சனி, 25 ஜூன், 2011

முதலாளிகள் எல்லாம் சேர்ந்து ஊழலை ஓழி(ளி)க்கப் போறாங்க டோய்


வெளிநாட்டு வங்கிகளில் இந்திய பெரு முதலாளிகள், அரசியல்வாதிகள் பதுக்கி வைத் துள்ள கறுப்புப்பணத்தை கைப்பற்ற வேண்டும் என்று தற்போது நாடு முழுவதும் விவாதிக்கப் படுகிறது. இதற்காக மக்கள் அமைப்புகள் உள் பட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தையும் துவக்கியுள்ளனர். போராட்டம் நடத்துபவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன என்பது ஒரு புறம் விவாதத்திற்கு உரியது என்றாலும், கறுப்புப் பண விவகாரம் பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை துவக்கியிருப்பது உண்மைதான்.

இந்த நிலையில் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு, வரி பாக்கி வைத்துள்ள வர்களின் பட்டியலை வெளியிடவேண்டும் என்று சிஐடியு கோரியுள்ளது. எதைக் கேட்டாலும் மத்திய அரசு ஒரு கமிட்டி நியமிப்பதை வழக்கமாக கொண் டுள்ளது. தற்போது கூட நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்க, நேரடி வரிக்கான மத்தியக் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது.

கறுப்பு பணத்திற்கு முக்கியக்காரணமாக இருப்பது வரி ஏய்ப்புதான். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை குறைத்தும், இழப்பு கணக்கு காட்டியும் ஏராளமான நிறுவனங்கள் தங்களது பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைத்துள்ளன. பிரபல தனியார் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நிகர லாபத்தை குறைத்து காட்டி அரசாங்கத்தை ஏமாற்றி வருகின்றன. இதற்கான உறுதியான ஆதாரம் இருந்தாலும் மத்திய அரசு அவர்க ளுக்கு எதிராக தனது சுண்டுவிரலைக் கூட அசைக்க மறுக்கிறது.

கடந்த மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் சிஐடியு அளித்த மனுவில், நாடு முழுவதும் பெரும் நிறுவனங்கள் அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு வரி பாக்கி வைத் துள்ளன என்றும், அதனை வசூல் செய்வதற்கு நிதி நிலை அறிக்கையில் உரிய அறிவிப்புகளை வெளியிடவேண்டும் என்றும் கோரியது. ஆனால் இதைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு பெரும் முதலாளிகளுக்கு மேலும் வரிச்சலுகைகளை வாரி வழங்கியது. இதனால் கடந்த 2010 மார்ச் வரை இந்த நிறுவனங்கள் வைத்துள்ள வரிபாக்கி ரூ.2.93லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது.

ஆனால் மறுபுறம் மக்களை கசக்கிப் பிழியும் நடவடிக்கையில் அரசு சிறிதும் பின்வாங்க வில்லை. பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங் கள் நட்டத்தில் செயல்படுகின்றன என்று கூறி கடந்த இரண்டு ஆண்டுகளில் 8 முறை பெட் ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி விட் டது. உரம் மற்றும் உணவுக்கான மானியத்தை கணிசமாக குறைத்துவிட்டது. வரிபாக்கிகளை வசூல் செய்தால் மக்கள்மீது சுமை ஏற்ற வேண்டிய அவசியம் இருக்காது. இந்திய பெரு முதலாளிகளின் லாபமும் செல்வமும் மிகப் பெரிய அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில், இந்தி யாவில் இருந்து மூலதன வெளியேற்றமும் தாரா ளமாகியுள்ளது.

இந்திய நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தும் நிகர வரி மிகக் குறைவாகவே உள்ளது. வரி அட்ட வணைப்படி அவர்கள் செலுத்தவேண்டிய வரி யின் அளவு 33.6 விழுக்காடு ஆகும். பங்குச் சந் தை உச்சாணிக் கொம்பில் ஏறியபோதும், தொழில்நிறுவனங்கள் பெரும் லாபத்தில் கொழித்தபோதும் அரசு அவர்களிடமிருந்து வரி பாக்கியை வசூலிக்காமல் பொற்கிழி வழங்கி பாராட்டியது. மாறாக மக்களுக்கு மிஞ்சியது எண்ணவோ வரிஉயர்வும் விலை உயர்வும் தான். எனவே ஐ.மு.கூட்டணி அரசு யாருக்காக செயல் படுகிறது என சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கருத்துகள் இல்லை: