வியாழன், 25 ஜூன், 2009

முகம் மூடாத கொள்ளைக்காரர்கள்

கல்லூரி நிர்வாகி : கங்ராஜூலேஷன்ஸ் தம்பி, உங்களுக்கு மெடிக்கல் ஸீட் கொடுக்க முடிவு செஞ்சிருக்கோம். காலேஜ் ரூல்ஸ் எல்லாம் தெரியும்லே? நாங்க ரொம்ப ஸ்டிரிக்ட். ரூல்ஸ்படிதான் நடப்போம்.

மாணவரின் தந்தை: என்ன ரூல் ஸார்?

க.நிர்வாகி : என்ன ஸார், அதுவே தெரியாதா? டொனேஷன் கேஷாத்தான் கொடுக் கணும். அந்த ரூலைச் சொன்னேன். பணத்தை எதுலே கொண்டு வந்திருக் கீங்க? லாரியிலேயா, வேன்லேயா?

மாணவன் : டொனேஷன் எவ்வளவு ஸார்?

க.நிர்வாகி : ஏஜென்ட் சொல்லியிருப்பாரே, அவர் கமிஷன் போக, அறுபத்தஞ்சு லட்சம் கட்டினா போதும். பணத்தை எண்ண 15 பேர் கொண்ட கமிட்டி நியமிச்சிருக்கோம். அந்த கமிட்டியிலே கட்டிடுங்க.

மாணவன் : ஸார் நான் ரெகமண்டேஷன்லே வந்திருக்கேன்.

க.நிர்வாகி : தெரியும் தம்பி. அதனாலதான் உங்களுக்கு சீப்பா 65 லட்சத்துலே முடிக்கிறேன். இல்லேன்னா ஒண்ணரை கோடி ஆகுமே!

மா.தந்தை : ஸார்.. டொனேஷன் கேக்கக்கூடாதுன்னு பேப்பர்லே போட்டிருந்தாங்களே...?

க. நிர்வாகி: (சிரித்து), அடப்பாவமே! அதை நீங்களும் நம்பிட்டீங்களா? மினிஸ்டரே ஃபோன் பண்ணிச் சிரிக்கிறாரு. ‘டொனேஷன் வாங்கக் கூடாது’ன்ற அரசாங்க உத்தரவு இப்ப வராது. அட்மிஷன் முடிஞ்சு, டொனேஷன் எல்லாம் கம்ப்ளீட்டா வசூலான பிறகுதான் தடை போடுவாங்க. அதான் அரசாங்கத்தோட கல்விக்கொள்கை. நாங்க ‘க்ளியரன்ஸ்’ கொடுக்காம கவர்மென்ட்லே ஆக்ஷன் எடுக்க மாட்டாங்க.

மா.தந்தை : இது சட்டவிரோதம் இல்லையா?

க.நிர்வாகி : நாங்களும் கவர்மென்டும் இணைஞ்சு கல்விச் சேவை செய்யறது சட்டவிரோதமா? என்ன பேசறீங்க நீங்க? கவர்மென்டுக்குத் தெரியாம வாங்கினாத் தான் நாங்க பயப்படணும். இங்கே எல்லாம் வெளிப்படையாத்தான் நடக்கும்.

மாணவன் : டொனேஷன் அதிகமா இருக்குதே ஸார்...

க.நிர்வாகி : நாப்பதாயிரம், அம்பதாயிரம் வாங்கிட்டு அட்மிஷன் கொடுக்க இதென்ன கிண்டர் கார்டனா? யுனிவர்ஸிடி தம்பி. உன் அதிர்ஷ்டம், நீ இந்த வருஷமே செலக்ட் ஆயிட்டே. அடுத்த வருஷம் வந்தா, இன்னும் ஒரு 25 லட்சம் சேர்த்துக்கட்டணும். அந்த லாபத்தை நினைச்சுப்பாரு.

மா.தந்தை : அதுக்கில்லை ஸார். வந்து.. வீட்டை வித்துத்தான் டொனேஷன் கொடுக்கணும். அதனாலே...

க.நிர்வாகி : வீட்டை நேரடியா என் பேருக்கே எழுதி வெச்சுடறேன்றீங்களா? ஏற்கெனவே நிறைய வீட்டை வெச்சுக்கிட்டு நான் கஷ்டப்படுறேன். மாசா மாசம் வாடகை வசூல் பண்றதே பெரிய வேலை. அதனாலே வீட்டை வேற யாருக்காவது வித்துட்டு, டொனேஷனை மட்டும் இங்கே கட்டுங்க. அடுத்த வாரத்துக்குள்ளே கட்டணும். அதுவரைக்கும் பணம் வராம இருந்தா, மேனேஜ்மெண்டுக்கு எவ்வளவு வட்டி நஷ்டம்னு யோசிச்சுப்பாருங்க.

மாணவன் : வீட்டை வித்தாக்கூட அவ்வளவு பணம் கிடைக்காது ஸார், கொஞ்சம் வெளியே கடன் வாங்கணும்.

க.நிர்வாகி : அதுக்கென்ன, வாங்கிடுங்களேன். லோன் வாங்கித்தரவும் எங்க மேனேஜ்மென்ட்லே ஏற்பாடு பண்ணியிருக்கோம். செகண்ட் ஃப்ளோர்லே போய்ப்பாருங்க... அஞ்சு பர்ஸண்ட் இன்ட்ரஸ்ட்தான்.

மாணவன் : எஜூகேஷன் ஃபீஸ் எவ்வளவு ஸார்?

க. நிர்வாகி : அது அவ்வளவு ஆகாது. ஏழெட்டு லட்சத்துக்குள்ளே முடிஞ்சிடும். டொனேஷனுக்குத்தான் ரசீது கிடையாது. இதுக்கு உண்டு. இதனாலே எவ்வளவு இன்கம்டாக்ஸ் கட்ட வேண்டியிருக்குது தெரியுமா? வயிறு எரியுது. அநியாயத்துக்கு வசூலிக்கிறாங்க. பகல் கொள்ளை, கேக்கறதுக்கு ஆளே இல்லாமப்போச்சு.

சத்யா
நன்றி : ‘துக்ளக்’ 24.6.2009

கருத்துகள் இல்லை: