வியாழன், 2 ஜூலை, 2009

தலித் மீதான வன்முறையில் இந்துத்துவம்


கோ.ரகுபதி
வர்க்கம் மற்றும் மொழி முரண்பாட்டினை விடவும், குறிப்பாக தலித்துகளுக்கும் தலித்தல்லாதோருக்கும் இடையே சாதியடிப்படையிலான முரண்பாடே அடிப்படையான முரண்பாடாக இருந்து வருகிறது. தலித்துகளுக்கு சட்டம் வழங் கியிருக்கும் உரிமையினை அடைவதற்கு அவர்கள் முற்படும் பொழுது, அவ்வுரி மையை புறக்கணிப்பதற்கு தலித்தல் லாத சாதிகள் ஒன்றிணைவதில் சாதியே அடிப்படையான முரண்பாடாக செயல் படுவதைக் காணமுடியும். இம்முரண் பாடு தலித்துகளை சமூகப் பொருளாதார தளத்தில் விலக்குவதில் தொடங்கி அவர் களின் சொத்துக்களை சூறையாடுதல், வீடுகளை எரித்தல், பாலியல் வன் புணர்ச்சி, படுகொலை செய்தல் என்ற கட்டத்தை அடைந்து இறுதியில் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படுகின்ற நிலையில் முடிவடைகிறது. ஆனால் தலித்துகள் பொருளாதாரத்தில் மட்டு மின்றி எண்ணிக்கையிலும் சாதி இந்துக் களை எதிர்த்து தாக்கும் அளவிற்கு வலிமையுடன் இருக்கின்ற பகுதி களில் தலித்துகளுக்கும் தலித்தல்லாதோருக் கும் இடையிலான முரண்பாடு உக்கிர மான மோதல் வடிவத்திற்கு சென்றுவிடு கிறது. அம்பேத்கரின் நூற்றாண்டு விழா வினையட்டி தலித்துகளின் எழுச்சி, வேலையின்மை, இடஒதுக்கீட்டின் விளைவினால் முன்னேற்றமடையும் தலித்துகளின் மீதான வெறுப்பு போன் றவை தலித்துகளுக்கும் தலித்தல்லாதோ ருக்கும் இடையிலான மோதலுக்கான காரணங்களாக கூறப்பட்டிருக்கின்றன; இவற்றினை புறக்கணிக்க இயலாது அவைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதே. இருப்பினும், கிராம அளவில் நுணுக்க மான ஆய்வினை மேற்கொள்கிற பொழுது பன்னெடுங்காலமாய் தலித்து களை சமூகப்-பொருளாதார பண்பாட்டு மற்றும் அரசியல் செயல்பாட்டில் பங் கேற்பதிலிருந்து திட்டமிட்டே விலக்கி வைத்தலும், இவற்றில் முழுமையாகப் பங்கேற்பதற்கு அல்லது அவற்றினை அனுபவிப்பதற்கு தலித்துகள் முயற்சிக் கிற பொழுது அதனையும் சாதி இந்துக் கள் தடுப்பதனால் மோதல் நடைபெற்றி ருப்பதனைக் காணமுடிகிறது. இங்கு நுணுக்கமான ஆய்வினை மேற் கொள்வதற்கு முயற்சிக்கவில்லை, மாறாக தலித்துகளுக்கு எதிரான சாதி இந்துக்களின் கொடூர மான வன்முறையில் இந்துத்துவ அமைப்புகள் பெரும் பங்காற்றி இருப்பினும், அது குறித்த விவாதம் சமூக அறிவியல் புலத்தில் இல்லாதிருக்கிறது; மேலும், தலித்து களுக்கும் தலித்தல்லாதோருக்கும் இடையேயான மோதல் சாதிகளுக்கிடையேயானது என்ற நோக்கு மேலோங்கி இருக்கிறது. எனவே, தலித்துகள் மீதான வன்முறையில் இந்துத்துவ அமைப்புகளின் பங்கினை எடுத்துரைப்பதற்கு இக்கட்டுரை முயற்சிக்கிறது.

தேவர், தேவேந்திரர்: இந்து, இசுலாம்

சமூகப்-பொருளாதார பண்பாட்டு மற்றும் அரசியல் செயல்பாட்டில் பங்கேற்பதிலிருந்து தலித்துகளை திட்ட மிட்டே விலக்கி வைப்பதில் தென் மாவட்டங்களில் முன்னணியாய் இருந்து வருகின்ற சாதிகளுள் தேவர்களும் ஒரு பிரிவினர். இவர்களோடு கடந்த நூற்றாண்டில் தீண்டாமை உட்பட இதர சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற்ற சாதியான நாடார் முதற்கொண்டு பார்ப்பனர் வரை இணைந்திருப்பினும் வெளிப்படையாக பேசப்பட்டிருப்பது தேவர் சாதியினரை குறித்து மட்டுமே. இப்பிரிவினர் தலித்துகளுக்கு எதிரான கொடூர வன்முறையில் முன்னணியாக ஈடுபட்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை வெளி உலகம் அடையாளம் கண்டுகொண்டது. ஆனால் அவர்களுக் கும் பல்வேறு இந்துத்துவ அமைப்பு களுக்கும் உள்ள தொடர்பு குறித்தோ அல்லது தலித்துகளுக்கு எதிரான வன் முறையில் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடு குறித்தோ அதிகம் பேசப்பட்டிருக்கவில்லை.

காலனிய ஆட்சி உருவாக்கிய குற்றப் பரம்பரை சட்டத்தினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாயிருந்த சாதிகளில் ஒன்றான தேவர்கள் இந்துமதத் தீண்டாமைக் கொடுமையையும் ஏற்றத்தாழ் வினையும் எதிர்த்து செயல்பட்டுவந்த சமூக இயக்கங்க ளோடு தங்களை இணைத்துக் கொள்ளாமல் அதிலிருந்து விலகியே இருந்தனர். ஆனால் சிந்தனை அளவிலும் செயல ளவிலும் பெரும்பான்மையான தேவர் சாதியினர் இந்து மதத்தின் கருத்தியலோடும் அதனை செயல்படுத்துவதிலும் ஒன்றிணைந்திருந்தனர். இதற்கான உதாரணமாக பின்வரும் வரலாற்று நிகழ்வினை குறிப்பிடலாம்: 1930களின் தொடக் கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவர்கள் தலித்துகள் கடைபிடிக்க வேண்டுமென அறிவித்த பண் பாட்டுக் கட்டளைகளானது 1928ம் ஆண்டு மத்திய இந்தியா வில் இந்தூர் மாவட்டத்தில் பார்ப்பனர்கள், ராஜ் புத்திரர்கள் முதலிய சாதி இந்துக்கள் தலித்துகள் மீது விதித்த விதி களோடு ஒத்து இருக்கிறது.2 இது தேவர் சாதியினர் கருத்தியல் மற்றும் செயல்பாட்டு அளவில் பார்ப்பனர் மற்றும் மேல்சாதி இந்துக்களின் இந்துப்பண்பாட்டிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை என்பதை தெளிவாக எடுத்துரைக் கிறது. குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய தலைவர்களுள் ஒருவரும் குறிப்பிடத்தக்க அளவு தேவர் சாதியினரின் ஆதரவினைப் பெற்றிருந்தவருமான முத்து ராமலிங்கத் தேவர் தன்னை இந்து மதத்தோடே ஐக்கியப் படுத்தியிருந்தார். மேலும், முதுகுளத்தூர் அருகே அபிராம் கிராமத்தில் 1946ல் அமைக்கப்பட்ட இந்து மகா சபையின் தலைவராகவும் இருந்தார்.3 இந்துத்துவத்தின் முன்னோடி யான கோல்வால்கரை அழைத்து பொன்முடி பரிசளித்தார்.4 இந்து மகா சபைத் தலைவர் தேஷ் பாண்டே, இந்து மகா சபையின் செயல்பாடுகளை பரீசிலனை செய்யவும், தேர்த லில் இந்து மகா சபைக்கு தமிழகத்தின் தலைமையினை முத்துராமலிங்கத் தேவரை ஏற்றுக்கொள்ளுமாறும் தமிழகத்தில் கணபதி என்பவர் மூலம் கேட்டுக்கொண்டார். முத்துராமலிங்கத் தேவர் இக்கோரிக்கையினை ஏற்றுக் கொள்ளவில்லை ஆனால் அவர் எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் இந்து மகா சபாவிற்கு ஆதரவாக செயல்படு வதாக உறுதியளித்தார்.5 இந்த நிகழ்வுகள், தேவர்களின் ஒப்பற்றத் தலைவரும் அம்மக்களும் இந்துத்துவத்தோடு அணிசேர்ந்திருந்தனர் என்று முடிவு செய்வதற்கே அழைத்துச் செல்கிறது.

சாதிய அமைப்பில் தீண்டாமை உட்பட பல்வேறு ஒடுக்கு முறைக்கு உள்ளாகின்ற தலித்துகளில் பள்ளர் எனப்படும் தேவேந்திரர்களும் அடக்கம். காலனி ஆட்சிக் காலத்தில் சாதிய அமைப்புகள் மூலம் தமது சமூக நிலையினை முன் னேற்றிக் கொள்வதற்கு முயற்சித்த இவர்கள் சாதிய கட்ட மைப்பில் தாக்குதலை ஏற்படுத்தும் மதமாற்றத்தையும் விடுதலைக்கான ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அம்பேத்கரின் மதமாற்ற அறிவிப்பிற்கு முன்பிருந்தே தேவேந்திரர்கள் மதமாறத் தொடங்கினர். இந்து மயமாகி விட்ட கிறிஸ்துவத்தில் சமூக விடுதலை இல்லை என்பதை புரிந்து கொண்ட தலித்துகள் கிறிஸ்துவத்திற்கு மாற்றாக இசுலாம் மதத்தை தேர்வு செய்திருக்கின்றனர், 1940களில் இம்மாற்றம் தேவேந்திரர்களிடத்தில் நிகழ்ந்திருப்பதனைக் காணமுடிகிறது.6 திருநெல்வேலி அருகே உள்ள சீதைக் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரர்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வந்ததால் இசுலாம் மதத்தினை 1944ம் ஆண்டு தழுவினர்.7 1945ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சில கிராமங்களைச் சேர்ந்த தேவேந்திரர்கள் சுமார் 2000பேர் இசுலாம் மதத்திற்கு மாறியுள்ளனர். 1947ம் ஆண்டு ராமநாதபுரத்தில் தேவேந்திரர் ஒருவரை கோயிலி னுள் வழிபடுவதற்கு அனுமதிக்காத காரணத்தினால் அவர் இசுலாம் மதத்தைத் தழுவினார்.

எவ்வித அமைப்புகளின் துணையின்றியும் நடைபெற்ற தேவேந்திரர் களின் இசுலாம் மதமாற்றத்திற்கு எதிரான வன்முறையினை இந்துத்துவ அமைப்புகள் மேற்கொண்டன. ஆர்.எஸ்.எஸ். இயக்கம், சீதைக்குறிச்சி தேவேந்திரர்களின் இசுலாம் மதமாற்ற நிகழ்வினையட்டி திருநெல்வேலி யில் முகாம் நடத்தியது.8 இந்து மகா சபையோ பொய்ப் பிரச்சாரம் செய்வ தற்கு ஒருவருக்கு பணம் கொடுத்து திருநெல்வேலிக்கு அனுப்பியது. ஆரிய சமாஜம் தலித்துகளை மீண்டும் இந்து மதத்திற்குள் இழுப்பதற்கு முயற்சித்து தோல்வி அடைந்துவிட்ட தால் தேவர் சாதியினரைக் கொண்டு தேவேந்திரர்களைத் தாக்கியது.9 இதனால் அங்கு பதற்றம் உருவாகியது, தாக்குதலும் எதிர்த்தாக்குதலும் நிகழ்ந் திருப்பினும் கொலைகள் நிகழ்ந்திருக்கவில்லை. இச் சூழலில் சென்னையில் இந்து மிஷன் இயக்கம் கோபதி நாராயணசாமி செட்டி தலைமையில் நிறுவப்பட்டது. தலித்துகள் மதம் மாறுவதைத் தடுப்பதும், தீண்டாமை யினை ஒழிப்பதும் இந்த இயக்கத்தின் இலக்கு என அறிவித் தது,10 ஆனால் தீண்டாமையை ஒழிப்பதற்கு அவ்வியக்கம் என்ன முயற்சி எடுத்துக்கொண்டது என்பது தெரிய வில்லை. இதிலிருந்து தலித்துகளின் சமூக விடுதலைக்கு எதிரான செயல்பாட்டினை இந்துத்துவ அமைப்புகள் தேவர் சாதியினர் மூலம் காலனி ஆட்சிக்காலத்திலேயே செயல்படுத்தியிருப்பது தெளிவு. ஆதலால் தேவர்களையும் தேவேந்திரர்களையும் இவ்வாறும் புரிந்துகொள்ள வேண் டும்: மத அரசியலில் முரண்பட்டிருக்கும் இந்துத்துவத் தோடு தேவர்களும் இசுலாமோடு தேவேந்திரர்களும் இணைந்திருந்தனர். சமூக விடுதலையை இலக்காகக் கொண்டிருக்கும் தலித்துகளின் இசுலாம் மதமாற்றம் இந்துத் துவத்தோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் தேவர் சாதியினருக்கு விரும்பத்தக்க ஒன்றல்ல; அது வெறுக்கத்தக்கதே. தேவர்சாதியினர் மட்டுமின்றி, காலனிய ஆட்சிக்குப் பின்னர் இந்துக்களே இந்திய ஆளும் வர்க்கமாக மாறியதால் அவ் வர்க்கத்திற்கும் தலித்துகளின் இசுலாம் மதமாற்றம் விரும்பத்தகாததே. பொது வாகவே, இந்துமதக் கருத்தியல்களையும் அதுசார்ந்த மதிப்பீடுகளையுமே மிகுதி யாக பரப்புரைக்கும் பணியை காட்சி மற்றும் அச்சு ஊடகங் கள் செய்து வருகின்ற பொழுது இசுலாத்தை தழுவுகிற மக்கள்மீது கசப்புணர்வு ஏற்படுவது இயல்பானதாகி விடு கிறது.11 எனவே சமூக ஒடுக்குமுறையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு தலித்துகள் எடுத்துக் கொண்டி ருந்த இசுலாம் மதமாற்றத்திற்கு ஆதாரவான சூழல் நிலவி யிருக்கவில்லை என்ற பின்புலத்தோடு தலித்துகள் மீதான ஒடுக்குமுறையை காண்போம்.

இந்துக்களை உலுக்கிய மதமாற்றம்

தமிழகத்தில் காலூன்ற முயற்சித்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இசுலாம் எதிர்ப்பு அரசியலையே முன் னெடுத்தது; ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம்அரிஜனங்கள்இசுலாமிய அமைப்பின் தூண்டுதலால் மதம் மாறத் திட்டமிட்டிருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீட்டால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் 1980களின் தொடக்கத்தில் பிரச்சாரம் செய்தது.12 இதே காலக்கட்டத்தில் தீண்டாமைக் கொடுமை உட்பட பல்வேறு ஒடுக்கு முறைக்கு உள்ளாகிக் கொண்டிருந்த தென்காசி அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் தேவேந்திரர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதற்கு முடிவு செய்தனர். 1981ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் சுமார் 1500 தேவேந்தி ரர்கள்13 இசுலாம் மதத்திற்கு மாறிய நிகழ்வு இந்திய அளவில் இந்துத்துவவாதிகளை உலுக்கியது, அவர்களில் பலரும் மீனாட்சிபுரத்திற்கு படையெடுத்தனர். ஆர்.எஸ். எஸ்., விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் தலித்துகள் மீதான சாதி இந்துக்களின் ஒடுக்குமுறையை கண்டிப்பதற்கு பதிலாக இசுலாமியர்களின் நிர்ப்பந்தத்தால் தலித்துகள் மதம் மாற்றப்பட்டதாக பொய்ப் பிரச்சாரம் செய்தது.14 விசுவ இந்து பரிஷத்மறுமத மாற்றம்என்ற முழக்கத்தினை முன்வைத்து மீனாட்சிபுரம் அருகே உள்ள பண்பொழில் என்ற ஊரைச் சேர்ந்த பார்ப்பன நிலக் கிழாரின் உதவியுடன் மீனாட்சிபுரத்திற்குள் நுழைந்தது, ஆரிய சமாஜமும் இதே செயலைச் செய்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பேய், சுப்பிரமணிய சுவாமி (ஜனதா தள்), ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் ரெங்கசாமித் தேவர் உட்பட பலர்அரபு நாடுகளின் பணத்தின் மூலம் மத மாற்றம் செய்யப்பட்டதாக பொய்ப் பிரச்சாரம் செய்தனர்”. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் மற்றும் சாதி இந்துக்களை ஒருங்கிணைத்து நடத்திய கூட்டத்தில் சாதி மோதல் மற்றும்ஹரிஜன்இசுலாத்திற்கு மதம் மாறுவது குறித்து பேசப் பட்டது. பின்னர் அவர்கள் அங்கேஇந்து முன்னணிஎன்கிற அமைப்பினை ராம்கோபாலன் தலைமையில் உரு வாக்கினர். 15 மீனாட்சிபுரம் மதமாற்றத்திற்குப் பின்னர் அப் பகுதியில் மட்டுமின்றி திருநெல்வேலி மாவட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ். செயல்படத் தொடங்கியது.16 அவ்வியக்கம் சாதி இந்துக்கள் தலித்துகள் மீது கடைபிடித்து வரும் தீண்டாமை மற்றும் ஒடுக்குமுறையை ஒழிப்பதற்கு மாறாக தலித்துகள் மற்றும் இசுலாமியர்களுக்கு எதிராக தேவர் சாதியினர் மூலம் இடைஞ்சல்கள் செய்யத் தொடங்கியது.

இச்சூழலில் புளியங்குடி அருகே ஒரு இடத்தில் 1982 மார்ச் மாதத்தில் தனியார் பேருந்து ஒன்று தேவேந்திரர் சாதி யினைச் சேர்ந்த ஒருவரின் மாட்டு வண்டி மீது மோதியதில் மாட்டுக் கொம்பு ஒடிந்துவிட்டது. அத்தனியார் பேருந்து ஒதுங்கி செல்வதற்கு இடமிருந்தும் மாட்டு வண்டியில் மோதியதால் ஆத்திரமடைந்த மாட்டு வண்டி உரிமை யாளரும் அவரது மகனும் பேருந்து ஓட்டுநரை தாக்கினர். பேருந்து ஓட்டுநர் தேவர் சாதியினைச் சேர்ந்தவர் என்பதால் தேவர்கள் தேவேந்திரர்களைத் தாக்கினர், பதிலுக்கு தேவேந் திரர்களும் தேவர்களைத் தாக்கினர். பின்னர் தேவர்களோடு காவல் துறையினரும் இணைந்துகொண்டு தேவேந்திரர் களை தாக்கினர், அவர்களின் நெல் வயல், வாழைத்தோப்பு போன்ற சொத்துக்களை அழித்தனர். காவல்துறை பாதிக்கப் பட்ட தேவேந்திரர்களையே கைதுசெய்து சிறையில் அடைத்தது. அரசு அதிகாரிகளிடமும் அரசியல் கட்சி தலைவர்களிடமும் தேவேந்திரர்கள் முறையிட்டும் எந்த வித பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்படாததால் வெறுப்புற்ற தேவேந்திரர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கட்சி கொடிகளை அப்புறப்படுத்திவிட்டு தங்கள் சாதிச் சங்க கொடியினை ஏற்றினர். இச்சூழலில் அப்பகுதியினைச் சேர்ந்த முஸ்லீம்களும் தேவேந்திரர்களும் இணைந்து சகோதர சமத்துவ சங்கத்தினை ஆரம்பித்தனர். அரசு சலுகை கள் பெறுவது, சமுக பாதுகாப்புக்கு ஒத்துழைப்பது, வெளி யூர்களிலிருந்து இப்பகுதிக்கு அரசு பணிகளுக்கு வருகின்ற தலித் மற்றும் இசுலாமியர்களுக்கு உதவி செய்வது போன்றவையே சகோதர சமத்துவ சங்கத்தின் நோக்கம் என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.17 இச்சங்கம் சார்பில் அம்பேத்கர் மற்றும் காயிதே மில்லத் பிறந்த நாள் விழா 8 ஜூன் 1982 அன்று கடையநல்லுரில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேவர், நாடார், வெள்ளா ளர், கோனார் சாதியைச் சேர்ந்தோர், ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ், தி.மு.., .தி.மு.. கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் இணைந்து புளியங்குடி செல்லையா கட்டிடத்தில் கூட்டமொன்று நடத்தினர்; அதில் சகோதர சமத்துவ சங்கத்தின் விழா அன்றே தாங்களும் விழா நடத்துவது, கட்சி வேறுபாடின்றி சாதி இந்துக்கள் ஒன்றிணைவது என்று முடிவு செய்தனர்.

இந்துத்துவத்தோடு கைகோர்த்திருந்த மேல் மற்றும் இடை நிலைச் சாதிகள், காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சியினர் 8 ஜூன் 1982 அன்று பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். புளியங்குடி நகர் முழுவதும் மஞ்சள் நிறத்திலான பட்டுத் துணியில் ஓம் என்று எழுதி பறக்க விட்டிருந்தனர். மேல் மற்றும் இடைநிலைச் சாதியினர் சுமார் 7000 பேர் ஊர்வலத் தில் பங்கேற்றிருந்தனர்; பள்ளர், பறையர், சக்கிலியர் மற்றும் முசுலீம்கள் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப் படத்தக்கது. ஊர்வலத்தில் அரிவாள், கம்பு மற்றும் வெடி குண்டுகள் வைத்திருந்த அவர்கள்ஆர்.எஸ்.எஸ் வாழ்க’, ‘இந்து சாம்ராஜ்யம் வாழ்க’ ‘பண்ணிக் கறி தின்னும் பள்ளன் ஒழிக’, என்று கூச்சலிட்டனர். இச்சமயத்தில் சகோதர சமத்துவ சங்கத்தின் விழாவில் பங்கேற்பதற்காக கடைய நல்லுர் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த தேவேந்திரர் கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஞானரதம் தங்களின் தெரு வுக்குள் வருகிற செய்தியை அறிந்துநாங்கள் எங்கள் சங்க விழாவுக்குச் செல்ல இருப்பதால் ரதம் எங்கள் தெருவிற்குள் வரவேண்டாம்எனக் கேட்டுக் கொண்டனர். ஞானரதம் நிகழ்ச்சி தொடங்கிய பின்னரே தலித்துகள் மீதான வன்முறையும் தொடங்கப்பட்டது.18 ஞான ரதம் தங்கள் தெருவிற்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தி னால் ஆத்திரமுற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடைய நல்லுர் போகும் தேவேந்திரர்களையும் முசுலீம்களையும் சொக்கம்பட்டி முக்கிய சாலையில் உள்ள ஆதிக்கச்சாதியின ரின் வீட்டு மாடிகளில் இருந்து கொண்டு நாட்டு வெடி கொண்டு, சோடா பாட்டில், கற்கள், காய்ச்சிய எண்ணை ஆகியவற்றால் தாக்கியதில் 15 தலித்துகளும் ஒரு இசுலா மியரும் படுகாயமடைந்தனர். அடுத்த நாள் 09 ஜூன் 1982 சொக்கம்பட்டி வழியாக வந்து செல்கின்ற பேருந்துகளை நிறுத்தி ‘’பஸ்ஸில் யாராவது பள்ளன், பறையன், துலுக்கன் இருந்தால் கீழே இறங்கு’’ என்று கூச்சலிட்டனர்; தலித் மற்றும் இசுலாமியரை தேவர்கள் தாக்கினர். 10 ஜூன் 1982 தேவர் சாதியைச் சேர்ந்த சுமார் 1500 பேர் அய்யாபுரம் மற்றும் வெள்ளையக்கவுண்டன்பட்டி தேவேந்திரர்களை தாக்கி வீடுகளுக்கு தீ வைத்தனர், பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டன. மேலும் காவல் துறையினரும் தேவேந்திரர்களை தாக்கினர். 15வயதுடைய தேவேந்திரர் சிறுவன் துப்பாக்கிச்சூட்டில் பலியானான்; ஆனால் வன் முறை கும்பல் எவ்வித தாக்குதலுக்கும் உள்ளாகியிருக்க வில்லை. காவல் துறையினர் தேவேந்திரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு செயல்படவிடாமல் தடுத்தனர் ஆனால் வன்முறையாளர்களை ஒன்றும் செய்யவில்லை, அவர்கள் தங்களின் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தனர். அய்யாபுரத்து தேவேந்திரர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு தப்பித்து ஓடிய பொழுது ஓடஓட வன் முறைக் கும்பல் வெட்டியதில் சந்திரன், ஜெயசீலன், யோவான், மாசிலாமணி, மாடத்தியம்மாள் ஆகிய தேவேந் திரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கர்ப்பிணிப் பெண் ஒருவர் மிதிக்கப்பட்டார், சில பெண்களின் நகைகள் காது களோடு சேர்த்து வெட்டி எடுக்கப்பட்டது, 6 வயது குழந்தை துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யப் பட்டது.19 ஒரு பெண்ணின் கைக்குழந்தையை கிணற்றில் தூக்கி எறிந்தனர். ஆண்டு முழுவதற்கும் சேமித்து வைத்தி ருந்த கம்பு, கேழ் வரகு, சோளம் போன்ற உணவு தானியங் களை எரித்தனர். மேலும் அடுத்தநாள் புளியங்குடியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் தேவேந்திரர்கள் மேற்கூறப் பட்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்; தேவேந்திரர் மற்றும் முசுலீம்களின் சொத்துக்கள் எரித்துச் சூறையாடப்பட்டது. இக்கொடூர அடக்குமுறைகள் பெரும் பாலும் காவல்துறையினர் முன்னிலையிலேயே நடந்தது.20 தேவேந்திரர் மற்றும் முசுலீம் மக்களின் மீதான இவ்வொடுக்குமுறைக்கு காரணம் அரபுநாட்டு பணம், மதமாற்றுவதற்கு விரும்பும் முசுலீம் மக்களின் செயல் என இந்துத்துவ அமைப்புகளாலும், பார்ப்பனரால்லாத மேல் மற்றும் இடைநிலைச் சாதிகளின் தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர். துக்ளக் இதழானது, அரிஜனங்கள் இப்பொழு தெல்லாம் பிற சமுகத்தினரை தரக் குறைவாக பேசி வருகின்றனர், இசுலாமியரோடு சேர்ந்து கொண்டு இந்துக் களின் நலன்களுக்கு உலைவைக்கப் பார்க்கிறார்கள் என்று அவதூறு பிரச்சாரம் செய்தது.21

புளியங்குடி வன்முறைக்கு நான்குநாட்களுக்கு முன்னர் திருநெல்வேலி பகுதியில் தேவேந்திரர்கள் தாக்கப்பட்டனர். 1982ம் ஆண்டு ஜூன் மாதம் 4ந்தேதி திருநெல்வேலியில் உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராமையாத் தேவர், சுடலைக்கண்ணுத் தேவர் ஆகியோரின் ஆதரவாளர்கள் தேவேந்திரர்களைத் தாக்கினர். இதற்கு நீதி கேட்பதற்காக ராமையாத் தேவரின் வீட்டுக்கு தேவேந்திரர்கள் சென்ற பொழுது ராமையாத் தேவரும், அவரது ஆதரவாளர்களும் வெடிகுண்டுகளையும், சோடா பாட்டில்களையும் வீசி தேவேந்திரர்களைத் தாக்கியதால் அவர்கள் திரும்பி சென்று விட்டனர். அன்றிரவு சுமார் 11மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட தேவர்கள் குருந்துடையார்புரத்தில் நுழைந்தனர். ஒவ்வொரு தேவேந்திரர்களின் வீடுகளின் கதவுகள் தட்டப் பட்டது. கதவினைத் தட்டியவர்கள் காக்கிச் சீருடை அணிந் திருந்த காரணத்தினால் தேவேந்திரர்கள் காவல்துறையினர் என்று கருதி கதவுகளைத் திறந்த பொழுது தேவேந்திரர்கள் தாக்கப்பட்டனர். திருநெல்வேலியில் உள்ள கொக்கிரக் குளம், ஜோதிபுரம் பகுதிகளில் உள்ள தேவேந்திரர்களையும் தாக்குவதற்கு தேவர்கள் முயற்சித்தனர். காக்கிச் சீருடை அணிந்து வந்து தங்களை தாக்கியது ஆர்.எஸ்.எஸ். அமைப் பினைச் சேர்ந்த தேவர்களே என்று தாமதமாகவே தேவேந் திரர்கள் அறிந்தனர். மேலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்த தேவர் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று வரு வதும், அது தேவேந்திரர்களை தாக்குவதற்கான தயாரிப்புப் பணியே என்ற செய்தியும் நிலவியது.22 இச்செய்தியினை மேற்குறிப்பிட்ட தாக்குதல்களோடு இணைத்து நோக்கும் பொழுது உண்மை என்றே படுகிறது. இதற்குப் பின்னர் இந்துத்துவத்தோடு இணைத்திருந்த முத்துராமலிங்கத் தேவரின் சிலை தென்மாவட்டத்தில் பல இடங்களிலும் நிறுவப்பட்டது; இது தேவர்களை இந்துத்துவத்தோடு மேலும் ஐக்கியப்படுத்துகிற செயலே தவிர வேறல்ல. 1980 களின் இறுதியில் குறிப்பாக 1989ம் ஆண்டு போடி, தேவாரம் ஆகிய பகுதிகளில் தேவேந்திரர் மீதான ஒடுக்கு முறையில் இந்து முன்னணியும் இணைந்திருந்தது இவ் விடத்தில் நினைவு கூறத்தக்கது.23 1990களில் தான் தேவேந் திரர்கள் தேவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந் தெழுந்து பதில் தாக்குதல் தொடுத்தனர். 1980களில் தேவேந் திரர்கள் மீது இந்துத்துவ அமைப்புகளின் பின்னணியில் நிகழ்த்தப் பெற்ற வன்முறைக்கும் 1990களில் நிகழ்த்தப் பட்ட வன்முறைக்கும் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகி றது. 1995 தேவர்களின் வன்முறையும் அதற்கெதிரான தேவேந்திரர்களின் எதிர்தாக்குதலும் தொடங்கிய இடம் வீரசிகாமணி, இவ்வூர் 1981ல் இசுலாம் மதத்திற்கு மாறிய மீனாட்சிபுரத்திற்கு மிக அருகாமையிலேயே உள்ளது. எனவே, 1995 வன்முறையில் இந்துத்துவ அமைப்புகளின் பங்கு இல்லை என்று கூறுவதற்கில்லை.

முடிவுரை

இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்துக் கொண்டாலும்கூட ஆளும் வர்க்கம், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் பிரச்சாரம் இந்துத்துவத்தையே அடிப்படை யாகக் கொண்டிருக்கிறது; இசுலாம் மீது ஒருவித வெறுப் பையும் கொண்டிருக்கிறது. இது இசுலாம் மீதான வெறுப்பு மட்டும் அல்ல அதில் தலித் விடுதலையை வெறுக்கும் போக்கும் ஆழப் பொதிந்திருக்கிறது. தலித் மற்றும் இசுலா மியர்களின் முன்னேற்றத்தை வெறுப்பதில் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், காங்கிரஸ், திராவிடக் கட்சிகள் என்ற பாரபட்சம் இன்றியும், பார்ப்பனர், சாதி இந்துக்கள், இடை நிலைச்சாதிகள் அனைவரும் எவ்வித வேறுபாடு இன்றியும் ஒன்றிணைந்திருக்கின்றனர். இதிலிருந்து, இந்து-சாதி மத வெறி அமைப்புகளுக்கும், விடுதலை இயக்க மரபினர், பார்ப்பனர் எதிர்ப்பின் வாரிசுகள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சி களுக்கும் இடையே வேற்றுமை அரிதே என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.

தலித்துகளின் முன்னேற்றத்தினை வெறுக்கின்ற, அவர்கள் கோயிலில் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கின்ற சாமானிய இந்துக்களுக்கும், தலித்துகள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தலித்துகளின் சமூக விடுதலைக்கான ஆயுதமான மதமாற்றத்திற்கு எதிராக வன்முறையை செயல்படுத்தும் இந்துத்துவவாதிகளுக்கும் உணர்வு நிலையில் ஒற்றுமையே நிலவுகிறது. தங்களை அடிப்படையில் இந்துக்களாக உணர்ந்து கொண்டு இந்து மதத்தின் கருத்தியல்களைப் பின்பற்றிக் கொண்டு இந்து மதத்தோடு தொடர்பற்ற நாட்டுப்புற கோயில்களில் புனிதம் தீட்டு என்ற கருத்தியல்களை செயல்படுத்தி அக்கோயில் களில் வழிபடுவதற்கு தலித்துகளுக்கு அனுமதி மறுத்து வருகின்ற பார்ப்பனரல்லாத சாதி இந்துக்கள் மற்றும் இடை நிலைச் சாதிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையில் வேற்றுமை இல்லை. தன்னை இந்துவாக உணர்ந்து கொண்டு இந்து மரபுப்படி தலித்துகள் இவ்வாறுதான் வாழவேண்டும், தலித்துகளுக்கு வரையறுக்கப்பட்டிருக்கிற எல்லைக் கோட்டினை மீறுவது தவறு என்று கூறுகின்ற சாமானிய இந்து உளவியல் வன்முறையை செயல்படுத்து கின்றனர், இந்துத்துவவாதிகளோ உடலியல் மற்றும் உளவியல் வன்முறையை தலித்துகள் மீது ஏவுகின்றனர். இங்கு வன்முறையை செயல்படுத்துவதில் சிறிய வேறு பாடு மட்டுமே இருக்கிறது, உண்மையில் சாமானிய இந்துக் களும் இந்துத்துவவாதிகளும் அடிப்படையில் தலித் விடுதலைக்கு எதிரானஎதிர்ப்புரட்சிபிரிவினரே. தென்மாவட்டத்தில் தலித்துகள் மீது ஏவப்பட்ட வன்முறை யும் அதற்கெதிரான அவர்களின் பதில் தாக்குதலும் தேவர் மற்றும் தேவேந்திரர்களுக்கு இடையிலான மோதலாகவே பார்க்கப்படுகிறது. இதில் தேவர் சாதியினர்எதிர்ப் புரட்சியின்முன்னணிப்படையே. எனவே தலித்துகளுக்கும் தலித்தல்லாதோருக்கும் இடையிலான மோதல் சாதிய மோதல் மட்டுமல்ல அது இந்துமதம் சார்ந்த ஏற்றத்தாழ் வினை நிலைநிறுத்தும் சாதியினருக்கும், சமத்துவத்தை அடைவதற்கு மதமாற்றம் உட்பட பல்வேறு போராட்டங் களை வலியுறுத்துவோருக்கும் இடையிலான மோதலாகும். இத்தன்மை தென்மாவட்டச் சாதிய மோதலில் அடிப்படையாய் இருந்திருப்பதனைக் காணமுடியும்.

மேற்கோள்கள்:

1.அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், தொகுதி 16, (புது டில்லி:
இந்திய அரசு, 1999), . 275.

2.அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், தொகுதி 10 (புதுடில்லி:
இந்திய அரசு, 1993), . 55-6.

3.ஆண்டியப்பத் தேவர், பசும்பொன் தெய்வீக திருமகனார் தேவர் வீர வரலாறு (மதுரை: தேவர் முரசு, 1993), . 82-3.

4.தமிழவேள், சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர் (புதுவை: பண்பாட்டு ஆய்வகம், 2003), . ஜ்வீஜ்.

5.Fortnightly Report, 1957, Tamil Nadu State Archives (Hereafter TNSA), Chennai.

6.Sandberg, Emma. ‘Being a Dalit Woman in Seethai kurichy: Religious Affiliations and Social Situations’.In Lars Berge and Gunnel Cederlof,eds., Political Visions and Social Realities in Contemporary South India. (Sweden: Hogskolan Dalarna, 2003), pp. 27-8.

7.Ibid.

8.Fortnightly Report, 1944, TNSA, Chennai.

9.கா..மணிக்குமார்,நவீன தமிழகத்தில் சமூக வன்முறைகள், மனோரமா ஆண்டு புத்தகம், 2002, . 265.

10.Fortnightly Report, 1945, p.110, TNSA, Chennai.

11.A.R. Desai,‘Caste and Communal Violence in Post-Partition Indian Union’, in Asghar Ali Engineer (Ed.), Communal Riots in Post-Independence India (Hyderabad, 1984), pp.12-20.

12.தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? (சென்னை: புதிய ஜனநாயகம், 2004), . 18-9.

13.. சிவசுப்பிரமணியன், எந்தப் பாதை? (சென்னை: மக்கள் வெளியீடு, 2000), . 144-7.

14. Organizer (June: 1981), p.6.

15. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., . 26-7.

16.Editorial, Economic and Political Weekly, 1982, p.1006.

17.மருதமலர், ஜூன், 1982, . 8.

18.Editorial, Economic and Political Weekly, 1982, p.1006.

19.மருதமலர், (ஜூன்: 1982).

20.இலக்கிய வெளிவட்டம், (அக்டோபர்: 1982), . 23-8.

21.துக்ளக், (ஆகஸ்ட்:1982).

22.மருதமலர், (ஜூன்: 1982).

23.அய். பால்ராஜ், ஞா.தேவராஜ், சாதிக் கொடுமைகளின் சாட்சி (சென்னை: இந்திய மக்கள் முன்னணி, 1990).

குறிப்பு: அம்பேத்கர் படிப்பு வட்டம் மதுரையில் (ஏப்ரல், 2005) ஏற்பாடு செய்திருந்த தலித் வரலாற்று மாதத்தில் இக்கட்டுரை வாசிக்கப்பெற்றது.

Puthuvisai Logo

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Antibiotics Names Amoxil
Antibiotics Names Amoxil

It does not approach me. There are other variants?