திங்கள், 6 ஏப்ரல், 2009

வில்லன்கள்தான் “நாயகர்களா”?

கலவரத்தில் ஈடுபட்டாரா... உடனே அழைத்து வாருங்கள்... தேர்தல் சீட் காத்திருக்கிறது என்று அறிவிக்காத குறையாக பாஜக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. விஸ்வஇந்து பரிசத் மற்றும் பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்த வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். 40க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த வன்முறையால் ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறினர். அதில் ஏராளமான மக்கள் இன்று வரையிலும் வீடு திரும்பாமல் உள்ளனர்.

 இந்த கொடூரச் செயல்களில் முக்கியப் பங்காற்றிய மனோஜ் பிரதான் என்பவர் பாஜகவின் வேட்பாளராக தேர்தல் களத்தில் நிற்கிறார்.நாடாளுமன்றத் தேர்தலோடு ஒரிசா சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. மதவெறியாட்டம் நிகழ்த்தப்பட்ட இடங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான உதயகிரியில் மனோஜ் பிரதானை நிறுத்தியுள்ளார்கள். கலவரத்தை மேற்கொண்டதற்காக தற்போது சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் இவர் மிக முக்கியமான குற்றவாளி என்று காவல்துறையினரால் கருதப்படுகிறார். ஆகஸ்ட் மாதம் நடந்த கலவரம் தொடர்பாக தேடப்பட்ட இவர், பெர்ஹாம் பூரில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து அக்.15, 2008 அன்று கைது செய்யப்பட்டார். கலவரத் தின்போது பல இடங்களில் பயங்கரவாதக் கும்பல்களுக்கு இவர் தலைமை தாங்கினார் என்று காவல்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.

மனோஜ் பிரதான் மீது 12க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரத்திற்கும், பிரதானுக்

கும் எந்தவித சம்பந்தமில்லை என்று எப்போதும் போலவே பாஜக கூறி வருகிறது. பாஜக மீது களங்கம் சுமத்தவே பொய்வழக்குகளை போட்டி ருக்கிறார்கள் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான நயன் மொஹந்தி. சிறையி லிருந்துகொண்டே தேர்தலில் பிரதான் போட்டியிடப்போகிறார். இந்தக் கலவரங்களை நடத்தியதில் “திட்டமிடுதலுக்கு” உதவியவர் என்று கருதப்படும் முன்னாள் காவல்துறை அதிகாரியும், மதவெறி அமைப்பு ஒன்றின் ஒரிசா மாநிலத்தலைவருமான அசோக் சாஹூவுக்கும் தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பை பாஜக அளித்துள்ளது. “கிறிஸ்தவ பயங்கரவாதிகள்”தான் காரணம் என்று கூறி கலவரத்தைக் கிளப்பிவிட்டதற்கு இவர் முக்கியமான காரணமாக இருந்தார். இவர் காந்தமால் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கலவரத்தால் சொந்த வீடுகளைத் இழந்த 3 ஆயிரம் பேர் இந்த நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஐந்து முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ளனர். கலவரத்திற்கு தலைமையேற்று நடத்திய

வர்கள்தான் தேர்தலில் நிற்கிறார்கள் என்ற செய்தி இவர்களின் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஜூலியன் திகால் என்பவர் செய்தியாளர்களிடமும் மிகவும் தயங்கித்தயங்கியே பேசியுள்ளார். இவருடைய மனைவியும், இரு குழந்தைகளும் மாவட்டத்தை விட்டே வெளியேறியுள்ள நிலையில், சொந்த வீட்டிற்கு திரும்பும் நம்பிக்கையுடன் இவர் மட்டும் காந்தமாலில் உள்ள முகாமில் தங்கியிருக்கிறார். தேர்தல் முடிந்தபிறகு வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறும் அவர், அதன்பிறகு குடும்பத்தையும் அழைத்துக் கொள்ளவிருக்கிறார். கலவரத்தைச் செய்தவர்களே வெற்றி பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் வாட்டுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தைப் பெறுவதற்கான போட்டியில் இருந்த பாஜகவைத் தூக்கி நிறுத்த, விஷம் தோய்ந்த மதவெறிப்பேச்சுக்களைக் கொட்டிய வருண்காந்தி மூலம் முயற்சி செய்கிறார்கள். முதலில் அவர் பேசியது தவறு என்றார்கள். பிறகு அவர் அவ்வாறு பேசவேயில்லை, அவர் பேச்சைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படும் சி.டி. போலியானது என்று குற்றம் சாட்டினார்கள். அடுத்த நாளே பல்டியடித்தார்கள். வருண்காந்தி பேசியதில் தவறில்லை என்றார்கள். உத்தரப்பிரதேசத்தில் தோற்கப்போவது என்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்படி மதவெறியையாவது கிளப்பி விடலாமா என்று முனைந்து நிற்கிறார்கள் பாஜகவினர். தேர்தல் ஆணையத்தின் அறிவுரையை மீறி வருண்காந்தியைத்தான் தேர்தலில் நிறுத்துவோம் என்று அவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

இவ்வாறு வில்லன்களைக் கதாநாயகர்கள் போல் சித்தரிப்பது கர்நாடகத்திலும் அரங்கேறியுள்ளது. “முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம். எங்கள் மாவட்டத்தில் மொகரம் மற்றும் ஈத் மிலாது போன்ற சமயங்களில் ஊர்வலம் நடத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றெல்லாம் ஆனந்த குமார் ஹெக்டே என்ற வேட்பாளர் பேசியிருக்கிறார். இதற்கான வீடியோ ஆதாரம் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டது. இவர் கனரா தொகுதியிலிருந்து ஏற்கெனவே மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு சிறுபான்மையினருக்கு எதிராக பேசுபவர்களை தேர்தலில் நிறுத்துவதோடு அவர்களை நட்சத்திர பிரச்சாரகர்களாக மாற்றும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. மோடியை விட வருண்காந்தியை அனுப்புமாறு கேட்கும் பாஜக வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போகிறது என்று கட்சி வட்டாரங்கள் கூறி வருகின்றன.

கருத்துகள் இல்லை: