வியாழன், 7 அக்டோபர், 2010

தலித் மீது கொடுமை: நாய் கூட ஒதுக்கி வைப்பு

தலித் பெண் கொடுத்த ரொட்டியை சாப்பிட்ட நாயை ராஜ்புத் குடும்பத்தை சேர்ந்த நபர் ஒதுக்கி வைத்த கொடூரம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள மொரினா மாவட்டம் மாணிக்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்பால் சிங், இவர் ராஜ்புத் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஷெரு என்ற நாயை வளர்த்து வந்தார். இவரது பண்ணையில் சுனிதா ஜாதவ் என்ற தலித் பெண்ணின் கணவர் பண்ணை தொழிலாளராக இருந்து வருகிறார். கடந்த வாரம் தனது கணவருக்கு மதிய உணவை சுனிதா கொண்டு வந்தார். அவரது கணவர் சாப் பிட்டது போக, மீதம் ஒரு ரொட்டி இருந்தது. அந்த ரொட்டியை பண்ணை உரிமை யாளர் ராம்பால் சிங்கின் ஷெரு நாய்க்கு தந்தார். அந்த ரொட்டியை நாய் சாப்பிடுவதை பார்த்த ராம்பால் சிங் ஆத்திரம் அடைந்து தலித் பெண்ணை தகாத வார்த்தையால் திட்டினார்.

பண்ணை உரிமையாளர் திட்டியதை தொடர்ந்து அப்பிரச்சனை முடிந்துவிட்டது என சுனிதா ஜாதவ் நினைத்தார். ஆனால் ரொட்டியை சாப்பிட்ட ஷெரு நாய் தீண்டத்தகாத உயிர் என ராம்பால் கிராம பஞ்சாயத்தில் முறையிட்டார். இந்த பஞ்சாயத்தில் ஷெரு நாயை சுனிதா ஜாதவ் குடும்பத்தினர் வளர்க்க வேண்டும் என்றும் அந்த நாய்க்கு ரொட்டியை தந்ததற்காக ரூ.15 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என தீர்ப்பு கூறப்பட்டது.

கிராம பஞ்சாயத்து தீர்ப்பால் மனம் கொதித்த சுனிதா மற்றும் அவரது சகோதரர் சுமா வல்லி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த தீண்டாமை கொடுமையை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை பிரச்சனைகளை கையாளும் கல்யாண் காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு துறையின் டி.எஸ்.பியிடம் சுனிதா புகார் அளித்தும் இதுவரை ராம்பால் சிங் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமப்பஞ்சாயத்து நபர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட வில்லை என சுனிதா வேதனையுடன் கூறினார்.

இந்த நிலையில் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு (மொரினா) டிஎஸ்பி பல்தேவ் சிங் கூறுகையில், சுனிதா அளித்த புகார் வந்துள்ளது. இதில் தலித் பெண் அளித்த ரொட்டியை சாப்பிட்ட நாய் தீண்டத்தகாததாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்தும், குறிப்பிட்ட தலித் குடும்பத்தின ருக்கு அபராதம் விதிக்கப்பட்டி ருப்பது குறித்தும் தெரிவிக்கப் பட்டுள்ளது என்றார்.

ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா

கருத்துகள் இல்லை: