செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதா?

-பிரபாத் பட்நாயக்

உலகப்பொருளாதார நெருக்கடி முடி வடைந்துவிட்டதாக இந்திய நாட்டில் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த செய்திகள், நாளேடுகளில் முதல் பக்கங் களில் வருவது தவிர்க்கப்பட்டுவிட்டது. தொலைக்காட்சியில் கூட பொருளாதார நெருக்கடி சம்பந்தமான செய்திகளை கேட்க முடிவதில்லை. இது போதாதென்று, பங்குச் சந்தையில் புள்ளிகள் 15 ஆயிரத்தையும் தாண்டிவிட்டன. 9 ஆயிரத்திலிருந்து திடீ ரென்று இந்த உயர்வு ஏற்பட்டிருப்பதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோர் வடைந்து போயிருந்த இந்திய பெரும் முத லாளிகளும் அதிகார வர்க்கமும் சந்தோசத் தில் ஆழ்ந்துள்ளனர். இந்திய பணக்கார வர்க் கம் மட்டுமல்ல, பொருளாதார நெருக்கடியால் மிகக்கடுமையாக தாக்குதலுக்கு உள்ளான வளர்ந்த நாடுகளின் பணக்கார வர்க்கமும் கூட எச்சரிக்கை உணர்வுடன் இருந்தாலும், நெருக்கடி முடிந்துவிட்டது என்ற மன நிலைக்கு சென்றிருக்கிறார்கள்.

இந்த மனநிலை எப்படி வந்தது?

நிதித்துறையில் ஏற்படும் சில குறியீடு கள், குறிப்பாக உண்மைப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இயலாத பங்குச்சந்தை காட்டும் புதிய நிலவரங்களால் பணக்கார வர்க்கம் சற்று மகிழ்ச்சியடைந் துள்ளது.

உண்மைப்பொருளாதாரத்திலும் கூட, நெருக்கடியின் அடி ஆழம் எது என்பதை கண்டறிவதை நோக்கி இந்த உலகம் பயணப் பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால் நிலைமை மிகவும் மோசமடைய வில்லை என்று கூறுவதற்கும், நிலைமை மீண்டும் “இயல்பு” நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என்று கூறுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

இப்படித்தான், பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், பிரிட்டனில் வேலையின்மை அதி கரித்துக் கொண்டிருக்கிறது என்ற போதிலும், அந்த உண்மையைக் கூறாமல், இந்த ஒட்டு மொத்த காலத்துடன் ஒப்பிடும்போது, வேலை யின்மை பிரச்சனை குறைந்து கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

இதேபோன்றுதான் ஜூன் மாதம் வரை யிலும் அமெரிக்கா சொல்லிக்கொண்டிருந் தது; ஆனால் கடந்த மே மாதத்துடன் ஒப் பிடும்போது ஜூன் மாதத்தில் அமெரிக்கா வில் வேலையிழந்துள்ளோர் எண்ணிக்கை மிகமிக அதிகமானது; இது அவர்களின் நம்பிக்கையை தகர்த்தது.

இப்போதும் உலகம் முழுவதும் வெளியாகிக் கொண்டிருக்கும் புள்ளி விவரங்களின் படி பார்த்தால்கூட, நாம் உலகப்பொருளாதார நெருக்கடியின் இறுதிக்கட்டத்தில் இருக் கிறோம் என்று கூறமுடியாது.

மூன்று எதிர்மறைகள்

உலகளாவிய பொருளாதார நெருக்கடி தனது இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண் டிருக்கிறது என்று கருதப்படும் கருத்தை நிராகரிக்கிற விதத்தில், அதாவது, பொரு ளாதார நெருக்கடி தனது இறுதிக்கட்டத்தை எட்டவிடாமல் தடுக்கிற மூன்று முக்கிய அம்சங்கள் அமெரிக்காவில் வலம் வரு கின்றன. அமெரிக்க பொருளாதார நடவடிக் கைகளில் ஏற்படும் நிலவரங்களே பெரும் பாலும் உலகப்பொருளாதாரத்தில் பிரதிபலிக் கிறது என்பதால், இது உலகம் முழுவதற்கும் பொருந்தக்கூடியதே.

முதலாவது, கூலியில் ஏற்பட்டுள்ள மந்தம்.

அதாவது, வேலையில் இருக்கிற தொழிலாளர்களில், ஒரு தொழிலாளிக்கு உண்மை யாக கிடைக்கிற கூலி என்பது குறைந்து கொண்டிருக்கிறது.

உண்மையான கூலி என்றால், கூலியின் வாங்கும் சக்தி என்று பொருள்.

தேவையின் அளவை அதிகப்படுத்து வதில் ஏற்பட்ட வீழ்ச்சியே பொருளாதார நெருக்கடியை துவக்கிவைத்தது என்பதை நினைவுகூரும் அதே நேரத்தில், வேலை வாய்ப்பில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியானது தற்போது நெருக்கடியை மேலும் தீவிரமாக்கு கிறது; தொழிலாளர்கள் சம்பாதிக்கும் உண் மைக்கூலியில் ஏற்படும் வீழ்ச்சியானது, இந்த நெருக்கடியை மேலும் தீவிரமடையச் செய்கிறது.

பொருளாதார நெருக்கடியை துவக்கி வைக்கும் விதத்தில் நடந்த தேவை வீழ்ச்சி யுடன், தற்போது புதிதாக ஏற்பட்டுள்ள தேவை வீழ்ச்சியும், அத்துடன் வேலைவாய்ப்பில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியின் விளைவுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து, உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகளின் அளவை முடக்குவதற்கும், அதைத்தொடர்ந்து நெருக் கடி மேலும் தீவிரமடைவதற்கும் வழிவகுக்கும்.

இரண்டாவது எதிர்மறை அம்சம் என்ன வென்றால், அமெரிக்காவில் மாநில அரசு களின் பொதுச்செலவின அளவு வீழ்ச்சி யடைந்துள்ளது என்பதே. அமெரிக்காவைப் பொறுத்தவரை நிதிப்பற்றாக்குறையை தொடர மத்திய கூட்டாட்சி அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு. மாநில அரசுகளுக்கு அது இல்லை. இதன் காரணமாக, பொருளாதார மந்தச்சூழலில் அந்த அரசுகளின் வருவாய் குறையும்போது, அவர்களின் பொதுச்செல வினமும் வீழ்ச்சியடைகிறது. அமெரிக்க மத்திய அரசு மிகப்பெரும் அளவிலான நிதிப் பற்றாக்குறை கணக்கை பேணுகிறது என்ற போதிலும், வங்கிகளுக்கு அதிலிருந்து ஏராளமாக கைகொடுக்கிறது என்றபோதிலும், அந்த பெரும் அளவிலான பணம் வங்கிகளி லேயே குவிக்கப்பட்டு இருப்பதால், அந்தப் பணம் பொருளாதாரத்தில் தேவையை உற் பத்தி செய்யவில்லை.

நிதிப் பற்றாக்குறை கணக்கின் ஒரு பகுதியாக, அமெரிக்க மத்திய அரசு, பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான பொதுச்செல வினத்தை மேற்கொண்டாலும், பொருளா தாரத்தில் தேவையின் அளவை அதிகரிக்கும் அளவிற்கு அது இல்லை. இதுமட்டுமின்றி, மாநில அரசுகள் தங்களது செலவினத்தை வேறு வழியின்றி குறைத்திருப்பதால், அவர் களது வரவு - செலவை நேர் செய்வதற்கான தேவையும் மத்திய அரசுக்கு இருக்கிறது. இத்தகைய வீழ்ச்சி தொடருமானால், மத்திய அரசு அறிவித்துள்ள நிதி மீட்புச் சலுகை களும் கூட மாநில அரசுகளின் செலவு களால் விழுங்கப்பட்டுவிடும் என்பதே உண்மை.

மூன்றாவது எதிர்மறை அம்சம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் மேல், மத்திய அரசின் இத்தகைய நிதி மீட்புச் சலுகைகள் தொடரமுடியாது என்பதேயாகும். சந்தையில் தேவையை உருவாக்குவது தொடர்பான மேலாண்மையில், நிதி மூலதனமானது ஒருபோதும் அரசின் நேரடி தலையீட்டை விரும்பாது என்பது நமக்குத் தெரிந்ததே. அது, அரசிடமிருந்து “மிக வலுவான நிதியை” எதிர் பார்க்கும் ; அதற்கு முன்னுரிமை கொடுக்கும். அதாவது, அரசு வருவாய்க்கும் செலவிற்கும் இடையே தள்ளாடவேண்டிய சூழ்நிலைமை யை உருவாக்கும். எனவே, ஒபாமா நிர்வாகம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள நிதி மீட்பு சலுகைகளால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை கணக்கு என்பது, நிதி மூல தனத்திற்கு ஒவ்வாததே ஆகும். பெரும் எண் ணிக்கையிலான பழமைவாத பொருளாதார நிபுணர்களும் அவர்களது ஆதரவாளர்களும் நிதி மூலதனத்தின் நிலைமை குறித்தே கவலைப்படுகிறார்கள்.

இவர்களது கைங்கரியத்தால், பொரு ளாதார நெருக்கடியின் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டோம் என்று கருதி, கடந்த 2 மாதங் களாக வேலையின்மை அதிகரித்ததற்கான புள்ளிவிவரங்கள் பதிவாகாததை காட்டி, ஒபாமா அரசு தனது நிதிப்பற்றாக்குறை கணக்கை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. இதன்படி செயல்பட்டால், அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியை நோக்கி உந்தித் தள்ளப்படும்.

இது 1937ல் பொருளாதார பெருமந்தம் ஏற் பட்ட காலத்தில் என்ன நடந்ததோ, அதை அப்படியே பிரதிபலிக்கிறது. அந்த கால கட்டத்திலும் நிதி மூலதனத்தின் லாப வெறிக் காக, ஜனாதிபதி ரூஸ்வெல்ட், மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை கணக்கை வெட்டிச்சுருக் கினார்; இதன் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் வீழ்ந்தது. அதன்பிறகு, 2ம் உலகப்போரை பயன்படுத்தி, இரண்டு தரப்பு ராணுவங்களுக்கும் ஏராளமாக ஆயு தங்களை விற்று சம்பாதித்து தனது பொரு ளாதாரத்தை நிலைநிறுத்திக்கொண்டது.

இன்றைக்கும், பொருளாதார நெருக்கடியின் இறுதிக்கட்டத்தை எட்டாத நிலையில், அமெரிக்க நிதிப்பற்றாக்குறை கணக்கில் பெருமளவில் வெட்டிச்சுருக்கும் முயற்சியால் நிலைமை மேலும் மோச மடையப்போகிறது. ஜனாதிபதி ஒபாமா மிகக்கடினமான நிலைமையை எதிர்நோக் கிக் காத்திருக்கிறார். எதிர்ப்பு ஏதும் இல்லாத நிலையில், நிதி மூலதனத்தின் வேட்கையை அனுமதித்தால் உலகப்பொருளாதாரம் மேலும் படுபாதாளத்திற்கு வீழும்.

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஆகஸ்ட் 2 )

கருத்துகள் இல்லை: