வியாழன், 18 ஜூன், 2009

போராட்டப் பாதையில் முன்னேறுவோம்!

(தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் நூற்றாண்டு விழா நிறைவை யொட்டி எழுதப்பட்ட கட்டுரை)

தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பல ஆண்டு காலம் பொதுவுடைமை இயக்கத்திற்காக உழைத்தவர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமாவதற்கு வித்திட்ட நவரத்தினங்களில் ஒருவர். பல் வேறு தியாகங்களுக்குச் சொந்தக்காரர். பல வகைகளிலும் சிறப்புக்களைக் கொண்டவர் என்பது அனைவரும் அறிந் ததே. நாம், தோழர்களைப் பற்றிக் குறிப் பிடும்போது அவர் சிறந்த பேச்சாளர், சிறந்த போராளி, சிறந்த அமைப்பாளர் என்று பல வகைகளில் குறிப்பிடுவோம். இதில் ஏதாவது ஒன்றுதான் முதலில் வரும். ஆனால் இவ்வனைத்து சிறப்பு களையும் கொண்டிருந்த தோழர்கள் ஒரு சிலர்தான், அவர்களில் தோழர் இ.எம். எஸ்.ஸூம் ஒருவர். குறிப்பாக ஸ்தாபனத் துறையில் அவர் காட்டிய அழுத்தம் பல வகைகளில் பல கட்டங்களில் முக்கியத் துவம் பெற்றிருக்கிறது. அவர் ஸ்தாபனத் துறையில் முன்வைத்த சில விஷயங் களை அவரது நூற்றாண்டு விழா நிறைவு பெறும் இத்தருணத்தில் நாம் கவனத்தில் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ், கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது உலகக் காங்கிரசில் ஆற்றிய புகழ்பெற்ற உரையில் ஸ்தாபனத்தின் முக்கியத்துவம் குறித்து அழுத்தமாகக் கூறியிருக்கிறார். கம்யூனிஸ்ட் அகிலத்திற்கும் மற்றும் அதன் ஒவ்வொரு பிரிவுக்குமே அடிப் படையான விஷயம் என்பது சரியான நிலைபாட்டை உருவாக்கு வதாகும், ஆயினும், வர்க்கப்போராட்டத் தின்போது அதன் துல்லியமான தலைமைக்கு சரியான நிலைபாடு மட்டும் போதுமானதல்ல. அதற்கு பல்வேறு நிபந் தனைகள் பூர்த்தி செய்யப்பட்டாக வேண்டும்.

முதலாவதாக ஸ்தாபன உத்தரவாதம். கட்சியின் பல்வேறு மட்டங்களில் எடுக் கப்படும் முடிவுகள் வெற்றிகரமாக நடை முறைப்படுத்தப்படுவதற்கு, அவற்றின் ஸ்தாபனங்கள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நடைமுறைப் படுத்தப்படும்போது எதிர்கொள்ளப்படும் தடைகளைத் தகர்த்து வெற்றிகரமாக முன்னேற முடியும் என்று தோழர் இ.எம்.எஸ். வலுவாக வலியுறுத்துகிறார்.

“கட்சி மிகச் சரியான முறையில் தன் நிலைபாட்டை வகுத்து, பிரகடனம் செய்து விட்டால், தீர்மானங்கள் நிறை வேற்றிவிட்டால், வெற்றி தானாக வந்து விடும் என்று சிலர் கருதுகிறார்கள். நிச்சயம் இது தவறு. இவ்வாறு நினைப்பவர்கள் பெரிய அளவில் தவறிழைக்கிறார்கள். திருத்தவே முடியாத அளவில் மாறிப் போயுள்ள அதிகாரவர்க்க மனப்போக்கு கொண்டவர்களும், அலுவலகங்களுக் குள்ளேயே முடங்கிப்போயுள்ள எலிகளும் தான் இவ்வாறு நினைக்க முடியும். உண்மையில், கட்சியின் நிலைபாட்டை, வழி காட்டுதலை நிறைவேற்றுவதற்காக மேற்கொண்ட வீரஞ்செறிந்த போராட்டங்களின் விளைவாகத்தான் நாம் இது காறும் பெற்றுவந்துள்ள வெற்றிகள் அனைத்தும் சாத்தியமாகியுள்ளன. வெற்றி என்பது தானே வந்துவிடாது. அதனை நம் இரு கைகளாலும் பற்றி இழுத் திட வேண்டும். கட்சியின் பொதுவான நிலைபாடு தொடர்பான தீர்மானங்களும், பிரகடனங்களும் வெற்றிப்பாதையில் நாம் எடுத்து வைக்கும் முதல் அடி. அதுவே இறுதி வெற்றி கிடையாது. கட்சி, சரியான நிலைபாட்டை வகுத்துத் தந்தபின், நம் முன் உள்ள பிரச்சனைக்கான சரியான தீர்வைக் காண வேண்டும். வெற்றி என்பது நாம் வேலைகளை எப்படித் திட் டமிட்டு நிறைவேற்றுகிறோம் என்பதில் தான் அடங்கி இருக்கிறது. இவற்றை யெல்லாம் செய்யாமல், கட்சியின் சரி யான நிலைபாடு மட்டும் வெற்றியைத் தேடித் தந்திடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, கட்சியின் முடிவுகளை அமல் படுத்தக்கூடிய கட்சி ஸ்தாபனம் உருக்கு போன்று உறுதியாக இருந்திட வேண்டும். கட்சியின் முடிவை நிறைவேற்றக்கூடிய அளவிற்கு அதன் உறுப்பினர்கள் உருக்கு போன்று இல்லையெனில், கட்சியின் நிலைபாடு மட்டுமல்ல, கட்சியே கடும் சேதத்திற்குள்ளாகும். சரியான நிலைபாட் டிற்கு அடுத்து அனைத்தையும் தீர்மானிப் பது கட்சி ஸ்தாபனம்தான். கட்சி ஸ்தா பனம்தான் கட்சியின் அரசியல் நிலை பாட்டின் தலைவிதியையும் நிர்ணயிக் கிறது. (தோழர் ஸ்டாலின், ‘சோஷலிசம் வெல்லும்’ என்னும் நூலில்).

இ.எம்.எஸ்., தோழர் ஸ்டாலினை மேற் கோள்காட்டி மேலும் கூறுவதாவது: “தோழர் ஸ்டாலின் கூறியிருப்பதைவிட அதிகம் நாம் ஒன்றும் சொல்வதற்கில் லை. கட்சியின் அனைத்துப் பணிகளிலும் வழிகாட்டும் நெறிமுறைகளாக மேலேகண்ட வாசகங்கள் திகழ்கின்றன.

“மேலும் மக்கள் புரிந்துகொள்ளக்கூடியவாறு அவர்களது மொழியில் பேச நாம் கற்றுக்கொள்ளவில்லை என்றால், நம்முடைய முடிவுகளை அவர்களால் சரிவரப் புரிந்துகொள்ளமுடியாது என்ப தை நாம் மனதில் கொள்ளவேண்டும். மக் களுக்குப் புரியக்கூடிய மொழியில் எப்படி எளிமையாகப் பேசுவது என்று எப்போ தும் நமக்குத் தெரியாது. பொருள் உணராது மனப்பாடம் செய்த சில சொற்றொடர் களை அடிக்கடிப் பிரயோகிப்பதை இன் னமும் நம்மால் தவிர்க்க முடியவில்லை. உண்மையில், நீங்கள் நம்மால் வெளி யிடப்படும் நாளிதழ்கள், கட்சிப் பிரசுரங் கள், வெளியீடுகள், தீர்மானங்கள் ஆகிய வற்றைப் படிக்கும்போது அவை இன்றள வும் மிகவும் கனமானவகையில், கட்சி யின் அடிமட்ட ஊழியர்களை விடுங்கள், கட்சியின் தலைவர்களாலேயே புரிந்து கொள்ள மிகவும் சிரமப்படக்கூடிய விதத் தில் இருப்பதைக்காண முடியும். (ஐக்கிய முன்னணி, இண்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ், நியூயார்க்)

இவ்வாறு கட்சியின் தத்துவார்த்த நிலைபாடு மற்றும் ஸ்தாபனம் ஆகிய இரண்டையும் முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இ.எம்.எஸ். வலியுறுத்துகிறார்.

கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் போது அதனை எப்படிச் சரிசெய்திடுவது என்ற கேள்வியை எழுப்பி, இ.எம்.எஸ். அளிக்கும் பதில் இன்றைய நிலையில் மிகவும் கவனிக்கத்தக்கது.

“இதற்கு, நம் கட்சியால் 1951-52ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலேயே விடை காணப்பட்டி ருக்கிறது. தற்போது ஆட்சியிலுள்ள நிலப் பிரபுத்துவ-ஏகபோக முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராக, நாம் அமைக்க விரும்பும் மக்கள் ஜனநாயக அரசை நிறு விட என்ன செய்ய வேண்டும்? தற்போது இருக்கும் நிர்வாக எந்திரத்தை அடி யோடு தகர்த்து எறிந்துவிட்டு அங்கே பல் வேறு மக்கள் பிரதிநிதிகளின் போராட்டங் களை நடத்திட்ட அமைப்புகளினால் அது உருவாக்கப்பட வேண்டும். மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவதற்கு அதுவே அடிப்படை. இந்தத் திசைவழியில் நாம் முன்னேறியிருக்கிறோமா? நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழிற்சாலையிலும், ஒவ்வொரு சுரங்கத்திலும், ஒவ்வொரு தோட்டத்திலும், ஒவ்வொரு பண்ணை யிலும், ஒவ்வொரு அலுவலகத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வார்டிலும் இவ்வாறு நாம் மக்கள் ஸ்தாப னங்களை அமைத்திருக்கிறோமா? சுருக்கமாகச் சொல்வதானால், எங்கெல் லாம் சாமானிய மக்கள் பணிபுரிகிறார் களோ அல்லது வசிக்கிறார்களோ அங் கெல்லாம் நம் ஸ்தாபனங்களைக் கட்டி யிருக்கிறோமா? அவர்களை அணிதிரட்டி, போராட்டங்களை முன்னெடுத்துச் சென் றிருக்கிறோமா? இக்கேள்விக்கு நாம் அளித்திடும் விடையின் மூலமாகவே நாம் அமைக்கவிரும்பும் மக்கள் ஜனநா யக அரசை நோக்கி நாம் எந்த அளவிற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.”

ஆட்சியாளர்கள் அவ்வப்பொழுது தங்கள் நாடகங்களை எப்படி நடத்துவார்கள், அதன் காரணங்கள் என்ன என்றும் இ.எம்.எஸ். விளக்குகிறார்.

“நாட்டு மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டப் பாதையில் முன் னேறுவது ஒரு பக்கம் நடந்தாலும், மறுபக் கத்தில் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் பல்வேறு வழிகளிலும் தன் மேலாதிக்கத்தைச் செலுத்துவதும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆட்சியாளர்களுக்கு ஒரு பக்கத்தில் மக்கள் திரளினரிடமிருந்தும், மறு பக்கத் தில் ஏகாதிபத்தியத்திடமிருந்தும் அச் சுறுத்தல்கள் வரும்சமயத்தில், அவர்கள் தங்கள் நிலைபாட்டினை அப்போதைக் கப்போது மாற்றிக்கொண்டே இருக்கிறார் கள். மக்கள்திரளினர் தங்களைச் சுரண் டுபவர்களுக்கு எதிராக மேலும் மேலும் அணிதிரண்டு வரும்போது, தங்கள் ஆட்சியே பறிபோய்விடுமோ என்று ஆட் சியாளர்கள் அஞ்சிடும்போது, மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராகிவிடு கிறார்கள். ஏகாதிபத்தியத்துடன் கூட் டினை ஏற்படுத்திக் கொள்ளக்கூட அவர் கள் தயங்குவதில்லை. ஆட்சியாளர்கள் இவ்வாறு ஏகாதிபத்தியத்திற்கு இளைய பங்காளியாக மாறிச் செல்வது, எதிர் காலத்திலும் தொடரும். ஆளும் வர்க்கங் கள் தங்கள் நிலைபாட்டில் எதிர்பாரா விதத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும்போது அதனை எதிர் கொள்ளவும் நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று இ.எம்.எஸ். கூறுவதைப்படிக்கும்பொழுது இன்றைய நிலை குறித்து அன்றே அவர் துல்லிய மாக குறிப்பிட்டுள்ளார் என்பதை உணர முடியும்.

அகக்காரணிகளும் புறக்காரணிகளும்

கட்சி ஸ்தாபனத்தில் இன்னொரு முக்கிய அம்சமானஅகக்காரணிகள் மற்றும் புறக்காரணிகள் குறித்து இ.எம். எஸ். கூறுவதைப் பார்ப்போம்.

“நம்நாட்டில் மக்கள் ஜனநாயகப் புரட்சி ஏற்பட வேண்டுமானால் அதற்குத் தேவையான அகக்காரணிகளும் புறக்காரணிகளும் இரண்டுமே சமமானஅளவில் இருந்திட வேண்டும். ஆனால் நம் நாட் டில் இரு காரணிகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகிக் கொண்டே செல்கிறது. புரட்சி நடைபெற புறக்கார ணிகள் மட்டும் போதுமானால் நம் நாட் டில் புரட்சி எப்போதோ ஏற்பட்டிருக்கும். ஏனெனில் புரட்சிக்கான புறக்காரணிகள் ஏராளமாகவே இருக்கின்றன. ஆனால் புரட்சி, புறக்காரணிகளால் மட்டும் நடந்திடாது. அதற்கு அகக்காரணிகளும் வேண்டும்.

அகக்காரணிகள் என்றால் என்ன? தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள் மற் றும் பல்வேறுபட்ட சாமானிய மக்கள் திர ளினரின் வெகுஜன ஸ்தாபனங்கள், தொழி லாளர் வர்க்கத்திற்குள்ளேயே பரந்துபட்ட ஒற்றுமை தொழிலாளர் வர்க்கம்- விவசா யிகள் மத்தியில் ஒற்றுமை, இவ்வமைப்பு களின் மீது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, கட்சியின் ஸ்தாபன பலம் மற்றும் கட்சியின் தத்துவார்த்த முதிர்ச்சி ஆகியவையே அகக்காரணிகளாகும்.

இவற்றை நாம் வளர்த்து, உயர்த்திடாமல் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்திட முடியாது.

அடுத்து, நம் நாட்டின் நிலைமைகள் குறித்தும் நாம் சரியானதொரு கணிப் பிற்கு வர வேண்டும். லெனின், ஸ்டாலின் அல்லது டிமிட்ரோவ் உபயோகப்படுத்திய சில சொற்றொடர்களை மட்டும் பயன் படுத்துவது போதாது. அவற்றின் சாரத் தை எடுத்துக் கொண்டு, நம் நடைமுறை வேலைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

அவற்றின் சாரம் என்றால் என்ன? அது இதுதான். ஒவ்வொரு தொழிற் சாலையிலும், ஒவ்வொரு சுரங்கத்திலும், ஒவ்வொரு பண்ணையிலும், ஒவ்வொரு தோட்டத்திலும், தொழிலாளர்கள் வேலை செய்யும் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ் வொரு கிராமத்திலும் -சுருக்கமாகச் சொல்வதென்றால், உழைக்கும் மக்கள் எங்கெல்லாம் வேலை செய்கிறார்களோ அல்லது வசிக்கிறார்களோ அங்கெல் லாம் - அவர்களுடைய சொந்த ஸ்தாப னங்களை அமைத்திட வேண்டும். அவர் கள் தங்களுடைய அன்றாடப் போராட் டங்களை நடத்திட, நாம் அவர்களுக்கு வழிகாட்டிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தங்கள் பிரச் சனைகளுக்காகப் போராடும்போது நாம் அவர்களுக்கு உதவினால் மட்டும் போது மா? நிச்சயமாகப் போதாது. அத்துடன், அவ்வாறு போராட்டத்தில் அவர்கள் ஈடு படுகையில் அவர்களில் மணியானவர் களைப் பொறுக்கியெடுத்து, அவர்களுக்கு கலாச்சார மற்றும் தத்துவார்த்தப் பயிற்சி அளித்திட வேண்டும். அவ்வாறு புடம்போட்ட தங்கமாக மாற்றப்பட்ட அவர்கள், தங்கள் வேலையிடத்தில் அல்லது தங்கள் வாழ்விடத்தில் தங்கள் சகாக்களுக்குத் தலைமை தாங்கி அவர்களை வழிநடத்திச் செல்வார்கள். இதன் பொருள், போராட்டத்தில் ஈடுபட் டுள்ள சமயத்தில், மிகச் சிறந்த முறையி லும் மிகவும் அர்ப்பணிப்புடனும் போராட் டத்தில் ஈடுபடுபவர்களைப் பொறுக்கி எடுத்து அவர்களுக்கு மார்க்சிய-லெனி னியத்தில் பயிற்சி அளித்து, அவர்களைக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும். அவர்களின் அன்றாடப் பணிகளிலும் பயிற்சி அளித்திட வேண்டும். அதன் மூலம் அவர்களும் மக்களுக்கு மிகவும் சிறந்த முறையில் தலைமை தாங்கிடக் கூடிய வகையில் வளர்வார்கள்.’’

இன்றைய சூழலில் தோழர் இ.எம். எஸ். ஸ்தாபனம் குறித்து தெரிவித்துள்ள அழுத்தமான கருத்துக்களை உள்வாங் கிக்கொண்டு - உழைக்கும் மக்களின் பெரும்படையைத் திரட்டுவது, வலுவான, உறுதியான, கட்சியைக் கட்டுவது - நம்முன் உள்ள முக்கிய கடமையாகும்.

கருத்துகள் இல்லை: