திங்கள், 13 ஜூன், 2011

இந்தியா மாண்புமிகு திருடர்களின் நாடு

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் உழைப் பின் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் உருவாக்கப் படுகிறது என்று குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்தி ருக்கிறது. இந்தியாவில் 6 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதே வெட்கக்கேடான விஷயம். இவர்களின் உழைப்பையும் உறிஞ்சி கறுப்புப்பணம் சேர்க் கும் கூட்டத்தை என்னவென்று கூறுவது ?

குழந்தைத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குவதன் மூலம் மட்டுமே இவ்வளவு தொகை கறுப்புப் பணம் உருவாகிறது என்றால், மற்ற வகையில் எத்தனை லட்சம் கோடி கறுப்புப் பணம் உருவாகும்? இன்றும் இந்தியாவில் பெரும்பகுதியான தொழிற் சாலைகளில் தொழிலாளர் உரிமைகள், நலச் சட்டங்கள் அமலாவதில்லை. எத்தனை வருடம் வேலை செய்தாலும் தினக்கூலியாகவே வைத்திருக்கின்றனர். இதையெல்லாம் உரிய முறையில் கண்காணிப்பது யார்? தொழிலாளர் துறை இருந்தாலும், எல்லா தொழில் நிறுவனங் களிடமும் இவர்கள் நெருங்க முடியாது என்பது தானே உண்மை. இதுதவிர பல இடங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகளே தொழில் உரிமையாளர்களின் பிரதிநிதிகளாகவே இருக் கின்றனர்.

இது மட்டுமல்ல, கறுப்புப்பணம் உருவா வதற்கான அனைத்து வழிகளையும் மத்திய அரசு அகலத் திறந்துவிட்டு காவல் காக்கிறது. மேலும் இவர்களுக்கே சலுகைகளை மென்மேலும் வாரி வழங்கி வருகிறது. இந்த நிலையில் கறுப்புப் பணம் ஒழிக்கப்படும்; ஊழல் அறவே அகற்றப் படும் என காங்கிரஸ் கட்சியும் நமது பிரதமரும் வீரவசனம் பேசி வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக லோக்பால் மசோதா படும்பாடு தான் என்ன? இதனால்தான் ராம்தேவ் போன்றவர்களும் தங்களை கறுப்புப் பணத்திற்கு எதிரானவர் போல் காட்டிக்கொள்ள முயல்கின்றனர்.

ராம்தேவ் அரங்கேற்றிய உண்ணாவிரத நாடகத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டவுடன் ராம்தேவ் சம்பந்தமாக இன்று பல்வேறு தகவல்களை மத்திய அரசே வெளியிட்டு வருகிறது. ஏன் இதற்கு முன்பு இந்த தகவல்கள் மத்திய அரசுக்கு தெரியாமலா இருந்தது? கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அவரது வர்த்தக சாம்ராஜ்யம் 34 கார்ப்பரேட் நிறுவனங்களுடன் விரிவடைந்திருக்கிறது. ஸ்காட்லாந்தில் ஒரு தீவே சொந்தமாகி யிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களை கண்காணித்து உரிய காலத்தில் உரிய முறையில் விசாரணை நடத்தியிருந்தாலே கறுப்புப் பணம் எப்படியெல்லாம் உருவாகிறது என்பதின் ஒரு பகுதியை கண்டறிந்திருக்கலாம்.

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுவரும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற மூன்று கால் பூதம் இந்த கறுப்புப் பண ஊழல் பேர்வழிகளுக்கு வலுச்சேர்த்து பாதுகாப்பாய் இருந்து வருகிறது. இந்த மூன்று கால் பூதத்தை தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒழித்து விடுவோம் என பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக அரசை நிர்ப்பந்திக்கக் கூடிய வகையில் மக்கள் போராட்டக் களம் விரிவடையும் போது தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன் வரும். அதுவரை காங்கிரஸ் மற்றும் மத்திய அரசின் வாக்குறுதி தண்ணீரில் எழுதுகிற எழுத்தாக காணாமல் போகும் என்பதே உண்மை.

2 கருத்துகள்:

vidivelli சொன்னது…

nallla aayvu.....
valththukkal...


namma pakkamum varalaamea?

விடுதலை சொன்னது…

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி