திங்கள், 25 ஜூலை, 2011

அடிமையின் பயம் முதலாளியின் மூலதனம்


ஒரு புத்தகம் என்பது உள்ளதை உள்ளபடி சொல்வதுதான். இருந்தாலும் அதில் சில வாசிக்கும் போதே உடலுக்குள் வேதியல் மாற்றங்களையும்-சிந்தனையில் மாற்றங்களையும் வரவழைக்கும். அப்படி சிந்தனையிலும் மாற்றத்தை உருவாக்கி, உடற்கூறிலும் சில அதிர்வுகளை உருவாக்கியது பிரெடரிக் டக்ளசின் சுயசரிதை. இந்நூல் அமெரிக்காவின் பண்ணை அடிமைத்தனம் பற்றிய புரிதலையும் நாடுகள் எதுவாயினும் வர்க்கங்களின் குணம் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதையும் மெய்ப்பிக்கின்றது.
பிரெடரிக் டக்ளஸ் பண்ணை அடிமையின் சோகங்களை அனுபவித்ததை கண்ணால் கண்டதை அற்புதமாக விவரிக் கின்றார். தன்னுடைய ஒவ்வொரு உரிமையாளரும் எப்படிப் பட்டவர்கள் - அவர்கள் வேலை வாங்கும் விதம், வழங்கும் தண்டனைகள்... என்று படிக்கும் பொழுது உடல் அதிர்கின்றது.
டக்ளசின் பாட்டியின் மரணம் அதனால் ஏற்படும் ஏக்கம் ஒரு அடிமையின் மரணம் கண்டும் காணமல் போவதை தத்ரூபமாக கண்முன் நிறுத்துகின்றது.
அடிமைகளுக்கு கொடுக்கப் படும் தண்டனைகளை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. ஒரு மாற்றுத் திறனாளிப் பெண் அடிமையை அடித்து ரத்தம் ஒழுக விளாசி கொடுஞ்செயல் செய்து விட்டு,பைபிளில் வரும் விவிலியத்தின் வாசகங்களைப் படித்து, கடவுளிடம் பாவ மன்னிப்பு பெறுவது என ஒவ்வொரு பக்கமும் தாண்டும் போது நமக்குள் ஏற்படும் உணர்வுகள் ஏராளம்.
தன்னுடைய வாழ்வின் அனைத்து விஷயங்களையும் தீர்மானிக்கும் எஜமானர்கள் - எதற்கு? ஏன்? மற்றவர்களுக்கு விற்கப்படுகின்றோம் என்பது கூட தெரியாமல், ஊர் மாறும் அடிமைகள்; செய்யும் வேலை களுக்கு கிடைக்கும் அற்ப உணவு, அதை சாப்பிடக் கூட முடியாமல் வாங்கும் அடியின் வலி, உடலின் ரணம் என பல பக்கங்களில் சோகம் கவ்வுகின்றது.
காட்டில் கிடைக்கும் வேரை (Roots) கையில் வைத்திருந்தால் எஜமானர்கள் அடித்து உதைக்க மாட்டார்கள் எனும் மூடநம்பிக்கை இருந்தது அது எப்படி மறைந்தது என்பது விவரிக்கப்படுகின்றது.
டக்ளஸ் தன் முதலாளி கொவே (மிக கொடியவன்) என்பவரை ஒரு கட்டத்தில் திருப்பி அடிக்கிறார். அதாவது முதலாளிக்கு ரத்தம் வரும் வரை. அதன் பிறகு அம் முதலாளி டக்ளஸ் மீது கை வைப்பது நிறுத்தப்பட்டது. இந்த விஷயத்தைப் படிக்கும் போது கீழத் தஞ்சை மாவட்டத்தில் பண்ணை அடிமைகளை ஒருங்கிணைக்கும் போது, தோழர் பி. சீனிவாசராவ் ‘‘அடித்தால் திருப்பி அடி’’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது. ஒரு அத்தி யாயத்தில் டக்ளஸ் சொல்கிறார். “அடிமையின் பயம் - முதலாளியின் மூலதனம்’’ எவ்வளவு ஆழமான அர்த்தம் பொதிந்த வார்த்தை. இரு வர்க்கங்களை அடையாளம் காட்டும் அற்புத வாசகம்.
ஒவ்வொரு ஆண்டும் அடிமைகளுக்கு வழங்கப்படும் விடுமுறையைப்பற்றி டக்ளஸ் அற்புதமாக சித்தரிக்கின்றார். அதாவது முதலாளிகள் ஆண்டு முழுவதும் வழங்கும் தண்டனைகள் அனைத்தையும் மறக்க, அதனால் அவர்கள் மீது ஏற்படும் கோபங் களை தணிக்கவும், விடுமுறை முழுவதும் மது அருந்த வைத்து, கேளிக்கைகளில் தள்ளி எப்போதும் அடிமை எனும் சிந்தனையை மேலோங்க வைத்து, மீண்டும் வேலைக்கு வரவழைப்பது எனும் சதித்திட்டம் தான் விடுமுறை. அதாவது, அது ஓர் ஏமாற்று வித்தை உடல் மற்றும் உளவியல் ரீதியாக மீண்டும் அடிமைச் சிந்தனையை உறுதிப்படுத்துவது ஆகும்.
ஓர் அடிமையை எஜமானர் எதற்காக வேண்டுமானாலும் அடிக்கலாம். தான் எதிர்பார்த்த அளவுக்கு வேலையைச் செய்யவில்லை என்றாலோ அல்லது சொன்ன கட்டளையை உடனடியாக செய்து முடிக்கவில்லை - பெண்களாக இருந்தால் இச்சைகளுக்கு உட்படவில்லை என்பதோ மன்னிக்க முடியாத குற்றங்கள். மரண அடி தான். அடிபட்ட பிறகும் ரத்தம் கொட்டினாலும் சொன்ன வேலையை முடிக்க வேண்டும். டக்ளஸ் படிக்க கற்றுக் கொண்டதை விவரிக்கும்போது, ஓர் அடிமையானவன் கல்வி அதுவும் அடிப்படைக் கல்வி கற்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பது புலப்படுகின்றது. அப்படி தான் கற்றுக் கொண்டதை மற்றவர்க்கு கற்றுத் தருவது என்பது எவ்வளவு மகத்துவமானது - அப்பணியை அப்பொழுதே டக்ளஸ் செய்திருக்கின்றார். அறிவொளியை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்த நாட்கள் தான் டக்ளசின் உன்னதமான நாட்கள் என குறிப்பிடுகின்றார்.
அடிமைகளை விற்க - வாங்க எனும் தொழிலுக்கு தரகர்கள் இருந்தார்கள். அவர்கள் புது அடிமைகளை விற்க முற்படும் போது அடிமைகளின் உடற்கூறின் பாகங்கள் நன்றாக உள்ளதா, செயல்படும் நிலையில் இருக்கின்றதா என்பதைப் பார்த்து அவர்களின் உடல் பாகங்களை அசைக்க ஆட்டச் சொல்லி வாங்குவார்களாம். கிராமப் புறங்களில் மாடு வாங்கும் போது, சந்தையில் மாட்டின் அங்கங்களை பார்த்து வாங்குவது போல் அடிமைகள் விற்கப்பட்டு வாங்குவார்களாம். விலங்கைவிடக் கீழ் நிலையில் மனிதன் இருந்ததை நினைக்கும் போது உள்ளம் கனக்கின்றது. ஒரு கட்டத்தில் தான் தப்பித்து அடிமை விலங்கை முறித்துக் கொள்ள வேண்டும் எனும் முடிவெடுக்கும் டக்ளஸ் இறுதியாக ஒரு முதலாளியிடம் ரிவிட் (ஸிவீஸ்மீt) அடிக்கும் தொழிலைக் கற்றுக் கொள்கிறார். கடுமையான உழைப்பு.
நல்ல வருமானம் கிடைத்த போதும் அனைத்தும் முதலாளிக்கே சொந்தம். ஏனென்றால், அடிமையின் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமல்ல. அடிமையே அவருக்கு சொந்தமல்லவா!
வருமானம் போனால் போகட்டும். ஆனால் வாழ்க்கையில் மாற்றம் பெற வேண்டுமானால், எனக்கு நானே உரிமையாளராக வேண்டும். அதாவது விடுதலை பெற வேண்டும் என்று டக்ளஸ் சொல்லும் போது கல்மனம் படைத்தவர்கள் கூட உருகிவிடுவார்கள்.
இந்த சுயசரிதை எழுதுவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் அவர் தப்பித்து விடுலையாகின்றார். அப்படி தப்பித்துச் செல்வதற்கு யார் உதவி செய்தார்கள் என்பதைக்கூட அவர் காட்டிக் கொடுக்கவில்லை. எவ்வளவு வைராக்கியம்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க நாட்டில் இருந்த நிறவெறி இன்றும் பல்வேறு வடிவங்களில் இருக்கின்றது என்பதை நினைக்கும் போது அன்று நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை யோசிக்க முடிகின்றது. வேறு ஒரு மொழியில் வந்த ஒரு பொக்கிஷத்தை தாய் மொழியில் அதன் ஆழம் மற்றும் தன்மை மாறாமல் மொழி பெயர்த்து அளிப்பது அற்புதமான கலை. எப்போதும் அதை நிதானத்துடன் சுவை மாறாமல் தமிழ் வாசகர்களுக்கு அளித்து வரும் இரா. நடராசன் டக்ளஸ் வாழ்க்கை வரலாற்றை வாசகர்கள் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் மொழிபெயர்த்துள்ளார்.
தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் நிலவி வரும் விதவிதமான தீண்டாமைக் கொடுமைகள் அதில் மக்கள் படும் அவதிகள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகள் என்று இன்னும் நவீன அடிமைகளாக நமது வர்க்கம் நடத்தப்படும் வேளையில், இந்நூலை அதிகமான மக்களிடத்தில் கொண்டு சென்றால் கொடுமைகளுக்கு எதிரான ஒரு புதிய எழுச்சியை உருவாக்கிட முடியும். இனியும் எங்கும் கொடுமைகள் நிகழும் போது தடுத்திடப் பெரும் படையை அமைத்திடவும் இந்நூல் உதவும்.
கிராமப்புற உழைப்பாளி மக்களும் நகர்ப்புற தொழிலாளர்களும் இன்றைய உலக மய சூழலில் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்டுள்ளனர். 8 மணி நேர வேலை கனவாகி வருகின்றது. அப்படிப்பட்ட நேரத்தில் இந்நூல் பரவலாகக் கொண்டு செல்லப்பட வேண்டும்.
அழகான வடிவமைப்பு எழுத்துப் பிழையில்லாமல் இருப்பது மொழிபெயர்ப்பின் ஆழம் மற்றும் எளிமை சோர்வில்லாமல் வாசிக்க வைக்கின்றது. மக்களின் தேவையைக் கருதி அதிகம் எடுத்துச் செல்லப்பட வேண்டிய சிறந்த புத்தகம். ஒரு கறுப்பு அடிமையின் சுயசரிதை.
                                                                                                                                                                               என்.சிவகுரு

கருத்துகள் இல்லை: