வியாழன், 16 ஜூன், 2011

ஹசாரேவுக்கு கிடைத்த வெற்று விளம்பரமும் லோக்பாலுக்கு பால் ஊற்றிய காங்கிரசும்

பால் ஊற்றும் காங்கிரஸ் காரியதரிசிகள்
மக்களை திசைத்திருப்பும் இந்திய முதலாளிகளின் வேலை ஆட்கள்

லோக்பால் மசோதா, கருப்புப்பண மீட்பு உள்ளிட்ட முக்கியமான பிரச்சனைகளில் மன் மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பொறுப்பற்ற வகையில் நடந்து வருகிறது.

லோக்பால் மசோதாவுக்கான வரைவை உருவாக்கி அதன் மீது அனைத்துக்கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்திருக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் குடிமைச்சமூகத்தின் கருத்துக்களையும் பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதம் நடத்தி மசோதாவை சட்டமாக்கியிருக்க வேண்டும்.

ஆனால் மத்திய அரசுக்கு உண்மையில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண் டும் என்பதில் அக்கறை இருப்பதாகத் தெரிய வில்லை. எனவேதான் லோக்பால் சட்டம் வருவதற்கு முன்பே அதில் எத்தனை இடங்களில் ஓட்டைபோடலாம் என்பது குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தவுடன் குடிமைச்சமூகம் என்ற பெயரில் உலா வந்த ஹசாரே உள்ளிட்ட சிலரை இணைத்துக் கொண்டு வரைவுக்குழுவை அமைத்தது. அந்த வரைவுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் குறித்து எதிர்மறையான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு, அவர்களை அசிங்கப்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தியது.

மறுபுறத்தில், மசோதாவை முழுமையாகத் தயார்செய்து அனைத்துக்கட்சிகளுக்கும் அனுப்புவதற்கு பதிலாக, ஆம், இல்லை என்ற பாணியில் சில கேள்விகளை அரசியல் கட்சி களுக்கு அனுப்பியது. இந்த அணுகுமுறையை பெரும்பாலான கட்சிகள் நிராகரித்து, முழுமை யான மசோதாவை தருமாறு கோரியுள்ளன.

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும், கருப்புப்பணத்தை வெளிக்கொணர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள்தான் முதலில் குரல் கொடுத்தன என்பது மட்டுமின்றி தொடர்ச்சியாகவும் அதற்காக போராடி வருகின்றன.



ஹசாரேவுக்கு கிடைத்த வெற்று விளம்பர வெளிச்சத்தைக் கண்டு மயங்கிய, பாஜகவால் தூண்டிவிடப்பட்ட ராம்தேவ் களத்தில் குதித்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திற்கே மத்தியஅமைச்சர்கள் ஓடோடிச் சென்றனர். ரகசிய பேரங்கள் வெட்கமின்றி நடத்தப்பட்டன.

பிறகு வெளியே சொல்லப்படாத அந்த பேரம் மீறப்பட்டுவிட்டதாக பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர். பிறகு ராம்தேவுடன் உண்ணாவிர தம் இருந்தவர்கள் மீது போலீசார் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

வெறும் வாயை மென்று கொண்டிருந்த பாஜகவுக்கு வெற்றிலைபாக்கு மடித்துக்கொடுத் தது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. இப்போது கருப்புப்பணத்தை வெளிக்கொணர்வது, லோக்பால் மசோதா குறித்த விவாதங்களை விட அன்னா ஹசாரே, ராம்தேவ் குறித்த விவாதங்கள்தான் ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

திட்டமிட்டே இத்தகைய திசை திருப்பல் வேலைகளில் மன்மோகன் சிங் அரசு ஈடுபடுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஊழல் ஒழிப்பு, கருப்புப்பண மீட்பு போன்றவை சில தனிநபர் அல்லது குழுக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையல்ல. இது தேசத்தின் பிரச்சனை. நாட்டு மக்களையும் நாடாளுமன்றத்தையும் ஏமாற்ற முயலாமல் உருப்படியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திட வேண்டும்.

கருத்துகள் இல்லை: