வெள்ளி, 22 ஜூலை, 2011

இவை திமுகவின் அரூப லீலைகளே!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில்(22.7.2011) “அல்லல் நீங்கும்; தொல்லை குறையும்!” என்ற தலைப்பில் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி தனது உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதம் வெளியாகியுள்ளது.

“ஆரம்பமாகிவிட்டன அரூபத்தின் லீலைகள்” என்று துவங்கும் இந்தக் கடிதத்தில் “அராஜகத்தை தன்னுடைய ஆபரணமாகவும் - அடக்குமுறையை தனது போர் வாளாகவும் - ‘இம்’ என்றால் சிறைவாசம் - ‘ஏன்’ என்றால் வனவாசம் என்ற ஜார் மன்னனின் இரக்கமற்ற கூச்சலை இசைப்பாடலாகவும் ஆக்கிக் கொண்டு -...” என்று தற்
போதைய அரசை வர்ணித்துக் கொண்டு செல்கிறார் திமுக தலைவர்.

அரூபத்தின் லீலைகளாக அவர் சித்தரிப்பதற்கு ஆதாரமாக பல புகைப்படங்களையும் வண்ணமயமாகப் பிரசுரித்திருக்கிறார்கள். “தெரிகிறது வெளிச்சம் - அதை நோக்கி விரைந்து நடந்து வாருங்கள்” என்று தனது கடிதத்தில் அவர் அழைப்பு விடுத்திருப்பதால்தானோ என்னவோ, அவசர கோலத்தில் திமுக ஆடிய கோர நர்த்தனப் படங்களை எடுத்துப் பிரசுரித்து விட்டார்கள்.

உத்தப்புரத்தில் நிழற்குடை, ஆலய வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைத் தனது ஆட்சிக்காலத்தில் தீர்க்காமலேயே சென்றது திமுக அரசு. அதோடு நில்லாமல், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தைக் குலைக்க காவல்துறையை ஏவிவிட்டது திமுக அரசு.

அப்போது நடந்த வெறியாட்டக்காட்சிகளில் இரண்டைத்தான் இப்போது முரசொலி எடுத்துப் போட்டு, தனது ஆட்சியில் நடந்த வன்முறைக்கு சாட்சியாக வந்து நிற்கிறது. சொல்லப்போனால், திமுக தலைவர் சொல்லும், “முடிந்தால், தணலில் வேண்டுமானாலும் போட்டுப் பொசுக்குவேன் - என்று ஆங்காரக் கூச்சலிட்டு - ஓங்கார முழக்கம் செய்து -...” என்றெல்லாம் தற்போதைய அரசைப் பற்றி வைக்கும் விமர்சனங்களுக்கு சாட்சியாக வைப்பதாக நினைத்துக் கொண்டு, தனது ஆட்சியின் அவலங்களை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டி உள்ளனர். அவர்கள் பிரசுரித்துள்ள படங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே திமுக ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களாகவே உள்ளன.
 தாக்கப்ப்பட்டு வீழ்ந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர் சம்பத் இழுத்துச் செல்லப்படுதல்

எம்.எல்.ஏ நன்மாறன் இழுத்துச் செல்லப்படுதல்

மக்களின் “அல்லல்” நீங்கி, திமுகவினரின் “தொல்லை” குறைந்திருப்பதுதான் தற்போதைய அரசியல் நிலை. இந்நிலையில் தங்கள் கட்சிக்காரர்களை உசுப்பி விடுவதற்காக சொந்த ஆட்சியையே காட்டிக் கொடுக்கும் வகையில்தான் முரசொலியின் படங்கள் அமைந்துள்ளன.

திமுக தலைவரின் இக்கடித பாணியிலேயே சொல்வதென்றால்,ஆருயிர் உடன்பிறப்புகளே அதோ தெரிகிறது வெளிச்சம் அதை நோக்கி விரைந்து நடந்து வாருங்கள் முரசொலி படியுங்கள் இதுதான் நமது அரசை சுட்டெரித்தமாற்ற நெருப்பின் பொறிகள்...

கருத்துகள் இல்லை: