சனி, 12 டிசம்பர், 2009

ஜெய்ராம் ரமேஷ் எந்த நாட்டின் அமைச்சர்?

சனிக்கிழமையன்று கோபன்ஹேகன் சென்ற இந்தியக்குழு பயணித்த விமானத்தில், அக்குழுவுடன் செல்ல வேண்டிய இருவர் ஏற மறுத்துவிட்டனர். அவர்களில் ஒருவர், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முன்னாள் செயலாளர் ஆவார். மற்றொருவர், இந்திய அரசு அதிகாரியாவார். இருவருமே, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பசுமைக்குடில் வாயு வெளியேற்றக்குறைப்பு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபன்ஹேகன் செல்ல மறுத்துவிட்டார்கள்.

தனிநபர் வாயு வெளியேற்றம்

வளர்ந்த நாடுகள், வாயு வெளியேற்றக்குறைப்பு இலக்கை அறிவிக்க வேண்டுமென்று, வளரும் நாடுகளை குறிப்பாக சீனாவையும் இந்தியாவையும் கட்டாயப்படுத்தின. ஒவ்வொரு தனிநபருக்கும் வாயு மண்டலத்தில் இடம் உண்டு என்ற சமத்துவ தத்துவத்தை வளர்முக நாடுகள் கைவிட வேண்டுமென்று அவை வற்புறுத்தின. மேலும் தனிப்பட்ட நாடுகளின் வாயு வெளியேற்றத்தில் கவனம் செலுத்துமாறு அவை கூறின.

ஒவ்வொரு நாட்டின் தனிநபர் வருமானம் கணக்கிடப்படுவது போல், தனிநபர் வாயு வெளியேற்றமும் கணக்கிடப்படுகிறது. இதன்படி வளர்ந்த நாடுகளின் தனிநபர் வாயு வெளியேற்றம் அமெரிக்காவில் 19.1, ஆஸ்திரேலியாவில் 18.8 மற்றும் கனடாவில் 17.4 மெட்ரிக் டன் ஆக உள்ளன. இது இந்தியாவில் 1.2 மற்றும் சீனாவில் 4.6 மெட்ரிக் டன் ஆக உள்ளன. இதன்படி கணக்கிட்டால் வளர்ந்த நாடுகள் குறைக்க வேண்டிய இலக்கு அதிகமாகவும், வளரும் நாடுகள் குறைக்க வேண்டிய இலக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். இதை ஏற்க வளர்ந்த நாடுகள் மறுக்கின்றன. அனைத்து நாடுகளுக்கும் பொதுவான இலக்கு நிர்ணயிக்க வேண்டுமென்று அவை கூறுகின்றன. அவை வளரும் நாடுகளை நிர்ப்பந்தித்தன. பாங்காங் மாநாட்டில் அவை எடுத்த நிலைபாடு கோபன்ஹேகன் மாநாட்டை தோல்வியின் விளிம்பில் நிறுத்தியுள்ளன.

அமைச்சரின் பல்டி

அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமருக்கு எழுதிய ரகசிய கடிதத்தில், இந்திய நிலைபாட்டில் தீவிர மாற்றங்கள் தேவை என்று அவர் கூறினார். சர்வதேச ஒப்பந்தத்திற்குள் அமெரிக்காவைக் கொண்டுவர நமது நிலைபாட்டில் சமரசம், வாயு வெளியேற்றம் குறித்து உள்நாட்டில் சட்டம் நிறைவேற்றல், ஜி-77 நாடுகள் உடன் சீனா அமைப்பைக் கைகழுவிவிட்டு, ஜி-20 நாடுகளுடன் இணைந்துபோதல், வளர்ந்த நாடுகள் அளிக்கும் தொழில்நுட்பம் மற்றும் நிதிஉதவியை, பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் இருந்து துண்டித்தல் ஆகியவை அவர் குறிப்பிட்ட மாற்றங்களாகும்.

இந்திய நிலைபாட்டில் இருந்து மாறுபட்டு நிற்பது ஜெய்ராம் ரமேஷுக்கொன்றும் புதிதல்ல. பருவநிலை மாற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உள்நாட்டு நிதி பயன்படுத்தப்பட்டிருந்தால் அந்நடவடிக்கைகளை சர்வதேச கண்காணிப்புக்கு உட்படுத்த முடியாது என்பது இந்தியாவின் நிலைபாடு. சர்வதேச உதவியுடன் நடைபெறும் திட்டங்கள் மட்டுமே கண்காணிப்புக்கு அனுமதிக்கப்படும். அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தபோது, இந்திய நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணிப்புக்கு உட்படுத்துவதில் இந்தியாவுக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறினார். இந்தியாவில் அவர் பலத்த கண்டனத்துக்கு ஆளானார்.

ஒவ்வொரு நாடும் உள்நாட்டில் உறுதிஎடுக்க வேண்டும் என்று பாங்காங் மாநாட்டில் அமெரிக்க பிரதிநிதி பெர்ஷிங் பேசினார். அதாவது ஒவ்வொரு நாடும் வாயு வெளியேற்றச் சட்டங்களை தனித்தனியே நிறைவேற்ற வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட கட்டுப்படுத்தக்கூடிய சர்வதேசச் சட்டங்களை விட இவையே சிறந்தது என்று கூறிவந்தார். பெர்ஷிங் கூறியதை அப்படியே ஏற்றுக் கொள்வதுபோல், இந்தியா வாயு வெளியேற்றச் சட்டம் இயற்ற வேண்டுமென்று அவர், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலைபாடு கியோட்டோ சாசனத்தையே அழித்துவிடும். ஒவ்வொரு நாடும் தன்னால் முடிந்ததைச் செய்யட்டும். அறிவியல் கூறுவதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பது அமெரிக்காவின் நிலைபாடு.

பருவநிலை மாற்றத்தை தற்காலிகமாக ஏற்றுக் கொள்வதற்கும், எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏழை மற்றும் வளர்முக நாடுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளை வளர்ந்த நாடுகள் அளிக்க வேண்டும். தொழிற்புரட்சி தொடங்கிய 1850 முதல் வளர்ந்த நாடுகள் வாயு மண்டலத்தில் பசுமைக்குடில் குவித்து வந்தன. அந்த வரலாற்றுச் சுமையினைத் தீர்க்கும் வழியாக இது கூறப்பட்டது. பாவத்தின் சுமையை அவர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இதுதான் ஜி-77 உடன் சீனா அமைப்பு எடுக்கும் நிலைபாடு. இந்த நிலைபாட்டை இந்தியாவும் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா தன்னையொத்த நாடுகளிடமிருந்து தனிமைப்பட்டு நிற்கும். நாடாளுமன்றத்திலும், டைமஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியிலும் ஜெய்ராம் ரமேஷ் கூறிய கருத்துக்கள் நாட்டில் கடும் கண்டனத்தை எதிர்கொண்டன. ஜெய்ராம் ரமேஷ் யாருக்காக வாதாடுகிறார். இந்தியாவுக்காக வாதாட வேண்டிய நபர், இந்தியா போன்ற நாடுகளுடன் இணைய வேண்டிய நபர், ஏன் அமெரிக்காவின் நிலைபாட்டை ஆதரிக்கிறார். அமெரிக்காவின் இளைய கூட்டாளி என்பதை அவர் மெய்ப்பிக்க விரும்புகிறார் போலும்.

கருத்துகள் இல்லை: