திங்கள், 18 ஏப்ரல், 2011

கருணாநிதியால் களங்கப்பட்ட கறுப்பு- சிவப்பு!


கேரள- தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். தமிழகத் தேர்தல் களம் குறித்து எழுதும்போது, ஆளும் கட்சியான திமுகவின ரால், பெருமளவு வாக்காளர்களுக்கு லஞ்சம் தரப்பட்டது குறித்தும், ஒருகாலத்தில், மாநில சுயாட்சி, சுயமரியாதை குறித்தெல்லாம் பேசிய அந்தக் கட்சி, தேர்தலில் எப்படியா வது வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே கார ணத்திற்காக இந்த அளவிற்கு, இறங்கியது குறித்தும் விரிவாக எழுதியிருந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த திமுகவின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங் கோவன் எம்.பி, “மஞ்சள் பார்வையாக மாறிய சிவப்புப் பார்வை” என்ற தலைப்பில் முரசொலி ஏட்டில் (18.4.11) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை மனம்போனபடி திட்டித் தீர்த்துள்ளார்.

திமுக, தேர்தல் களத்தில் தனது சாத னைகளை எல்லாம் எடுத்துக்கூறி, மக்கள் மன்றத்தில் வாக்குக் கேட்டதாக தனது கட்டு ரையைத் துவக்கியுள்ளார். திமுக அரசின் சாதனையை வெளிநாட்டு ஏடுகள் பாராட் டும் வண்ணம், பல்வேறு மகிழுந்து நிறுவனங் கள் அமையப் பெற்றதாக கூறியுள்ளார். அவ் வாறு அமைந்த மகிழுந்து நிறுவனங்களில், தொழிற்சங்கங்கள் அமைக்க அனுமதிக்கப் பட்டதா? இந்தப் பிரச்சனையில் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று அடிக்கடி கூறிக் கொள்ளும் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, தொழிலாளர்களின் பக்கம் நின் றதா? அல்லது பன்னாட்டு நிறுவனங் களுக்கு நடைபாவாடை விரித்ததா? என் பதையும் இளங்கோவன் சேர்த்துக் கூறி யிருக்கலாம்.

வெளிநாட்டு ஏடுகள் பாராட்டுவது இருக்கட்டும்; திமுக அரசு மீது நியாயமான விமர்சனங்களை முன்வைத்த தமிழ்நாட்டு ஏடுகள் மீது சாதிய முத்திரை குத்தப்பட்டு, எந்த அளவிற்கு புழுதிவாரி தூற்றப்பட்டது என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்.

சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்பதாக இருந்தால், தேர்தல் ஆணை யமே திக்குமுக்காடிப் போகும் அளவிற்கு, தமிழகம் முழுவதும் பணவெள்ளத்தைப் பாய விட்டது ஏன்? ‘மத்திய - மாநில அதிகாரங் களைப் பயன்படுத்தி, எங்களால் எந்த அள விற்கு கொள்ளையடிக்க முடிந்துள்ளது பாருங்கள்’, என்ற சாதனையையும் எடுத் துக் காட்டத்தானா?

ஆதிக்க சக்திகளை அடியோடு வேர றுக்க தந்தை பெரியார் இயக்கம் கண்டார் என்று இளங்கோவன் கூறுகிறார். ஆனால், திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில், அதி முக ஆட்சியில் காஞ்சி சங்கராச்சாரியார் கள் கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல் லப்பட்ட காட்சியை, “ஞாபகம் வருதே” என்று அடிக்கடி ஒளிபரப்பியதே... இது யாரை திருப்திப்படுத்த என்பதை விளக்குவாரா? ‘தத்துவ மேதை’ டி.கே.சீனிவாசனின் புதல்வர்.

தத்துவ மேதை டி.கே.சீனிவாசனுக்கு, திமுகவில் என்ன மரியாதை தரப்பட்டது என்பதையும், கனிமொழியின் மகன் ஆதித் யாவுடன் கிரிக்கெட் விளையாடி சில அமைச் சர்கள் “காக்கா” பிடிக்க முயல்வதாக ஆனந்தவிகடன் எழுதியதையும் சேர்த்து நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிய வில்லை.

கேரளத்தில் கே.ஆர்.கௌரிக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக கண்ணீர் வடிக் கிறார், இளங்கோவன். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை எந்த வொரு முடிவாக இருந்தாலும் அது கட்சி யின் அனைத்து நிலைகளிலும் முறையாக விவாதித்தே எடுக்கப்படும். திமுகவைப் போல மத்திய அரசிலிருந்து விலகுவதாக உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி முடிவெடுப்பது, அந்த முடிவை, மு.க.அழகிரி, தயாநிதி மாறன் என்று முதல்வர் குடும்பத்து உறுப்பினர்கள் மட்டுமே பேரம்பேசி முடித்து, அந்த முடிவை கைவிடுவது என்ற நடை முறையெல்லாம் இல்லை.

மாநிலம் கடந்து எப்போதோ நடந்ததற்கு இப்போது வருத்தப்படும் இளங்கோவன், சென்னை மயிலாப்பூரில், கட்டிய மனைவி யையே ஏமாற்றிய கே.வி.தங்கபாலு குறித் தும், ஒரு சில வார்த்தைகள் கூறியிருக்கலாம்.

கொள்கைவாதிகளான இடதுசாரி களுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்கிறார், இளங்கோவன். இவர் வருத்தப்படும் அள விற்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் அவ சர நிலை காலத்தில், அதை எதிர்த்து நின்ற கட்சியான திமுக, காங்கிரசிடம் இந்த அள விற்கு தெண்டனிட்டு கேட்ட இடங்களை கொடுக்கிற அளவிற்கு, பணிந்துபோகும் அளவுக்கு என்ன நடந்தது? என்பதுதான் புரியாத புதிராக, அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாக இருக்கிறது.

பிரகாஷூம், பிருந்தாவும் அரசியல் வானில் திகழ்வதை திமுக விமர்சித்த தில்லை என்று அழகாக முடிச்சவிழ்க்கிறார், இளங்கோவன். தோழர் பிரகாஷ்காரத், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படிக் கும் போதே மாணவர் இயக்கத்தால் ஈர்க் கப்பட்டு, பொதுவாழ்க்கைக்கு வந்து, தனது உழைப்பால் பொதுச்செயலாளராக உயர்ந் தவர். அதேபோல தோழர் பிருந்தாவும் மாணவப் பருவத்திலிருந்தே இயக்கத்தில் இணைந்து முன்னேறியவர். இயக்கத்தில் இணைந்த இவர்கள், இல்வாழ்விலும் இணைந்தனர். தயாநிதிமாறனைப் போன்று, ஒரு சில நாட்களிலேயே எம்.பி.யாகி, மத்திய அமைச்சர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டவர் கள் அல்ல!

தோழர் உமாநாத், அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தில் படிக்கிற காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, கட்சி யில் இணைந்து சிறைவாசத்தையும், சித்ர வதைகளையும் இன்முகத்தோடு ஏற்று, போராட்டக் களங்களுக்கு தலைமையேற்று, தன்னிகரற்ற தலைவராக உயர்ந்தவர்.

தோழர் பாப்பா உமாநாத், குழந்தைப் பருவத்திலேயே, பொன்மலைப் போராளி களுக்கு உதவி, அவர்களால் அன்போடு “பாப்பா” என்றழைக்கப்பட்டு, அதுவே அவ ரது பெயராகவும் மாறியது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், சிறையில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தனது தாயின் முகத்தைக் கூட பார்க்க, கட்சியி லிருந்து விலகுவதாக எழுதிக்கொடுத்தால் அனுமதிப்பதாகவும் சிறை நிர்வாகம் கூறிய நிபந்தனையை ஏற்க மறுத்து தியாகம் செய்தவர். அவரும் பல ஆண்டுகள் சிறை யில் இருந்தவர். இருவரும் இல்லறத்திலும், இயக்க நல்லறத்திலும் இணைந்து நின்றனர். கட்சியிலேயே அவர் இல்லை என்று அறி விக்கப்பட்ட மு.க.அழகிரியைப் போன்று, அமைச்சர் பதவியை அடைந்தவர்கள் அல்ல! தோழர் உ.வாசுகியும், கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து படிப்படியாக உழைத்து முன்னேறியவர்தான்.

இதையெல்லாம் குடும்ப அரசியல் என்று திமுக ஒருபோதும் கூறமுடியாது. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, குடும்பத்தோடு கட்சியில் இருப்பது என்பது, போராட்டங்களில் பங்கேற்பதற்கே அன்றி, பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக அல்ல!

முதல்வர் குடும்பத்தில் மட்டுமின்றி, அமைச்சர்களின் வாரிசுகள் பலரும் களத் தில் இறக்கப்பட்டுள்ளனரே, இது முற் போக்கு வாதமா? ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன், வீரபாண்டியார் மற்றும் அவ ரது மகன், டி.ஆர்.பாலுவின் மகன், தூத் துக்குடி பெரியசாமியின் மகள், ஈரோடு பெரியசாமியின் மகன், நெல்லை மேயர் சுப் பிரமணியனின் மகன் என்று பல இடங் களிலும் வாரிசுகள் களமிறக்கப்பட்டிருப்பது, முதல்வர் குடும்ப ஆதிக்கம் கண்ணை உறுத்தக்கூடாது என்பதற்காகத்தானா?

அவரவர் தொழில் துவங்கி, அதில் முன் னேறினால் அது ஆதிக்கமல்ல; என்று வாதி டுகிறார், இளங்கோவன். தொழில் துவங்கி முன்னேறுவது ஆதிக்கம் என்று யாரும் கூற மாட்டார்கள். ஆனால், உதயநிதி ஸ்டா லின், தயாநிதி அழகிரி போன்றவர்கள், இந்த வயதிலேயே பலநூறு கோடி முதலீடு செய்து படமெடுக்கிறார்களே... வேறு யாரையும் படமெடுக்க விடாமல் தடுக்கி றார்களே... இந்தப் பணம் எங்கிருந்து வந்தது; அரசு அதிகாரம் தவறாக பயன்படுத் தப்படவில்லையா? என்ற கேள்வி எழாமல் போகாது.

பூமாலையாக துவங்கிய சன் டி.வி., இன்றைக்கு, அகலக்கால் பரப்பி, உலக ளாவிய நிறுவனமாக உயர்ந்திருக்கிறதே... அது தொழில் திறமை மட்டும்தானா? அப் படியென்றால், ராயல் கேபிள் விஷனுக்கும், சுமங்கலி கேபிள் விஷனுக்கும் போட்டி எதற்காக? கொலை வரை போனதே, அது வும் “தொழில்” திறமைதானா?

திமுகவின் கொள்கைப் பரப்புச் செய லாளர் ஆ.ராசா, திகார் சிறையில் அடைக் கப்பட்டது, இந்தி எதிர்ப்புப் போரிலா? ஆலய நுழைவுப் போரிலா? திரைப்படக் கலைஞர்கள் வடிவேலு, குஷ்பு போன்றவர் களை நம்பி, திமுக பிரச்சாரத்தில் இறங்கிய நிலை கண்டு, தமிழருவி மணியன் போன் றவர்கள் வருத்தப்பட்டனர். ஆனால், இளங் கோவன் போன்றவர்களுக்கு இந்த நிலை உண்மையிலேயே வருத்தமளிக்கவில் லையா?

பொதுவுடைமைக் கட்சியினர், தங்களுக் குப் பின்னடைவு என்றால், சோரம் போகவும் தயங்க மாட்டார்கள் என்று இளங்கோவன் கூறியுள்ளார். பாஜக, காங்கிரஸ் தலைமை யிலான கூட்டணி அரசுகள் என்று பதவிக் காக மாறி, மாறி சோரம் போனது யார்? பாஜ கவுடன் சேர்ந்ததன் மூலம் கொள்கையைக் குழிதோண்டிப் புதைத்தது யார்? திமுகவில் யார் அமைச்சராக வேண்டும் என்பதைக் கூட நீரா ராடியா போன்ற அதிகாரத் தரகர் களும், அம்பானி போன்ற பெருமுதலாளி களும் அல்லவா, தீர்மானிக்கிறார்கள்... இதை வீரம் என்கிறாரா, இளங்கோவன்?

சிவப்புப் பார்வை மஞ்சளாக மாற வில்லை. மாறாக, கறுப்பு- சிவப்புதான் இன் றைக்கு களங்கப்பட்டு நிற்கிறது. பதவி பறிபோய்விடும் என்பதற்காக பதறுபவர்கள் அல்ல, கம்யூனிஸ்டுகள். தோல்வி பயத்தில் தேர்தல் ஆணையத்தையே கடித்துக் குத றிக் கொண்டிருப்பவர்கள், யார் என்பதை உலகறியும்.

மதுரை சொக்கன்

4 கருத்துகள்:

thiruninraoor tholar சொன்னது…

Thiruttu Kalyanam , kalla kadhal kalyan panradhu dhan inraiya communist's thalaiyaya pani enpathai maravadheer tholare

vijayan சொன்னது…

1967 -இல் காங்கிரஸ்-ஐ தோற்கடிக்க ராஜாஜி,அண்ணாதுரை,இஸ்மாயில் சாஹிப்,பேப்பர் ஆதித்தன் இவர்களுடன் சேர்ந்தபோதே கம்யூனிஸ்ட் களின் கொள்கை நீர்க்க ஆரம்பித்துவிட்டது.

விடுதலை சொன்னது…

thiruninraoor tholar அவர்களுக்கு

திருட்டு கல்லியானம் பன்ற வேலை கம்யூனிஸ்ட்களுக்கு இல்லை சாதியின் பேரால் மதத்தின் பேரால் வர்க்கத்தின்பேரால் திருமணங்களை தடை செய் நினைக்கிறவர்களுக்கு எதிராக ஊர் அரிய சட்ட பூர்வமான திருமணங்களை கம்யூனிஸ்ட்கள் நடத்திக்கொண்டே இருப்பார்கள்

விடுதலை சொன்னது…

vijayan அவர்களுக்கு

அன்றைக்கு ஒரு வலுவான கூட்டணியை வைத்ததால்தான் இன்றை வரை காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பணமுதலைகளின் கட்சியாக சுருங்கிபோய் உள்ளது. திமுகாவின் கொள்கை வேண்டுமானால் நீர்த்துபோகலாம் கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கை வலுவடைந்து கொண்டேதான் இருக்கும்