செவ்வாய், 1 செப்டம்பர், 2009

பெண் ஒடுக்குமுறையும்- சட்டமும்

அ.கரீம், வழக்கறிஞர், கோவை.

மருமகளை மாமியார் அடிப்பது வன்கொடுமையாகாது - அது வரதட்சணைக்காக நடைபெற்ற செயலும் ஆகாது சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய ஓர் தீர்ப்பு இது.

பத்திரிகைகளில் பரபரப்பு ஏற்படுத்திய தீர்ப்பின் வழக்கு யாதெனில் - மருமகளை மாமியார் காலால் எட்டி உதைத்தாள், கணவரிடம் சொல்லி விவாகரத்து செய்திடுவேன் என மாமியார் மிரட் டியதாகவும், கணவன் மற்றும் நாத் தனார் கொடுமைப்படுத்தியதாகவும் எழுந்த வழக்கின் தீர்ப்பது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரா நீதிமன்றத்தில் ஒரு வழக்கு- “கணவன் கொடுமைப்படுத்தி, வீட்டில் நிர்வாணமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணொருத்தி வீட்டிலிருந்து தப்பித்து வெளியே கிடைத்த உடை களை உடுத்தி நீதிமன்றத்தில் நியாயம் கேட்டு சென்றபோது, நீதி மன்றமானது, இந்திய கலாச்சாரம் மேலானது அதை பெண்கள் போற்றி பாதுகாக்க வேண்டும். வீட்டில் கணவன் என்னதான் அப்படியாக வைத்திருந்தாலும் வெளியே ஒரு பெண் நிர்வாணமாக வந்தது நமது பாரம்பரிய கலாச்சாரத்திற்கு விரோத மானது. இச்செயலை செய்த பெண்ணே தண்டனைக்குரியவள் என வழங்கப்பட்ட தீர்ப்புகளின் தொடர்ச்சியே மேற்கண்டதும். ஆணாதிக்க சமூகத்தில் வழங்கப் படும் தீர்ப்புகளும் - ஆணாதிக்க மனோபாவத்திலேயே எழுகிறது.

மாமியார் உதைப்பது, கணவரிடம் சொல்லி விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டுவது, அடிப்பது போன்ற செயல்களை இந்திய தண் டனை சட்டம் பிரிவு 498-ஹன் கீழ் வன்கொடுமையாக கருதி தண்டனை வழங்க முடியாது என உச்சநீதி மன்றம் சொல்கிறது. நமது கேள்வி- சரி, அப்படியேயிருந்தாலும் கொடு மைப்படுத்தியதற்கு தண்டனை வழங்கலாம் இல்லையா?

அது முடியாது. ஏன்? காரணம் அது வேறு பிரிவு முதல் தகவல் அறிக்கை மற்றும் பிற குற்றப் பத்திரிகையில் அப்பிரிவை குறிப் பிடவில்லை. ஆதலால் அதற்கு தண்டனை வழங்க முடியாது. இது இந்திய நீதிமன்றங்களில் நடை பெறும் நடைமுறைகள். குறிப்பிட்ட பிரிவு பதிவு செய்யப்படவில்லை என்ற ஒரு காரணத்திற்காக, செய்யப் பட்ட குற்றத்திற்கு தண்டனை இல் லை என்பது எவ்வளவு அபத்தமானது.

காலகாலமாக இதே நடைமுறை யை பயன்படுத்தித்தான் உண்மை குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டேயிருக்கிறார்கள். பிரிவு 498-ஹ இந்திய தண்டனை சட்டம் கூறுவதாவது:

“ஒரு பெண்ணை அவளுடைய கணவன் அல்லது கணவனின் உற வினர்களில் ஒருவர் கொடுமைப் படுத்தினாலோ,

அ) ஒரு பெண்ணை தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டக் கூடிய அல்லது அவளுடைய உயி ருக்கு, உடலுக்கு அல்லது சுகத் திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்,

ஆ) சட்ட விரோதமாக ஒரு சொத்தை (அல்லது) மதிப்புள்ள காப்பீட்டை அந்த பெண் மூலம் (அல்லது) அவளுடைய உறவினரிட மிருந்து வலுக்கட்டாயமாகப் பெற வேண்டும் என்பதற்காக அப்பெண் ணிற்கு பொறுக்க முடியாத சங்கடங் களை உண்டாக்குவது இப்பிரிவின் கீழ் தண்டனைக்குரிய செயலே”

மேற்கண்ட சட்ட சரத்துகள் தெளிவாக குறிப்பிடுகிறது. ஆனால் இச்செயல்கள் வன்கொடுமை யாகாது என தீர்ப்பு கூறுகிறது. ஒரு மருமகள் கணவரின் உறவினரி னால் தாக்கப்படுகின்றாள் என்றால், அது நிச்சயம் வரதட்சணைக்காக தான் என்ற ஒத்தநிலை எடுக்க வேண்டியதில்லை. அதே நிலை யில், ஒரு தீர்ப்பின் மூலம் ஒட்டு மொத்தமாக இதே காரணத்தை காட்டி உண்மை குற்றவாளிகள் தப்பிக்க நீதிமன்றமே காரணமாகிட கூடாது. அதே நேரத்தில் ஒரு பெண் வேறு எந்த காரணத்திற் காகவும் தாக்கப்படுவதை அனு மதிக்க முடியாது.

இந்தியாவில் காலகாலமாக பெண்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து இருந்து கொண்டே யிருக்கிறது. பெண்களை தெய்வமாக வணங்குகிறோம் என ஒருபுறம் சொல்லிக்கொண்டே மறுபுறம் வேறெந்த நாட்டிலும் நிலவாத உடன் கட்டை ஏறுதலை அமல்படுத்திய புண்ணியபூமி இந்தியா. திருமணத் திற்கு பிறகு கணவன் இறந்தால் அதோடு அப்பெண்ணிற்கான சுகம், சந்தோஷம், துக்கம் என எல்லாம் முடிந்துவிட்டதாக சொல்லி மனை வியை இறந்த கணவனின் உட லோடு சேர்த்து எரித்த காட்டுமிராண் டிகளின் கூடாரமாகத்தான் நம் நாட் டின் கடந்த காலம் இருந்துள்ளது.

தனிச்சொத்துடைமை மனித சமூகத்தில் எப்பொழுது தோன்றிய தோ அப்பொழுது தொடங்கிய பெண் மீதான தாக்குதல் இன்றுவரை தொடர் கிறது. உலகமயத்திற்கேற்ப, காலத் திற்கேற்ப தாக்குதலின் வடிவம் மாறி யிருக்கலாம். ஆனால் நிற்கவில்லை.

ஒரு தீர்ப்பின் மூலம் ஒருவன் செய்ய நினைக்கும் சட்டமுரணான செயலை தடுத்து நிறுத்த முடியும் என்பதை நீதிமன்றங்கள் உணர வேண்டும். படித்த நகர்ப்புற இளைஞர்களே, பெண் குழந்தை பிறந்தால் அதற்கு முழு காரணம் பெண்தான் என ஒதுக்கும் சமூகசூழலை நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எவ்வளவுதான் நாகரிக, தொழில்நுட்ப வளர்ச்சியில் உச்சத்தை நோக்கி சென்றாலும் இந்திய சூழலின் நிலைமை கருதி தீர்ப்புகள் வரும்பொழுது, மேற்கண்ட கொடூ ரங்களை கொஞ்ச கொஞ்சமாக குறைக்க முடியும் என்பதை நீதி மன்றம் கவ னத்தில் கொண்டு தீர்ப்பு நல்கிட வேண்டும். அதுவே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

2 கருத்துகள்:

உண்மையான உண்மை சொன்னது…

நண்பரே வணக்கம்!
இந்த பதிவை ப்டித்தவுடன், பின்னூட்டம் இடவேண்டும் என்ற நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.
1.தகவல் அறிக்கை தயார் செய்யும் பொழுது அது எந்தெந்த பிரிவுகளீல் வருகிறது என்பதைஉணர்ந்து அதை குறிப்பிட்டு தயார் செய்யும் பொறுப்பு காவல் துறையை சேர்ந்தது.
1. சட்டம் சம்பந்தமான விரிவான அறிவு காவலர்களுக்கு கிடையாது.
2. லஞ்சம் தலை விரித்தாடுவதால் நியாயமாக எப்.ஐ.ஆர் போடப்படுவது கிடையாது.
3. அரசியல் வாதிகள் மற்றும் வி.ஐ.பி களின் தலையீடு.
இவைதான் காரணம். காவல் துறை தனி அமைப்பாக ஆவதும், பிராசிக்சிகியூஸன் தனி அமைப்பாகவும் ஆகவேண்டும். சட்டத்தையும் நீதிமன்றத்தையும் குறை சொல்ல முடியாது.

உண்மையான உண்மை

விடுதலை சொன்னது…

உண்மையான உண்மை

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி