செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

இதுதான் அமெரிக்கா


மனித உரிமை குறித்து உலக நாடுகளுக்கு வாய் கிழிய வகுப்பெடுக்குகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஆனால் பிற நாட்டு மக்களை புழுக்களாய், புன்மைப் பூச்சிகளாய் கருதுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமெரிக்காவை தாஜா செய்ய எந்த அளவுக்கும் இறங்குகிறது. ஆனால், இந்திய மக்கள் என்றாலே அமெரிக்க நிர்வாகத்திற்கு இளக்காரம்தான்.

இதற்கு சமீபத்திய உதாரணம்தான் அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் கணுக்காலில் கண்காணிப்புக் கருவியை பொருத்தி இழிவு படுத்தியுள்ள நிகழ்வாகும். அமெரிக்காவில் படிக்கலாம் என்று ஆசைகாட்டி விளம்பரங்கள் இந்தியாவில் செய்யப்படுகின்றன. இதை நம்பி அமெரிக்கா செல்லும் பல மாணவர்கள் ஏமாறு கின்றனர்.

கலிபோர்னியாவில் உள்ள டிரை-வேலி பல்கலைக்கழகத்தில் அமெரிக்கப் போலீசார் சோதனை நடத்தியபோது அங்குள்ள மாணவர் களுக்கு போலி விசா வழங்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். இதற்கு எந்தவகையிலும் மாணவர்கள் பொறுப்பல்ல. போலி ஏஜெண்டு களால் இவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் 1,555 பேர் இவ்வாறு போலி விசாவில் படித்து வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த பல் கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. நியாய உணர்ச்சியின் அடிப்படையில் அந்த மாணவர்கள் பயில மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய அமெரிக்க நிர்வாகம், மாணவர்களை ஒரு முகாமில் அடைத்து சித்ரவதை செய்து வருகிறது. உச்சகட்டக் கொடுமையாக மாணவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க கணுக்காலில் நிர்ப்பந்தமாக கண்காணிப்புக் கருவி பொருத்தியுள்ளனர். பெருந்தொகை கொடுத்தவர்களை ஜாமீனில் விடுவித்துவிட்டு, முடியாதவர்களை இவ்வாறு கொடுமைப்படுத்துகின்றனர்.

அமெரிக்காவில் பயிலச்சென்ற இந்திய மாணவர்கள் மட்டுமின்றி தலைவர்களும் கூட அவமானத்திலிருந்து தப்புவதில்லை. முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் துவங்கி, முன்னாள் துணைப்பிரதமர் எல்.கே.அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், திரைக்கலைஞர்கள் கமல்ஹாசன், ஷாருக்கான், மம்முட்டி போன்றவர்களும் அமெரிக்க விமான நிலையங்களில் சோதனை என்ற பெயரில் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். அண் மையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதரும் கூட இவ்வாறு இழிவுபடுத்தப்பட்டார்.

வழக்கம்போல இந்திய அயல்துறை அமைச் சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்திய மாணவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளதை கண்டிப்பதாக கூறியுள்ளார். ஆனால் இது போதாது. கடுமை யான வார்த்தைகளால் அமெரிக்க அதிகாரி களின் இழிசெயலை கண்டிக்க வேண்டும். அமெரிக்க தூதரை அழைத்து இந்தியாவின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நிவாரணம் மற்றும் கல்வி கிடைத்திட உரிய ஏற்பாடுகளை இந்திய அரசு செய்ய வேண்டும்.

இந்தியாவில் அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு இத்தகைய இழிவு ஏற்பட்டிருந்தால் அமெரிக்கா எந்த அளவுக்கு கோபமடைந்திருக்குமோ அதே கோபத்தை இப்போது இந்தியாவின் சார்பில் வெளிப்படுத்த வேண்டும். முதலில் இந்தியா என்பது அமெரிக்காவின் காலனி நாடு அல்ல என்ற உணர்வு ஆட்சியாளர்களுக்கு வர வேண்டும்

கருத்துகள் இல்லை: