நிதி மூலதனம் பெருக வேண்டும் என்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் எதையும் செய்யும். தனது நாட்டில் சேமிக்கப்பட்டுள்ள பிறநாட்டு சொத்துக் களைக் கூட கபளீகரம் செய்யத் தயஙகாது. இதற்கு கியூபாவில் நடந்த ஒரு நிகழ்வு சரியான உதாரணமாக இருக்கும்.
கியூபாவில் புரட்சி வெற்றிபெற்று ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் அரசு அமைந்த பின்னர், எர்னஸ்டோ சேகுவாரா கியூப தேசிய வங்கியின் தலை மைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பணி ஏற்றுக்கொண்டவுடன் சே தனது உதவியாளர்களிடம் கேட்ட முதல் கேள்வி “கியூபாவின் தங்கம் மற்றும் டாலர் சேமிப்புகள் எங்கே வைக்கப்பட்டுள்ளன?” என்ற கேள்விதான். “அவை அமெரிக்காவின் நிதிச்சேமிப்பிடமான போர்ட் நாக்ஸ் என்ற இடத்தில் உள்ளன” என்று உதவியாளர்கள் தெரிவித்தனர். சேகுவாரா உடனடியாக தங்க சேமிப்பையும், டாலர்களையும் விற்று, வேறு நாணயமாக மாற்றி, அவற்றை கனடா மற்றும் சுவிஸ் நாட்டு வங்கிகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டார்.
அமெரிக்கா பின்னர் தனது நாட்டில் உள்ள கியூபாவின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தது. கியூப சேமிப்புகள் அமெரிக்காவில் இருந்திருந்தால் கியூபா பேராபத்தில் சிக்கி திவாலாகியிருக்கும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் புரிந்து கொண்ட சே குவாராவின் தீர்க்க தரிசன நடவடிக் கையால் கியூப சேமிப்புகள் தப்பின.
நிதிநிறுவனங்களின் கடமை என்ன? சே குவாராவிற்கு பொருளாதாரம் குறித்தும், நிதிநிறுவனங்களை நடத்துவது குறித்தும், ஆழ்ந்த அறிவு இருந்தது. நாட்டின் அனைத்து அமைப்புகளும் சமுதாயக் குறிக்கோள் நோக்கி வேலை செய்ய வேண்டும் என்பதை சே புரிந்துகொண்டு வலியுறுத்தினார். தேசிய வங்கி கூட வெறும் நிதி வளர்ச்சிக்கான ஒரு கருவியாக மட்டும் இருக்கக்கூடாது.
ஒரு புரட்சிகர நிறுவனம் என்ற முறையில் அது சமுதாயத் தேவைகளுக்காக உழைக்க வேண்டும் என்றார் சே. ஆனால் அமெரிக்க பாணி நிதி நிறுவனங்கள் முதலாளிகளின் மூலதனத்தை பெருக்குவதற்கு மட்டுமே உழைக்குமே தவிர, சமுதாயத் தேவைகளைப் பற்றி கவலைப்படாது, கணக்கிலும் எடுத்துக் கொள்ளாது. இதை சே புரிந்து கொண்டதால் கியூபா தப்பியது. அதேபோல மன்மோகன்சிங்கும், சிதம்பரமும், மாண்டேக்சிங் அலுவாலியாவும் புரிந்துகொண்டால்தான் இந்தியா தப்பிப்பிழைக்கும்.அதே போல, சே ஒரு பொருளின் ‘மதிப்பு’ என்பது குறித்து அசைக்க முடியாத தனிக்கருத்து கொண்டிருந்தது. ‘மதிப்பு’ என்பது ஒரு பொருளின் சந்தை மதிப்பு அல்ல. அது சமுதாய, ஒழுக்க மதிப் பைப் பொருத்து விவரிக்கப்பட வேண்டும் என்றார்.
ஒரு நிதி நிறுவனத்தின் மதிப்பு என்பது அதனுடைய நிதி வெற்றியைப் பொறுத்ததாக இல்லாமல் அதனுடைய சமுதாயக் கடமையைப் பொறுத்து அமைய வேண்டும் என்று சேகுவாரா கூறினார். தேசிய வங்கி, வர்த்தக நிறுவனங்களை அவைவகளின் சமூக மதிப்பை, சமுதாயத்திற்கு செலுத்தியுள்ள பங்களிப்பை வைத்தே மதிப்பிட வேண்டும். சே, கியூப தேசிய வங்கியை அப்படித்தான் நடத்தினார். இந்தியாவை ஆளுகின்ற “பொருளாதார மேதைகள்” சென்செக்ஸ் புள்ளிகளின் வளர்ச்சியை மதிப்பிட்டு நிதி நிறு வனங்களை நடத்தினார்கள். அவை இந்திய மக்களுக்கு, உழைக்கும் வர்க்கத் திற்கு ஆற்றியுள்ள பங்களிப்பை மதிப்பிடவில்லை.
பங்குச்சந்தைப் புள்ளிகள் 20,000ஐ தாண்டிய போது வளர்ச்சி என்று புளகாங்கிதம் அடைந்து மக்களை ஏமாற்றினார்கள். இன்று பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்து 10,000 புள்ளிகளுக்கு கீழே சென்று கொண்டிருக்கிறது. பெற்றுள்ளது ‘வளர்ச்சி’அல்ல ‘வீக்கம்’ என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். சேகுவாராவைப் போல இந்தியாவை ஆள்வோர் ஏகாதிபத்தியத்தைப் புரிந்து கொண்டால் இந்தியாவை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.
1 கருத்து:
சேகுவேரா போல ஒருவர் இங்கே இருந்திருந்தால் இந்த நாடு எப்போதோ முன்னேறி இருக்குமே? சுதந்திரம் வாங்கி அறுபது ஆண்டுகள் ஆகியும், பல பொருளாதார மேதைகள் இருந்தும் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.
இங்கே இருப்பதெல்லாம் பண முதலைகளுக்கு சலாம் போடும் சல்லி பயல்களின் கூட்டம்!
கருத்துரையிடுக