திங்கள், 12 அக்டோபர், 2009

இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைக்காகக் குரலெழுப்புவோம்!

உ.ரா. வரதராசன்

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் கடந்த ஓராண்டுக் காலத்தில் நேரிட்டுள்ள நிகழ்வுகள் பாரதூரமான விளைவுகளை உள்ளடக்குவதாக அமைந்துள்ளன.

இந்த ஆண்டு மே 19ம் நாளோடு “ஈழப்போர் 4” முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அறிவித்துவிட்டார். அதற்குச் சில தினங்கள் முன்பாக விடுதலைப் புலிகள் அமைப்பும் தங்களது ஆயுதங்களை மவுனிக்கச் செய்து விட்டதாக அறிவித்தது. இந்தப் பின்னணியில் இரு தரப்பினரின் இரா ணுவ நடவடிக்கைகளும் முற்றுப்பெற்றுள்ளன. இனி, மீண்டும் தனி ஈழக் கோரிக்கைக்காக ஆயுதந் தாங்கிய போர் மூளக்கூடிய சூழ்நிலை இன்று இலங் கைத் தீவில் இல்லை. ஆனால், எதிர்கா லத்திலும் தமிழ் இனப் பிரச்சனை ஒரு போருக்கு இட்டுச் செல்லும் நிலை எழாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய பிரதான பொறுப்பு இலங்கை அரசையே சார்ந்தது.

மே 21, 2009 அன்று - சரியாகச் சொல் வதென்றால், ஈழப்போர் முடிந்த இரண்டே நாட்களுக்குப் பின்னர் இந்திய அரசின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும், வெளியுறவுத் துறைச் செய லாளர் சிவசங்கர் மேனனும் கொழும்பு விற்கு விரைந்தோடிச் சென்றனர். அங்கே இவர்கள், இலங்கை அதிபர் மகிந்த ராஜ பக்சேவுடன் இந்திய அரசின் சார்பாக அதிகாரப் பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு கூட்டறிக்கை வெளியிடப் பட்டது. இலங்கை அதிபரின் இணைய தளத்தில் இன்றும் காணக் கிடைக்கிற அந்தக் கூட்டறிக்கையின் சில பகுதிகள் வருமாறு:

“இலங்கையில் இராணுவ நடவடிக் கைகள் முடிவுக்கு வந்துவிட்டதனால், நிவாரணம், மறுவாழ்வு, மீள்குடியமர்த்தல், நல்லிணக்கம் மற்றும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஆகிய பிரச்சனை கள் மீது கவனம் செலுத்த வேண்டிய தரு ணம் இது என்று இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

“உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக் களை, அவர்களது கிராமங்களில் மீண் டும் குடியமர்த்தவும், அவர்கள் இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடரும் விதத்தில் அவர்களுக்குத் தேவையான அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதி களையும், வாழ்வாதாரத்தையும் ஏற்படுத் தித் தருவது அவசரத் தேவை என்று இரு தரப்பும் வலியுறுத்தின. இந்தத் திசையில், ‘சேமநல கிராமங்களை’ (முகாம்களை) விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்து, உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக் களில் கணிசமானவர்களை அவர்களின் சொந்தக் குடியிருப்புப் பகுதிகளில் கொண்டு சென்று குடியமர்த்துவதற்கான 180 நாள் திட்டம் ஒன்றை மேற்கொள்ளக் கருதியிருப்பதாகவும் இலங்கை அரசுத் தரப்பு தெரிவித்தது.

“இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்று இரு தரப்பும் வலியுறுத்தின. 13வது திருத் தத்தைத் தமிழர் பிரதேச மாகாணங் களில் செயல்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையைத் தொடங்கப் போவதாக இலங்கை அரசு தெரிவித்தது.

“மேலும், தமிழ் மக்களின் அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு விரி வான பேச்சுவார்த்தையைத் தொடங்க இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்தது.”

இந்தக் கூட்டறிக்கையில் உறுதிய ளிக்கப்பட்ட 180 நாள் திட்டத்தில் 140 நாட்கள் இன்றோடு (அக்.9, 2009) கடந்து விட்டன. ஆனால் இன்றைக்கும் இலங் கையில் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் நிலைமை என்ன?

கடந்த ஜூலை 17ந் தேதிய நிலவரப் படி, இலங்கை அரசு வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை ஆகிய நான்கு வடபகுதி மாவட்டங்களில், இராணுவப் பாதுகாப்புடன் அமையப் பெற்ற 30 முகாம்களில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 621 பேரை அடைத்து வைத் துள்ளதாக ஐக்கிய நாடு கள் சபை அதிகா ரப்பூர்வமான தகவலை வெளியிட்டது. இந்த எண்ணிக்கையை அண்மையில் இலங்கை அரசின் பிரதம ரான ரத்தினசிரி விக்கிரமநாயகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த பிரேம் குமார் என்ற 44 வயதானவர், தன் மனைவி மற்றும் 3வயது மகளுடன் இந்த முகாம்களில் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் வேதனையுடன் கூறியது: “நாங்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்கள் அல்ல; உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த கைதிகள்”!

உலக வங்கியின் தலைவரான ரொபேட் ஷொலிக், துருக்கியில் ஒரு பத்திரிகையா ளர் சந்திப்பில் இந்த மாதத் துவக்கத்தில், “இலங்கை நாடு போர்ச்சூழலில் இருந்து முற்றிலுமாக வெளியே வர வேண்டுமெ னில், அதற்கான ஒரே வழி, முகாம்களில் உள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களுக்குத் திருப்பிச் செல்ல அனு மதிப்பதே ஆகும்” என்று கூறினார்.

ஆனால், இலங்கை அரசோ, முகாம்க ளில் உள்ள தமிழ்மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடிய மர்த்துவதற்கான முயற்சிகளையே மேற் கொள்ள மறுத்துக் காலங்கடத்தி வருகி றது. இதன் காரணமாகக் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லாத மோசமான நிலையில் உள்ள இந்த முகாம்களில் சற்றொப்ப 3 லட்சம் தமிழ் மக்கள் வதைப்பட்டு, அவலங்களைச் சுமந்து நிற்கிறார்கள்.

கடந்த ஆகஸ்ட் மாதம் வவுனியா நகர சபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இலங்கை அதிபரின் சகோதரரும் அவரது அரசியல் ஆலோசகருமான பசில் ராஜ பக்சே பேசியுள்ளது அதிர்ச்சி தருவதாக அமைந்தது. “வேறு பல நாடுகளில், உள் நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீண் டும் குடியமர்த்துவதற்குப் பல பத்தாண் டுகள் காலம் பிடித்திருக்கின்றன; சில நேர்வுகளில் ஒரு நூற்றாண்டே கூடக் கழிந்திருக்கிறது” என்று இந்தக் காலதாம தத்தை நியாயப்படுத்த முனைந்தார் பசில் ராஜபக்சே!

இலங்கை அரசின் ஊடக அமைச்ச ரான லக்ஷ்மண் யாபா அபேவர்த்த னாவோ, இம்மாதத் துவக்கத்தில் கூட, ‘குண்டுகள் நிறைந்த ஒரு பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்த முடியாது’ என்ற அரசாங்கத்தின் அறிவிப் பை வழிமொழிந்துள்ளார். ‘நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு, அடிப்படை வச திகள் ஏற்படுத்தப்படும் வரையில் இந்த மக்களை மீண்டும் குடியமர்த்துவதில் தாமதம் ஏற்படும்’ என்று, 180 நாள் திட் டத்தைப் புதைகுழிக்கு அனுப்பும் விதத் தில் அவர் பேசியுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து முல்லைத் தீவு வரையிலான பிரதேசத்தை இலங்கை ராணுவம் யுத்தக் காலத்தில் கண்ணி வெடிகள் மீது கால்பதித்துக் கொண் டேவா முன்னேறியது? இல்லையே. அப்ப டிக் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் தமிழ்மக்களைக் குடியமர்த்த ஏன் இயலாது? தேவைப்பட்டால், இன்று அகதிகள் முகாம்களைச் சுற்றிப் போடப் பட்டுள்ள முள்வேலிகளை, கண்ணி வெடிகள் அகற்றப்பட வேண்டிய பகுதி களைச் சுற்றிப்போட்டு விட்டு, எச்சரிக் கையோடு மற்ற பகுதிகளில் மக்களைக் குடியமர்த்த முடியுமே!

இலங்கைக்கு உள்ளேயும், வெளியே யும் உள்ள அரசியல் நோக்கர்கள் பரவ லாக எடுத்துக் கூறி வருகிற ஒரு செய்தி இங்கு கவனிக்கத்தக்கது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியின் அரசி யல் அறுவடையாக, உடனடியாக இலங் கையில் அதிபர் தேர்தலை நடத்தி மகிந்த ராஜபக்சே மீண்டும் அதிபராகத் திட்டமிட்டுள்ளார்; இந்த நோக்கம் நிறை வேறும் வரையில், அகதிகள் முகாம்களை அப்படியே நீடிப்பதுதான் நல்லது என்று அவர் கருதுகிறார், என்பதே அச்செய்தி. இத்தகைய குறுகிய அரசியல் லாபத்துக் காகத் தமிழ் மக்களின் வேதனையும் அவ லமும் மிகுந்த நிலைமையை நீட்டிப்பது மிக இழிவான ராஜ தந்திரமாகும்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு வழங்கு வதற்காக என்று ஐரோப்பாவில் இருந்து அனுப்பப்பட்ட 884 டன் எடையுள்ள நிவா ரணப் பொருட்கள் ஏற்றிவரப்பட்ட வணங் காமண் கப்பலைக் கொழும்பு துறைமுகத் தில் கேட்பாரற்றுக் கிடக்க வைத்தது இலங்கை அரசு. கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை இந்தப் பொருட் களை எடுத்து விநியோகிக்க செஞ்சிலு வைச் சங்கத்தினருக்கு முட்டுக்கட்டை இட்டு வந்த இலங்கை அரசு, இப்போது தான் அவற்றை விநியோகிக்க அனுமதி அளித்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக் கின்றன. மனிதநேய உதவிகளைக் கூடத் தடுத்து நிறுத்துகிற மனிதாபிமானமற்ற நடைமுறையை இலங்கை அரசு கடைப் பிடித்தது என்பது கொடுமையிலும் கொடுமை.

இந்தப் பின்னணியில்தான், இலங் கைத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பு என்பது இன்று சர்வதேச சமுதாயத்தின் முன்னர் எழுந்துள்ள முன் னுரிமைக் கடமையாக எழுந்து நிற்கிறது. இந்த வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு முழுவதும் பரவலாக எடுத்துச் செல்ல உறுதி பூண் டுள்ளது. இலங்கை அதிபருடன் கூட்ட றிக்கையில் கையெழுத்திட்டுள்ள இந் திய அரசு, இதில் தனக்குள்ள பொறுப்பைத் தட்டிக் கழிக்க அனுமதிக்க முடியாது.

ஈழப்போர்- 4 நடைபெற்ற காலகட்டத் தில் சொல்லப்பட்ட காரணங்கள் எதுவும் இன்று இருக்க வாய்ப்பில்லாத சூழலிலும் கூடத் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன் பிடி உரிமையும், பாதுகாப்பும் இன்று இலங்கை அரசின் தாக்குதலுக்கு இலக் காகி நிற்பது தொடர்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு ஏற்பாடும், உத்தரவாதமான மீன்பிடி உரிமையும் கிடைக்கச் செய்யவும் மத்திய அரசு உறுதியான, விரைவான நடவடிக் கை மேற்கொள்வது அவசர அவசிய மாகும்.

கருத்துகள் இல்லை: