புதன், 15 ஏப்ரல், 2009

இது இந்தியாவின் தருணம்...

வரப்போகும் ஆட்சி நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போவதாக இருப்பதால் நாட்டு நலன்களைக் கருத்தில் கொண்ட கொள்கைகளை முன்னிறுத்தும் இடதுசாரிக்கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சம்ஷாத் உசேன் - ஓவியக் கலைஞர் 

கலாச்சார தேசியம் என்ற பெயரால் கலைஞர்கள் மற்றும் அறிஞர்களின் கருத்து சுதந்திரத்தின் மீது வகுப்புவாத சக்திகள் விடுத்த சவால்களை முன்னின்று சந்தித்தவர்கள் இந்தியாவின் இடதுசாரிகள்தான். கலைஞர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும்போதெல்லாம் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்பவர்கள் இடதுசாரிகள்தான். கலைஞர்களின் சுதந்திரத்தின் மீது பற்றுள்ள அனைவரையும் வருகின்ற தேர்தலில் இடதுசாரிகளுக்கு வாக்களிக்க வேண்டுமென கோருகிறேன். 

சி.பி.சந்திரசேகர் - பொருளாதார அறிஞர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி 

இந்தியாவிலும் உலகஅளவிலும் மாறுதல்கள் நடைபெற்றுவரும் நேரமிது. பொருளாதாரநெருக்கடியானது புதிய சவால்களை வெளிப்படுத்துகிறது. கடந்த இரு பதாண்டுகளுக்கு மேலாக அதி காரத்தில் இருந்தபோதும், இல்லாதபோதும் காங்கிரஸ் கட்சியால் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகள் முற்றிலும் தவறானது என நிரூபணமான நிலையிலும் தவறுகளை ஏற்கவோ அல்லது அதனை அங்கீகரிக்கவோ அக்கட்சி மறுக்கிறது. மறுபுறம் பெருகிவரும் வேலையின்மையின் விளைவுகளை பயன்படுத்தி பிளவுவாத மற்றும் மதவெறி அரசியலுக்கு பாஜக எண்ணெய் வார்க்கிறது. அதுமட்டுமின்றி பணக்காரர்களுக்கு ஆதரவாக, சமூகத்தை சீரழிக்கும் பொருளாதார கொள்கைகளின் தாக்கத்திலிருந்து மக்களை திசை திருப்புகிறது. இதன் மூலமாக மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என்று எதிர்பார்க்கிறது. இந்த முயற்சிகளுக்கு எதிராக போராடுவதோடு அதை பொசுக்கிட வேண்டும். இத்தகைய இரு சக்திகளையும் தோற்கடிக்கக் கூடிய இயக்கமே நமக்கு தேவை. அறிவுபூர்வமாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி, அத்தகைய இயக்கம் இடதுசாரிகளின் தலைமையில் அமையவேண்டும். 

எம்.கே.ரெய்னா , நாடக இயக்குநர் 

நாம் சந்திக்க இருக்கின்ற மக்களவைக்கான தேர்தல் மிகவும் சிக்கலானதாகும். அவர்கள் ( புதிய ஆட்சியாளர்கள்) நமது தேசத்தின் பொருளாதாரம் மற்றும் அயல் உறவு கொள்கைகளின் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கப் போகிறார்கள். மேலும் சமீபத்தில் ஒரிசா மற்றும் கர்நாடகாவில் நிகழ்ந்த சம்பவங்களின் சாட்சியங்களிலிருந்து மதவெறி பாசிச சக்திகளின் ஆபத்தும் மிகவும் முக்கியமானதாக முன்னுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டில் அமெரிக்காவுடன் கேந்திர கூட்டாளியாக விரும்பி, அரசின் அயல் உறவு கொள்கை மாறியதன் விளைவாக மற்றுமொரு அபாயம் வளர்ந்துள்ளது.இது நமது நாட்டின் அணிசேராகொள்கையை கைவிடச்செய்வுள்ளது. அமெரிக்காவுடனும், இஸ்ரேலுடனும் நமது உறவு நெருங்குவதால் பயங்கரவாத சக்திகளின் எதிர்ப்பிற்கு ஆளாகியுள்ளோம். இத்தகைய தருணத்தில் நமது சுதந்திரமான அயல் உறவு கொள்கையை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு முற்போக்கான அரசாங்கமே உடனடித் தேவை. 

மாலாஸ்ரீ ஹஸ்மி -நாடகக் கலைஞர், ஜன நாட்டிய மன்ஞ் 

நடக்கக்கூடிய தேர்தல் ஒரு முத்திரை பதிக்கக் கூடியதாகஇருக்கும். காங்கிரஸ் ஆட்சியினை நீண்ட காலம் பார்த்திருக்கிறோம். அதேவேளையில் துரதிர்ஷ்டவசமாக பாஜகவையும் அதிகாரத்தில் அமர்த்தி கையைசுட்டுக்கொண்டதையும் பார்த்தோம். இந்த இரு கட்சிகள் மத்தியிலும் ஒரு மாற்று திட்டம் இல்லை என்பது கண்கூடாக தெளிவாகியுள்ளது. வரலாற்றில் என்றுமில்லா நிலையில் பொருளாதார நெருக்கடியால் உலகம் முழுவதும் பின்னி பிணைந்துள்ளது. தாராளமயச் சந்தையைக் கொண்ட முதலாளித்துவத்தை ஏளனமாகப் பார்க்க முடிகிறது.நம்முடைய சொந்த மக்கள் சம்பள வெட்டு, ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியோ இதைப்பற்றி கவலைப்படாமல் தன்னுடைய வழக்கமான பணியிலேயே மூழ்கிக் கிடக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரையில் மக்கள் மத்தியில் வெறுப்பையும் வன்முறையை விதைப்பவர்கள் என்பதைத் தவிர அவர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும். பெரும் எண்ணிக்கையில் இடது சாரி நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதன் மூலம் இந்திய அரசியலில் ஒரு புதிய திசைவழியை இந்திய மக்கள் அளிக்க முடியும். 

விஜய் பிரசாத் - சர்வதேச துறை ஆய்வு பேராசிரியர், டிரிட்னி கல்லுாரி 

லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்றுவரும் ஒவ்வொரு தேர்தலிலும் இடது சாரிகள் ஆட்சிக்கு கொண்டு வரப்படுகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு இதன் தோற்றமே வித்தியாசமானதாக இருந்தது. தாராளவாத வலதுசாரி ஆட்சியாளர்கள் தங்களை ஒழுங்குள்ள மற்றும் திறமையான கட்சியினர் என்றும் உலக மயமாக்கலின் உள்ளூர் குத்தகைதாரர்கள் என்றும் அழைத்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் மிக மோசமான பொறுப்பற்றவர்களாகவும், லஞ்ச ஊழலில் திளைத்தும் கொடுமையானவர்களாகவும் வெளிப்பட்டனர். இத்தகைய தருணத்தில் இடதுசாரிகளும், சமூக இயக்கங்களும் நவீன தாராளமயம், சர்வாதிகாரத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையினை ஏற்படுத்தும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். பொலிவியாவிலிருந்து வெனிசுலா வரையிலும், கியூபா முதல் எல்சல்வடார் வரையிலும் உள்ள சக அரசுகள் ஒன்றுபட்டுள்ளதால் லத்தின் அமெரிக்கா முழுமையும் சிவப்பாக காட்சியளிக்கிறது. இப்போது இது இந்தியாவின் தருணம். கடுமையான நிதி நெருக்கடியை சுமத்திய காங்கிரஸ் கட்சி, ஏழைகளுக்கான கட்சி என்ற தகுதியை இழந்து விட்டது. வர்க்க சக்திகளுடன் இரும்புக் கரம் கோர்த்துக் கொண்டுள்ளதால் ஏழைகள் மீதான இரக்க குணத்தை காட்டுகிற அதனுடைய பட்டுகையுறையை இப்போது இழந்து விட்டது. பாஜகவிடம் இந்த பட்டு கையுறை கூடல்லை. ஆகவே இவை இரண்டும் மிக மோசமான தேர்வுகளாகும். எதிர்காலத்தை பொறுத்தவரையில் இடதுசாரிகள் மட்டுமே கம்பீரமாக முன் நிற்கிறார்கள். லத்தீன் அமெரிக்கா தரும் செய்தியும் இதுவே. 

ஜி.பி.தேஷ்பாண்டே - நாடக ஆசிரியர் 

நாம் அனைவரும் அடுத்த ஒரு மாபெரும் தேர்தல் களத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இவை உணர்வுகளை கிளர்த்தி விடுகிற காலம். ஆனால் அவைகள் சிக்கலான காலமும் கூட. நாம் கொஞ்சம் நிச்சயமற்றதாக இருந்தால் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாது.இவ்வாறு தீர்மானம் செய்யாமல் இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படும் விஷயமல்ல. உண்மையில் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? யார்.. எந்த அரசியல் அமைப்பு... இந்திய மக்களின் நலன்களுக்கான கொள்கைகளை கொண்டவர் என்பதை நாம் பார்க்க வேண்டும். அந்த வகையில் எந்த அமைப்புக்கள் உள்ளன என்பதைப் பரிசீலிக்க வேண்டும். இந்திய பொருளாதாரம் மற்றும் அரசியல் சுயாதிபத்தியத்தையும் புனிதமாக கருதி மேலான காரியங்களை ஆற்றுகிற அரசியல் அமைப்போ அல்லது மனிதர்களோ இருக்கிறார்களா? ஆம் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவோடு அணுசக்தி உடன்பாடு ஏற்பட்ட சமயத்தில் அவர்கள் யார் என்பது நமக்கு தெரியவந்தது. இந்திய மக்களின் நலன், நாட்டின் ஒருமைப்பாடு, சுயாதிபத்தியம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களேயானால், இடதுசாரிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு உண்மையான மாற்று இல்லை. 

கருத்துகள் இல்லை: