வியாழன், 11 ஜூன், 2009

வேலையின்மை வளர்வது ஏன்?

இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடியால் அதிகரித்திருப்பது வேலையின்மை என்பதை விட வேலையிழப்பு என்பதே சரியானதாகும். அப்படியானால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பது எதனால் என்ற கேள்வி இயல்பாகவே எழும்.

இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடி உருவாகக் காரணமான உழைப்புச் சுரண்டல் மூலம் இலாபம் என்பதை ஆதாரமாகக் கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பு முறைதான் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு அடிப்படையான காரணமாகும்
. ஏனெனில் இலாபவேட்டையுடன் கூடிய மூலதனம் தனது இலாபத்தை அதிகரித்திட இரண்டு வழிகளை கையாளும். ஒன்று, மூலதனத்தைக் கொண்டு உற்பத்தி செய்யும்பொருட்களின் விலையைக் கணிசமாக உயர்த்துவது, மற்றொன்று உற்பத்திச் செலவைக் குறைப்பது என்ற பெயரால் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் கூலியைக் கணிசமாகக் குறைப்பது. இவ்வாறு கூலியைக் குறைத்திட அல்லது குறைந்த கூலிக்குத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திட வேண்டுமெனில், வேலைக்குப் போட்டியிடக் கூடிய தொழிலாளர்கள் அதிகமாக இருந்தால்தான் இது சாத்தியமாகும்.

எனவேதான், முதலாளித்துவம் திட்டமிட்டு வேலையில்லாத் திண்டாட்டத்தை வளர்த்து வந்துள்ளது. ‘சந்தையில் பொருட்களின் வரத்து அதிகமானால் விலை குறையும்’ என்பது ஒரு பொருளாதார விதி. அதன்படியே வேலைவாய்ப்புச்சந்தையில் வேலை வேண்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, இயல்பாகவே கூலியை குறைக்க முடிகிறது. எனவே, அரசுச் செலவில், கலை, அறிவியல், தொழில்நுட்பக் கல்வியை அளித்துவிட்டு, அவர்களுக்கான வேலையைக் கொடுக்காமல், அவர்களை நிர்க்கதியாய் விட்டுவிடுவதை முதலாளித்துவ அரசுகள் தங்களது கடமையாகவே செய்து வருகின்றன. தனியார் இதனைப் பயன்படுத்திக் கொண்டு, அடிமாட்டுக் கூலிக்கு ஆட்களை வேலைக்கமர்த்திக் கொண்டு அபரிமிதமான இலாபத்தை அடைகின்றனர்.

ஆகவே முதலாளித்துவ அமைப்பு உருவாக்கி வளர்த்துவரும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முதலாளித்துவ அமைப்பிற்குள் முழுமையான தீர்வை காண முடியாது. இதுவரை உலகில் சோசலிச அமைப்பு முறைதான் வேலையின்மைப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கண்டுள்ளது என்பது முந்தைய சோவியத் யூனியன், மக்கள் சீனக்குடியரசு மற்றும் கியூபா ஆகிய சோசலிச நாடுகள் நிரூபித்துள்ள உண்மையாகும்.

எனவே இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பை முடிவுகட்டி, அதனிடத்தில் ஒரு சோசலிச அமைப்பு நிறுவுவதற்கான போராட்டம்தான் வேலையில்லாத் திண்டாட்டத் திற்கு முடிவு கட்டக்கூடிய முழுமையான போராட்டமாகும்.

சமூக உணர்வு கொண்ட ஒவ்வொரு தொழிற்சங்கமும் தனது திரட்டப்பட்ட சக்தியை அத்தகைய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லப்பயன்படுத்த வேண்டும். அப்போராட்டத்தை மேலும் வலுவாக நடத்திட, வேலைவழங்கப்படாதவர்களை அணிதிரட்டுவதென்பதையும், தனது வேலைத்திட்டமாக முன்வைத்துச் செயல்படவேண்டும்.

-ஆர்.எம்.எஸ்.

நன்றி : “அரசு ஊழியர்” இதழ் ஜூன் 2009

கருத்துகள் இல்லை: