ஞாயிறு, 29 மே, 2011

சினிமாவை நம்பி சென்னைக்கு வராதீர்!:சீனு ராமசாமி



சென்னை சாலிகிராமம் வீடு. ஆள் அரவமற்ற காலைப் பொழுது. மாடிப் படிகள் ஏறி கதவைத் தட்டினால், முகமலர்ந்து சிரிக்கிறார் சீனு ராமசாமி.

தேசிய விருதுபெற்ற "தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் இயக்குநர். மௌனம் குடித்த சில நிமிடங்களில் "நல்லாயிருக்கீங்களா' என இருவரும் ஒரே நேரத்தில் கேட்க, இன்னும் பலத்த சிரிப்பு.

அன்றைக்கு என் குரு பாலுமகேந்திராவின் பிறந்த நாள். நான், பாலா, வெற்றிமாறன், சுகான்னு எல்லோரும் கூடி அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வந்தோம். வீட்டுக்கு வருகிறேன். ""என்னங்க...'' பதறுகிறாள் என் மனைவி. "உங்க படத்துக்கு விருதுன்னு டி.வி.யில் நியூஸ் போகுது''ன்னு சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறாள். டி.வி.யில் பார்த்தால், என் படத்துக்கு விருது கிடைத்த செய்தி.

""சந்தோஷமடா. உன் சினிமா உலக சினிமாவுக்கு ஒப்பானது'' என்கிறார் பாலு மகேந்திரா. ""வாழ்த்துகள் தம்பி...''ன்னு உற்சாகம் மூட்டுகிறார் மகேந்திரன். எல்லோருக்கும் நன்றி.

உழைக்க தயாராக இருக்கிற எல்லோருக்கும் இந்த விருது தொட்டுவிடும் தூரம்தான். அதற்கு நானே உதாரணம். இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கைக்கு இந்த விருது அடையாளம் அவ்வளவுதான்.

ஆனால் இது என் முழு வாழ்க்கைக்குமான கிரீடம் கிடையாது. நல்ல சினிமாவை இந்த சமூகமும் அரசும் அங்கீரித்திருக்கிறது. பெரும் மகிழ்ச்சிதான். ஆனாலும் ஒரு படைப்பாளியாக இந்த வெற்றியா மகிழ முடியாத நிலையில்தான் இருக்கிறேன்.

என்ன சொல்றீங்க. இந்த விருதில் திருப்தி இல்லையா?

என்னைப் போன்றவர்களுக்கு சினிமா உலகில் யார் ஆதரவு? குப்பைகளும், மூன்றாம் தர படங்களுமே இங்கு ஆக்கிரமித்து இருக்கின்றன. 35 நாள்களில் முடித்து விட்டு, ரிலீசுக்கு ஆறு மாதங்கள் வரை காத்திருந்தேன். என் படத்தைத் திரும்பிப் பார்க்கக்கூட நாதி இல்லை. ஒரு வழியாக கஷ்டப்பட்டு ரிலீஸ் செய்தால், 25 நாள்களிலேயே தமிழகமெங்கும் படம் தூக்கப்பட்டு விட்டது. மதுரை "மினி பிரியா' தியேட்டரில் மட்டும் படம் நல்லாயிருக்குன்னு சொல்லி கூடுதலாக இரண்டு வாரங்கள் ஓட்டினார்கள். அப்போதுதான் பத்திரிகைகள் என் சினிமாவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடின. என்ன பயன்? "மன்மதன் அம்பு' போன்ற பெரிய கமர்ஷியல் படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் பயன் இல்லாமல் போனது. "தென்மேற்கு பருவக்காற்றின்' 25-வது நாள் போஸ்டரை இதே வடபழனி சாலையில் ஏக்கத்துடன் பார்த்து நின்ற நிமிஷங்கள் மனசுக்குள் ரணமா இருக்கு. சாலையோர சி.டி. கடைகளில் அதிகமாக விற்பனை ஆன படம் "தென்மேற்கு பருவக்காற்று'தான்னு ஒரு வியாபாரி சொன்ன போது திகீர்ன்னு ஆச்சு. அதைத்தான் என் படைப்பும் சொல்லும். இரண்டு நாளைக்கு முன் ""சார் நான் உங்ககிட்ட அசிஸ்டெண்ட்டா சேரணும்''ன்னு ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து போன் செய்தவனுக்கு நான் என்ன சொன்னேன்னு தெரியுமா? சினிமாவுக்கு வாராதேன்னு சொன்னேன்!

இந்த சமூகம் இப்போது என் படைப்புக்குத் தந்திருக்கிற மரியாதையை வைத்து என் வாழ்வை நான் ஓட்ட முடியுமான்னு தெரியலை. இனி எந்த தைரியத்தில் நான் நேர்மையான, தத்துவமான, சத்தியமான படைப்புகளை கொடுக்க முடியும்.

யார் மேல்தான் கோபம்? சினிமாக்கள்தான் அதிகமாக வருகிறதே?

எனக்கு சினிமா மட்டும்தான் தெரியும். அரசியல் தெரியாது. அரசியல்வாதிகளுக்கு அறிவுரை சொல்லும் பக்குவமும் எனக்கு கிடையாது. என்னைப் போல் சினிமாதான் வாழ்க்கைன்னு சென்னை முழுவதும் நிறைய பேர் சுத்தி வர்றாங்க. இந்த நிமிஷம் பலர் பஸ் ஏறியிருப்பாங்க. அவங்களுக்கு இதைவிட்டா வேறு எதுவும் தெரியாது. தயவு செய்து அவர்களின் கனவுகளைக் கலைக்காதீர்கள். அவர்களின் கற்பனைகளைச் சிதைக்காதீர்கள். லாப வெறியில் சினிமாவை பலியாக்கி விடாதீர்கள். சினிமாவைச் சினிமாவாக இருக்கவிடுங்கள். படைப்பாளியை சுதந்திரமாக சுவாசிக்க விடுங்கள். அது போதும்.
நன்றி
தினமணி

கருத்துகள் இல்லை: