சனி, 29 ஆகஸ்ட், 2009

இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காக்க கோரிக்கை சிபிஎம் இன்று தர்ணா

இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க இந்திய அரசு ராஜீய ரீதியில் உடனடியாக தலையிடக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், சனிக்கிழமையன்று மாநிலம் தழுவிய அளவில் தர்ணா போராட்டங்கள் நடைபெறுகின்றன.

மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் இப்போராட்டங்களில் கட்சியின் மாநிலத் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

இலங்கை ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் பெரும் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களை அவரவரது பூர்வீக பகுதிகளில் குடியமர்த்த இலங்கை அரசு அக்கறை காட்டாமல் உள்ளது. விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதல் முடிவுக்கு வந்துவிட்ட பின்பும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அலிக்கும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில், இப்பிரச்சனையில் இந்திய அரசு ராஜீய ரீதியில் தலையிட்டு, இலங்கைத் தமிழ்மக்களை அவர்களின் பூர்வீக பகுதிகளில் குடியமர்த்தவும், அவர்களின் மறுவாழ்வுக்கான பணிகளை மேற்கொள்ளவும், தமிழர் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் உடனான சுயாட்சி உரிமை வழங்கவும், இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சனிக்கிழமையன்று தர்ணா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

திண்டுக்கல்லில் நடைபெறும் தர்ணாவில் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் பங்கேற்று உரையாற்றுகிறார். மத்தியக்குழு உறுப்பினர்கள் - உ.ரா.வரதராசன் மதுரை திருப்பரங்குன்றத்திலும், ஏ.கே.பத்மநாபன் வடசென்னையிலும், ஜி.ராமகிருஷ்ணன் தென்சென்னையிலும், உ.வாசுகி சேலத்திலும் பேசுகின்றனர்.

இதேபோல மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தர்ணாக்களில் பங்கேற்று பேசுகின்றனர்.

கருத்துகள் இல்லை: