சனி, 28 பிப்ரவரி, 2009

உடனே போர் நிறுத்தம் செய்க! சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளை இலங்கை அரசு ஏற்க வேண்டும் : பிரகாஷ் காரத்

சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளை ஏற்று இலங்கை அரசு உடனடியாகப் போர்நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கேட்டுக் கொண்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் கோவையில் செவ்வாயன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சர்வதேச பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பல துறைகளில் எதிரொலிக் கத் துவங்கியுள்ளது. ஒவ்வொரு தொழிற்துறையும் இதனால் கடும் பாதிப்புகளைச் சந்திக்கத் துவங்கியுள்ளன. வேலையிழப்புகள் பெருகிவிட்டன.

உதாரணமாக திருப்பூரில் டெக்ஸ்டைல் துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் பல துறைகளும் சரிவைச் சந்தித்துள்ளன. ஆனால் அரசு இதற்காக எடுத்து வரும் முயற்சிகள் போதுமானவையாக இல்லை. ஒவ்வொரு துறைக்கும் அரசு பிரத்யேகமான நிவாரணத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

சுவிட்சர்லாந்து நாட்டில் சட்டவிரோதமாக வங்கிக் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டிய லைக் கேட்டுப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு செய்வதால் வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப் பணம் வைத்திருப்பது உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க முடியும். நம் நாட்டின் பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருப்பதைத் தடுக்க முடியும். அமெரிக்கா சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் பட்டியலைத் தருமாறு சுவிஸ் அரசிடம் கேட்டுள்ளது. இதேபோல் பிரிட்டன் அரசும் கேட்டுள்ளது. இந்திய அரசும் விரைவில் பட்டியல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் தொடர்ந்து போர்முனையில் அப்பாவித் தமிழர்கள் சிறைப்பட்டுள்ளனர். சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா. சபை உள்ளிட்ட அமைப்புகளின் அனைத்துக் கோரிக்கைக ளையும் நிராகரித்து விட்டு இலங்கை அரசு தொடர்ந்து போரை நடத்தி வருகிறது. இப்போரை முடிவுக்குக் கொண்டுவர மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்திய அரசுக்கு அதிக பொறுப்பு உள்ளது. முன்னமேயே இலங்கையில் 13வது சட்டத் திருத்தம் ஒன்று இந்திய அரசின் முன்முயற்சியால் போடப்பட்டது. இதை மேலும் முன்னெடுத்துச் சென்று தீர்வு ஏற்படுத்த இந்திய அரசு முன்வர வேண்டும். இலங்கை அரசும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தை அளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: