“ஆவூனா எதுக்கு காசு எடுக்குறீங்க, நடிகர் ஜீவாவோடு பேசுனேன்னு சொல்லி நேத்து 15 ரூபா எடுத்திருக் கீங்க. நான் எதுக்கு அவரு கூட பேசணும், என்ன என் குடும்பத்தில குழப் பம் பண்றீங்களா”...
“இப்படித்தான் போன மாசம் முழுக்க வேல்டுகப் மெசேசுனு சொல்லி தினமும் மூன்றுரூபா, மூன்றுரூபா எடுத்தீங்க. உங்க மனசுல என்ன நெனச்சுட்டு இருக்கீங்க”இது கோவை அவினாசி சாலை லட்சுமி மில்லில் உள்ள தனியார் தொலைபேசி நிறுவனமையத்தில் (வாடிக்கையாளர் மையம்) காரசாரமாக வெடித்த ஒரு பெண்மணியின் குரல். அநேகமாய் பல தனியார் தொலைபேசி நிறுவன மையத்தில் வாடிக்கையாளர்களின் மேற்கண்ட ஆவேச குரலை கேட்க முடியும்.
உலகளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக செல்போன் சேவை யை பயன்படுத்தும் நாடு இந்தியா தான். இத்தகைய மிகப்பெரும் சந்தையை கொண்டுள்ள இந்தியாவில் தனியார் தொலைப்பேசி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சேவை(?) செய்து கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆண் டுகளில் அதிக தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடாக இந்தியா இருக்குமென்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்நிலையில் தொலைக்காட்சியிலும், தெருக்களிலும்வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்து வரும் போட்டியில் பல தனியார் தொலைப்பேசி நிறுவனங்கள் பல விதங்களில் விளம்பரங்கள் செய்து புதுப்புது வாடிக்கையாளரை கவர்ந்து வருகிறது.
தனியார் துறையின் மீது ஒரு மோகத்தை முதலாளித்துவ ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பியதன் விளைவாக அரசு துறையை விட தனியார் துறைகள்தான் சிறந்தது என்ற சமுக பொதுபுத்தியை மனித மூளைக்குள் உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக தனியார் தொலைப்பேசி நிறுவனம் மூலம் இணைப்பு பெற்றவர்கள் “ஏன்டா இத வாங்கி தொலைச்சோம்னு இருக்கு” என மனம்நொந்து புலம்பிடும் நிலை தற்பொழுது நிலவுகிறது. இந்த புலம்பலுக்கு காரணம் வாடிக்கையாளருக்கு தெரியாமலேயே அவர்களின் பணத்தை சுரண்டுவது என்பது தனியார் தொலைப்பேசி நிறுவனங்களின் வாடிக்கையாகிவிட்டது என்பதே ஆகும்.
இத்தனியார் தொலைப்பேசி நிறுவனங்களின் இத்தகைய நவீன திருட்டின் காரணமாக அதிகளவில் பாதிக்கப்படுவது “ப்ரிபெய்டு” வாடிக்கையாளர்தான். முதல் நாள் வாடிக்கையாளர் பேசுவதற்காக பண ஏற்றுதல் செய்திருப்பார், மறுநாள் ஏற்றப்பட்ட தொகையில் ( வரி உட்பட பிடித்தம் போக) பாதிதானிருக்கும் . பல நேரங்களில் பூஜ்ஜியமாக கூட பாக்கி தொகையை காண்பிக்கும்.
வாடிக்கையாளர் கொதித்துப் போய் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டால் 99 சதவீதம் நிச்சயமாய் இணைப்பு கிடைக்காது (அப்புறம் தெரியுமில்லே நீங்க எதுக்கு கூப்பிடுறீங்கேனு). அப்படியே தொடர்பு கிடைத்தாலும் “ சார்! நீங்க நடிகையோட பேச டயல் பண்ணி இருக்கிறீங்க, அதனாலதான் சார் அதற்குண்டான கட்டணத்தை சார்ஜ் பண்ணிருக்கோம் சார்! வேற ஏதாவது தகவல் தெருஞ்சுக்கனுமா சார்.” என வாய் கூசாமல் பொய் பேச அடிமைகளாக நவீனயுகத்தில் படித்த நபர்களை பணியில் அமர்த்தியுள்ளார்கள்.
அவரைப் பிடித்து நாம் வாங்கு ! வாங்கென வாங்கினாலும் பொறுமையாக பதிலளிக்க வேண்டும் என்ற கட்டளையின் அடிப்படையில் கூனிக்குறுகி பதிலளிப்பார். (வாடிக்கையாளர் கோபத்தில் எவ்வளவு மோசமாக பேசினாலும் பொறுமை கடைபிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த ஊழியர் உடனே பணி நீக்கம் செய்யப்படுவார்.அவருக்கு வருமானமும் கிடையாது என்ற நவீன விஞ்ஞான உழைப்பு சுரண்டல்)இத்தகைய “ப்ரீபெய்டு” இணைப்பில் மட்டும் ஏன் இவ்வளவு சுரண்டல் என்றால் வாடிக்கையாளர் யாரோடு பேசினார். எவ்வளவு நேரம் பேசினார் என்ற அடிப்படையான எந்த தகவல்களையும், ஆவணங்களையும் இந்த இணைப்பில் பெற முடியாது.மேலும் தனியார் நிறுவனங்கள் அவர்களின் தொழில் நுட்ப அறிவை பயன்படுத்தி அவர்களே ஏதேனும் ஒரு வெளிநாட்டு தொலைப்பேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்தது போல் டயல் செய்து திருடும் முறையும் உண்டு . நாம் எந்த அழைப்பும் செய்திருக்க மாட்டோம். விடிந்து எழுந்து பார்த்தால் நமது செல்பேசியிலிருந்து ஏதேனும் வெளிநாடு எண்ணிற்கு அழைப்பு செய்யப்பட்டிருக்கும். நான் அத்தகைய அழைப்பை செய்யவில்லை என வாடிக்கையாளர் நிருபிக்க முடியாது. அதற்காக வழக்கும் தொடுக்க முடியாது. காரணம் நமக்கு எந்த ஆவணமும் கையில் கிடைக்காது. அப்படியே நீதிமன்றம் உத்தரவின் மூலம் ஆவணங்களை அத்தொலைப்பேசி நிறுவனங்களிடமிருந்து வர வழைத்து பெற்றாலும், அதில் வெளிநாட்டு அழைப்பு செய்யப்பட்டதாக பதிவாகி இருக்கும். இப்படியாக நவீன முறையில் சுரண்டும் இத்திருட்டு கும்பல்கள் ஒரேயடியாக பத்து ரூபாய், இருபது ரூபாய் என திருடுவதில்லை.
அத்தகைய நடவடிக்கையால் வாடிக்கையாளருக்கு சந்தேகம் ஏற்படுத்தும் என ஒரு ரூபாய், ஒரு ரூபாயாக கொஞ்சம் கொஞ்சமாக இருக்கும் மீதத் தொகையை கழித்து விடுவார்கள். இப்படியாக சுரண்டி எடுக்கப்பட்ட தொகையின் செயல்பாட்டால் பொறுமையின் உச்சம் தீர்ந்து வாடிக்கையாளர் இணைப்பில் தொடர்பு கொண்டு கண்ட படி பேசினால் சார்! மறு படியும் இந்த பிராப்பளம் வராது சார். நாங்க எடுத்த பணத்தை திருப்பி கொடுத்திடுறோம் சார்! உங்களுக்கு கொடுத்த சிரமத்திற்கு மன்னிக்கனும் சார்! என ஒரு வருத்தம் தெரிவிக்க ஓராயிரம் முறை சார் போட்டு வாடிக்கையாளரை குளிரச் செய்திடுவார். இரண்டு மூன்று நாட்கள் சரியாகயிருக்கும் அத்தனியார் நிறுவனம் பின்னர் மீண்டும் தனது பழைய ஜகஜலா கில்லாடி வேலையை ஆரம்பித்து விடும்.
இத்தகைய அவல நிலையில் இருந்து வெளியேற தற்போது மத்திய அரசு அதே எண்ணை வேறு பிடித்த தொலைப்பேசி நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ள வழி வகை செய்துள்ளது. இந்த சேவையை வேண்டுமென கொண்டு வர நிர்ப்பந் தத்தை ஏற்படுத்தியதே இத்தகைய தனியார் தொலைப்பேசி நிறுவனங்கள் தான். இவர்களின் திட்டமே பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லிலிருந்து பெருமளவு வாடிக்கையாளர்கள் தங்களை தேடி வருவார்கள் என்பதுதான். இதற்காக விளம்பரங்கள் செய்தல் போன்ற ஏற்பாடுகளுக்காக பல கோடிக்கணக்கான தொகைகளை செலவு செய்தனர். ஆனால் அது சொந்த காசுல சூன்யம் வச்ச கதையா தனியார் நிறுவன வாடிக்கையாளர் பலரும் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் -லை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதை சற்றும் எதிர்பார்த்திராத தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளரைத் தக்க வைத்துக் கொள்ள அல்லோலப்பட்டு வருகிறது.அத்தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேற நினைக்கும் வாடிக்கையாளருக்கு பல்வேறு வகைகளில் சிறப்பு சலுகைகளை வாரி வழங்கிவருகிறது.மேலும் தங்கள் நிறுவனத்திலிருந்து மாற விருப்பமனு அளித்துள்ள வாடிக்கையாளர்களை பல முறை அழைத்து உங்களின் குறைபாட்டை நீக்குகிறோம். எங்களது நிறுவனத்திலிருந்து இணைப்பை துண்டித்துக் கொள்ளாதீர்கள் என மன்றாடுகிறார் கள்.
இத்தகைய மயக்கும் பேச்சிற்கு பிறகும் இணைப்பை மாற்ற முயலும் வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிக்காமல் இழுத்தடிக்கும் பணியை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இவ்வாறு இணைப் பை மாற்ற வேண்டுகோள் அளித்த தொலைப்பேசி எண்ணிலிருந்து வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகினால் தொடர்பு கிடைப்பதே யில்லை. வேறு ஒரு தொலைப்பேசி எண்ணிலிருந்து அழைத்தால் இணைப்பை இணைக்கும் இந்நிறு வன சேவை மைய ஊழியர்கள் தொலைப்பேசி என்னை சொன்ன வுடன் துண்டித்து விடுகிறார் கள்.(ஏற்கனவே அந்த எண் குறித்து கணினியில் பதிவு செய்து வைத்துக் கொள்ளப்படுகிறது)
இத்திட்டத்தால் வாடிக்கையாளர் பயனடைய வேண்டும் என எதற்காக மத்திய அரசு கொண்டு வந்ததோ அந்த திட்டம் மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை. இத்தகைய வாடிக்கையாளர்களை சுரண்டும் தனியார் நிறுவனங்களையும் ஒரு போதும் மத்திய அரசு கண்டித்தது கிடையாது. இவ்வாறு அரசுகளால் அறிவிக்கப்படுகிற தங்களது திட்டங்களை பற்றி ஆய்வு செய்து பரிசீலிப்பது கிடையாது என்பதற்கு இந்த திட்டமும் ஓர் உதாரணம்.
சாதாரண கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகளுக்கும், பாமரமக்களுக்கும் இச் சுரண்டல் கும்பலின் இத்தகைய திருட்டைப் பற்றி அறிந்தும் யாரிடம் போய் புகார் செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி வருகிறார்கள்.
தனது உழைப்பின் ஊதியத்தை இத்தகைய தனியார் தொலைபேசி நிறுவனங்களிடம் இழந்து கொண்டிருக்கிறார்கள். திருடும் தொகையானது தினசரி பல கோடி ரூபாய் என்பது மறுக்கமுடியாத, மறைக்க முடியாத உண்மை. மக்களின் அறியாமையை பயன்படுத்தி நடைபெறும் கொள்ளையைத் தடுத்து நிறுத்திட சமூக அக்கறை கொண்டுள்ளோர் முன்னின்று குரல் கொடுத்திட வேண்டும். இத்தகைய தனியார் நிறுவனங்களின் மாய முகத்தை கிழித்திட வேண்டும்.
புதன், 11 மே, 2011
செல்போன்: சொந்த காசுல சூன்யம் வச்ச கதை...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
எல்லோருக்குமே இப்படித்தான்..
என் நண்பன் ஒருவன் அவர்கள் உதவி எண்ணுக்கு அழைத்து
"காசு வேணும்னே எங்க வீடு முன்னாடி வந்து பிச்சி கேளும்..
தாரோம்..
இப்படி திருடி திங்காதீர் "
என்றெல்லாம் திட்டி இருக்கான்..
கருத்துரையிடுக