலைப் பற்றிய பார்வையைத் தந்திருப் பதோடு அதன் உண்மை இலக்குகளை யும் இப்புத்தகம் பெருமளவிற்குப் பூர்த்தி செய்திருக்கிறது. ஒரு வித்தியாசமான சூழலில் பிறந்த சிறுவன் எவ்வாறு 20ம் நுாற்றாண்டின் இரண்டாம் பகுதியின் மிகப் பெரிய புரட்சியாளனாய் மாறினான்? “நகர்ப்புற வாசனையே இல்லாத ஒரு குக்கிராமத்தில், வசதியான - கல்வி யறிவற்ற - பழைமைவாத எண்ணம் கொண்ட பெற்றோருக்குப் பிறந்தவர். இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஸ்பெயின் சர்வாதிகாரி பிராங்கோவின் ஆதரவால் நடத்தப்பட்ட மேல்தட்டு குழந்தைகளுக்கான ஜெசூட்ஸ்களுக்கு ஆதரவான கத்தோலிக்கப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டவர். சட்டக் கல்லூரி யின் பள்ளி அறைகளில் பூர்சுவா இளை ஞர்களோடு தோளோடு தோள் சேர்த்து பழகிய இளைஞர். இப்படிப்பட்டவர் எப் படி மாறினார்?. எனினும் இந்த விவரிப் பில் பிடல் வாழ்க்கையின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அம்சங்கள் போதுமான அளவு கூர்மையாக வெளிப்படவில்லை.

இவ்விவரங்கள் மீதான உன்னிப்பான கவனத்தின் அவசியத்தை என் நேரடி யான அனுபவத்தின் வாயிலாக1993ல் நான் பெற முடிந்தது. சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்திருந்த வேளையில் ஜோதிபாசு அவர்களுடன் கியூபாவிற்குச் சென்றிருந்தேன். கம்யூனிச வரலாறு முடிந்துவிட்டது. அதன் கோட்பாடு தோற் றுவிட்டது போன்ற கம்யூனிசத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நேரம் அது. அவ்வர லாற்றின் அங்கமாகவே சோசலிச கியூபாவும் விமர்சிக்கப்பட்டது. ‘டைம்ஸ்’ இதழ் அதன் அட்டையில் பிடலின் படத் தோடு “காஸ்ட்ரோவின் கியூபா - முடி வுற்ற கனவு” என்று தலைப்பினைத் தாங்கி வெளிவந்திருந்தது.

ஒரு மாலை நேரம் நானும் ஜோதிபாசுவும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில், இரவு 11 மணியளவில் மாபெரும் தளபதி எங்களை வரவேற்கக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பிடலுடனான சந்திப்பு இரண்டு மணி நேரத்திற்கும் கூடுதலான ஆலோசனை யாக நீண்டது. கியூபா மீதான சோவியத் யூனியன் வீழ்ச்சியின் தாக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் விவாதத்தில் இடம் பெற்றன. திடீரென பிடல் இந்தியா பற்றிய ஆழமான பல தகவல்களை கேட்கத் துவங்கினார். உற்பத்தியாகும் ஸ்டீலின் அளவு, பயிரிடத்தக்க, பாசன வசதி பெற்ற விவசாய நிலப்பரப்பு உள்ளிட்ட நிறைய விவரங்களை கேட்க ஆரம்பித்தார். இத்தகைய கேள்விகளை அதுவும் அந்த அதிகாலை நேரத்தில் ஜோதிபாசு சற்றும் எதிர்பார்க்கவில்லை. பின் என்னை நோக்கிய பிடல், வயதின் காரணமாக ஜோதிபாசுவை பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் என்னிடம் இத்தகைய விவரங்கள் இல்லை எனச் சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் குறிப்பிட் டார். அதன் பின் பிடலை சந்திக்க நேர்ந்த இருவேறு வாய்ப்புகளிலும் புதுப்பிக்கப் பட்ட புள்ளி விபரங்களை என் கைகளில் வைத்துக்கொண்டுதான் சந்தித்தேன்.

இப்புத்தகத்திலிலுள்ள கலந்துரையா டல்கள், 20ம் நூற்றாண்டின் மதிப்புமிக்க புரட்சியாளர்களில் சிறந்த ஒருவரை எளிய முறையில் படித்தறியும்படி தொகுக்கப்பட்டுள்ளது. பாடிஸ்டா படை யினைத் தோற்கடித்த பின் ஹவானா விற்குள் 32 வயது நிரம்பிய பிடல் வெற்றி நடை போட்டு நுழைந்த அதே நாளில் தான் ஜெனரல் சார்லஸ் டி கௌலி, ஜந் தாவது பிரெஞ்ச் குடியரசின் முதல் அதிப ராக பதவியேற்றார். பிரிட்டன் மற்றும் தாய்லாந்தின் சம்பிரதாய முடியாட்சி மன்னர்கள் மட்டுமே பிடலை விடக் கூடு தலான காலம் அதிகாரத்தில் நீடித்தவர் கள். சோசலிச கியூபாவை வென்றெடுத்து பலப்படுத்தி நீண்ட காலம் வாழ்ந்த அரசியல் தலைவனாக பிடல் திகழ்கிறார். அரசியல் தலைமை மாற்றத்தையும் சுமூ கமான முறையில் முன்னின்று ஏற்படுத் தித் தந்தார். கலந்துரையாடல்களில் குறிப்பிட்டுள்ளதைப் போல பிடல் தலை மையிலான கியூபா “அதன் இறையாண் மையைப் பாதுகாத்ததோடு, மறுக்கமுடி யாத பிரமிக்கத்தக்க வெற்றிகளை மனித வள மேம்பாட்டில் ஈட்டியது. இனபேதங் கள் ஒழிப்பு, பெண்ணடிமைத்தனத் திலிருந்து விடுதலை, சிசு இறப்புவிகிதக் குறைப்பு, எழுத்தறிவின்மை ஒழிப்பு, உச்சஅளவு பொது அறிவு மற்றும் கல்வி, ஆரோக்கியம், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறை களில் பல வளர்ந்த நாடுகளும் பொறா மைப்படுகிற அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. பிற பல துறைகளையும் குறிப்பாக கலை, கலாச்சாரம் மற்றும் தனித்துவமிக்க அவர்களின் திரைப்படத் துறையையும் இந்த வெற்றிப் பட்டியலில் இணைக்கலாம்.

ஐசன்ஹோவர் முதல் புஷ் வரையி லான பத்திற்கும் குறைவில்லாத, அமெ ரிக்க அதிபர்களை எதிர் கொண்டவர் பிடல். சமீபத்திய ஒபாமாவையும் எதிர் கொள்ளத் துவங்கிவிட்டார். அவர் மீது ஏவப்பட்ட 600 கொலை முயற்சிகளை யும் முறியடித்தார். கியூபா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏவிவிட்ட பொருளாதார யுத்தங்களையும், கியூபாவை சிதைக்க ஏவப்பட்ட சதிச் செயல்களையும் முறிய டித்து வெற்றி கண்டார். இவையெல்லாம் முன்னாள் சி.ஐ.ஏ ஏஜெண்ட் பிலிப் ஏகீயால் ஆவணப்படுத்தப்பட்டிருக் கிறது.

20ம் நூற்றாண்டின் அனைத்து முக் கிய அரசியல் தலைவர்களுடனான அவ ரது தொடர்புகளையும், செயல்பாடு களையும் விவரித்துள்ளதோடு பிடலின் அறிவாற்றல்களையும் கட்டுக்கடங்கா புதுமை உணர்ச்சிகளையும் இக்கலந் துரையாடல்கள் தெளிவுபடுத்தியுள்ளன. எர்னெஸ்ட் ஹெமிங்வே, ஜுன் பால் சாட்ரே, சைமன் டி பொலிவர், பாப்லோ நெருடா, கேப்ரில் கார்சியா மார்க்ஸ், ஜோஸ் சாரமாகோ மற்றும் ஏனைய அறிவு ஜீவிகளுடனான பிடலின் தனிப்பட்ட உரையாடல்களும் விவரிக்கப்பட் டுள்ளன.

பிடலின் பன்முகப் பரிமாணங்களை உணர்த்தியுள்ள இக்கலந்துரையாடல் கள் நம்மிடையே விட்டுச் செல்லும் ஒட்டு மொத்தக் கருத்து, பிடலைப் பற்றி முன்னாள் பிரெஞ்சு அதிபர் மிட்டரண்ட் ஒருமுறை குறிப்பிட்டதை ஒத்ததாக இருக்கிறது. தன்னிடம் மிகப்பெரிய கருத்துருவாக்கத்தை ஏற்படுத்திய மூன்று தலைவர்களில் ஒருவராகப் பிடல் திகழ்ந்ததற்கு “எதிர்காலத்தை அனுமானிக்கிற அவரது ஆற்றலும், வரலாறு பற்றிய அவரது உணர்வுகளுமே காரணம்“ என்று மிட்டரண்ட் கூறியதே அது.

சோவியத் யூனியனின் சிதைவைத் தொடர்ந்து “கியூபப் புரட்சி நிலைத்து நிற்கும் என்று எவரும் நினைத்துப் பார்க்கக் கூட தயாராக இல்லை“ என்று கூறும் பிடல், தாங்கள் ஒரு மாபெரும் அதிசயத்தைப் படைத்ததாகக் கூறுகிறார். ஏனெனில் “மேலும் மேலும் ஒன்றுபடும், அறிவார்ந்த, படித்த போர்க்குணம்மிக்க மக்களின், தேசத்தின் ஆதரவு புரட்சிக் குத் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. அது மேலும் அதிகரித்தும் வருகிறது.” வயது ஆக ஆக உடல் வலிமை குன்றி னாலும் பிடலின் உத்வேகம் அப்படியே இருக்கிறது.

அவரை வியந்து போற்றுவோர் மட்டுமல்ல; பிடலை குறைகூறுவோரும் கூட படித்தறிய வேண்டிய மதிப்புமிக்க வெளியீடு இது. 1953 புரட்சி தோல் விக்குப் பின் பிடல் குறிப்பிட்டது போல “என்னைக் கண்டியுங்கள்; அது பிரச் சனையல்ல; வரலாறு என்னை விடு விக்கும்.”

தமிழில் : சுரேஷ்

கருத்துகள் இல்லை: