திங்கள், 6 டிசம்பர், 2010

எதிர்க்கட்சிகள் அடம் பிடிக்கின்றனவா?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் ஊழல்,கார்கில் போர் வீரர்களுக்கான ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க குடியிருப்புகள் ஒதுக்கீட் டில் ஊழல்- என்று நாளுக்குநாள் ஊழல் உப்பிக் கொண்டே போகிறது. இந்த ஊழல்கள் பற்றி யெல்லாம் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கோருகின்றன. இதனை ஏற்க இயலாது என திமுகவும் அங்கம் வகிக்கும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பிடிவாதம் காட்டுகிறது.

இதற்கு மாற்றாக பொதுக்கணக்குக் குழுவில் விவாதிக்கலாமே என்று யோசனை கூறப்படுகிறது. இதற்கு முன்வைக்கப்படும் வாதங்கள்:

1. மேலே கூறப்பட்டுள்ள புகார்களைப் பற்றி ஏற்கெனவே சிபிஐ போன்ற அமைப்புகள் விசாரணை செய்துவருகின்றன. இதற்குப் பிறகும் நாடாளுமன்ற கூட்டுக்குழு எதற்காக?

2. பொதுக்கணக்குக் குழு என்பது நிரந்தர மான நாடாளுமன்ற கூட்டுக்குழு போன் றது. இது அரசமைப்பு சாசனம் உருவாக் கப்படுவதற்கு முன்பிருந்தே நாடாளு மன்றத்தில் செயல்பட்டு வருகிறது.

3. இந்தக் குழுவின் தலைவராக இருப்பவர் எதிர்க்கட்சி(பாஜக)யைச் சேர்ந்தவர். (தற்போது முரளி மனோகர் ஜோஷி). இதில் எல்லாக் கட்சிகளின் உறுப்பினர் களும் இருக்கிறார்கள். பிறகு ஏன் நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணை?

4. நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிப்ப தற்கு பதிலாக அதைவிடவும் பேரமைப் பாக உள்ள நாடாளுமன்றத்திலேயே விவாதிக்கலாமே. குறைந்த எண்ணிக்கை யிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசா ரணைக்கு ஏன் வற்புறுத்த வேண்டும்?

இந்த வாதங்கள் எல்லாம் சரிதானா என்பதை முதலில் பார்ப்போம்.

1) எல்லா ஊழல்களும் புலனாய்வு அமைப் புகளால் தானாக முன்வந்து விசாரிக்கப் படவில்லை. 2ஜி அலைக்கற்றை ஒதுக் கீட்டில் முறைகேடு நடந்துள்ளதை 2008ம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டி பிரத மருக்குக் கடிதம் எழுதப்பட்டது. அது கிடப்பில் போடப்பட்டது. உச்சநீதிமன்றத் தில் பொது நலவழக்கு தொடர்ந்த பிறகே இது பற்றிய விசாரணைக்கு உத்தரவிடப் பட்டது. அந்த விசாரணையும் எப்படி ஆமை வேகத்தில் நடந்தது என்பதை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்தியது. குற் றப்பத்திரிகை தாக்கல் செய்ய இன்னும்

3 மாதங்கள் ஆகும் என்று சிபிஐ கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. மற்ற இரண்டு ஊழல்களிலும் புலனாய்வு அமைப்புகள் எவ்வளவு வேகமாக செயல்படும்; எங்கே எப்போது படுத்துக்கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழலில் இப் போதே வேகம் குறைந்துவிட்டது வெளிப் படை. பிரதமர் தொடங்கி அமைச்சர்கள், அதிகாரிகள் என ‘பெரும்புள்ளிகள்’ தொடர்பிருப்பதால் புலனாய்வு அமைப்பு களால் எல்லைதாண்ட இயலாது என்பது ஊரறிந்த ரகசியம்.

2) நாடாளுமன்றத்தில் 1921ஆம் ஆண்டு தொடங்கியே பொதுக் கணக்குக் குழு செயல்பட்டு வருகிறது என்பது உண்மை தான். இந்தக் குழுவில் 1954-55 வரை மக்களவையைச் சேர்ந்த 15 உறுப்பினர் கள் மட்டுமே இருந்தனர். இதற்குப் பிறகு தான் மாநிலங்களவையின் 7 உறுப்பினர் களையும் சேர்த்து 22 உறுப்பினர்கள் ஆக் கப்பட்டனர். இதன் பதவிக்காலம் ஓராண் டுக்கு மட்டுமே.

இந்தக் குழுவின் பணி, துறைவாரியாக ஒதுக்கப்படும் நிதி சரியாக செலவிடப்படு கிறதா என்பதைக் கண்காணிப்பது; தலை மைக் கணக்குத்தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறை பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறையி டம் விளக்கம் கேட்பது. துறைகளுக்கு ஒதுக்கப் படும் நிதி மிகையானதா? செலவு நியாய மாகவும் சிக்கனமாகவும் செய்யப்படுகிறதா? என்பது பற்றியெல்லாம் விவாதித்து நாடாளு மன்றத்திற்கு அறிக்கை அளிப்பது. பொதுக் கணக்குக் குழுவின் பணி என்பது ஒரு வரம் புக்குட்பட்டது என்பதை இப்போது அதன் தலைவராக உள்ள முரளி மனோகர் ஜோஷியே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

3) பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்தான் இருக் கிறார். 1966-67 வரை ஆளுங்கட்சிக்காரர் தான் தலைவராக இருந்துவந்தார். அதன் பிறகுதான் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டார். தற்போது முரளி மனோ கர் ஜோஷி இருப்பதால்தான் பாஜகவைச் சேர்ந்த தலைவர் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லையா? நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்தால் அதற்குத் தலைவராக ஆளும் கட்சிக்காரர்தானே இருப்பார். அவரது தலைமையிலான குழு வின் அறிக்கையையும் குறைசொல்ல மாட்டீர்களா? பிறகு எதற்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள்.

இதற்கு முரளி மனோகர் ஜோஷி ஏற்கெ னவே கூறிய பதிலோடு பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதை யும் சேர்த்துக்கொள்ளலாம். “பொதுக் கணக் குக் குழுவின் விசாரணை என்பது பிரேதப் பரி சோதனை (போஸ்ட் மார்ட்டம்) அறிக்கை போன்றதாகவே இருக்கும். இதன் அதிகார வரம்பு மிகவும் குறுகியது”.

மேலும் இந்தக் குழுவின் பதவிக்காலம் இன்னும் 5 மாதங்களில் முடிந்துவிடும். அதன் பிறகு தலைவரும் மாறிவிடுவார்; உறுப் பினர்களும் மாறிவிடுவார்கள். விசாரணையும் அவ்வளவுதான்!

4) நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்குப் பதி லாக நாடாளுமன்றத்திலேயே விவாதிக் கத் தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார். கேட்பதற்கு இனிமையாகவும் மிகப் பெரிய ஜனநாயக மனப்பாங்கு போல வும் தோன்றலாம். உண்மை அதுவல்ல.

நாடாளுமன்ற விவாதத்தில் குற்றச்சாட்டு களை முன்வைக்கலாம். குற்றம் புரிந்தவர் களை அழைத்து விசாரிக்க முடியுமா? கோப்புகளைக் கோர முடியுமா? அதிகாரிகளி டம் விசாரணை நடத்த இயலுமா? அரசின் கொள்கை பற்றி, அரசின் மீதான நம்பிக்கை பற்றி, கவன ஈர்ப்பு தீர்மானம் பற்றி விவாதிப்பது போன்றதல்ல ஊழல் விவகாரம். இதில் கூடுதலான விவரங்களும் விசாரிப்புகளும் தேவைப்படுகின்றன.

எனவே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவது ஒரு காட்சியாக இருக்குமே தவிர முழு உண்மைகளும் வெளிவர வழிவகுக்காது.

ஏற்கெனவே நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளதா?

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை என்கிற புதிய வடிவம் 1987ஆம் ஆண்டு உரு வானது. நாட்டையே உலுக்கிய போஃபோர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்துத்தான் முதன் முறையாக இத்தகைய குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த பி. சங்கரானந்த் தலைவராக இருந்தார்.

இரண்டாவது முறையாக 1992ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. வங்கிகளில் ஹர்ஷத் மேத்தா நாட்டுடைமையாக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்தது தொடர்பாக இதில் விசாரிக்கப்பட்டது. இதற் குத் தலைவர் ராம் நிவாஸ் மிரதா (காங்கிரஸ்).

மூன்றாவது, பங்குச்சந்தை ஊழல் தொடர் பாக விசாரிக்க 2001ம் ஆண்டு அமைக் கப்பட்டது. பாஜகவைச் சேர்ந்த பிரகாஷ் மணி திரிபாதி இதன் தலைவராக இருந்தார்.

நான்காவதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்தக் குழு குளிர்பானங் களில் பூச்சிக்கொல்லி மருந்தின் படிவுகள் அதிகமாக இருக்கின்றனவா என்பது பற்றி விசாரித்தது.

இப்படி மூன்றுமுறை காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் ஒருமுறை பாஜக ஆட்சிக் காலத்திலும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடைபெற்றுள்ளது. தற்போதைய கோரிக்கை ஒன்றும் புதிதல்ல. நாடாளுமன் றம் சுமூகமாக - ஜனநாயக நெறிமுறைப்படி நடக்க வேண்டும் என்ற அக்கறை உண்மையி லேயே இருக்குமானால் இந்த விசாரணைக்கு உத்தரவிடலாம்; பரிந்துரைக்கலாம். மறுப்பது ஏன் என்பதுதான் மர்மமாக இருக்கிறது.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவால் என்ன பயன்?

எனவே மறைக்கப்படும் அல்லது மறைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் எதிர்க்கட்சிகள் நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணையைக் கோரு கின்றன. இதனை அடம் என்றும் அரசியலாக் குவதாகவும் கூறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை. ஒருவேளை மடியில் கனம் இருப்பதால் வழியில் பயம் இருக்கலாம்.

நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக ஆ.ராசாவை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு கோரிய அதே ஜனநாயக உணர்வோடு இப் போது நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க ஒப்புக்கொள்வதுதான் சிறந்த வழி.

மயிலை பாலு
(இணைய தளத் தகவல்கள் உதவியுடன்)

2 கருத்துகள்:

P.M.சரன் சொன்னது…

எளிமையான நடையில்,விளக்கமாகவும்,உதாரணத்தோடும் விஷயத்தை முன்வைத்துள்ளீர்கள் ! ஏதோ எதிர்கட்சிகள் மக்கள் பணத்தை விரயம் செய்வதையே குறிக்கோளாய் கொண்டு அலைவதை போலவும், உண்மையான ஜனநாயக பக்தர்கள் நாங்கள் தான் என பீற்றிகொள்ளவும் காங்கிரசும் கலைஞரும் முன் வைக்கும் வாதங்கள் எவ்வளவு சொத்தையானது என்பதனை தங்களின் கட்டுரை தெளிவு படுத்துகிறது...வாழ்த்துக்கள் ! தொடருங்கள் உங்களது வேள்வியை...அதன் தனலில் ஊழல்களும்,ஊழல்வாதிகளின் முக்மூடியும் பொசுங்கட்டும்!

விடுதலை சொன்னது…

நன்பர் சரன் அவர்களுக்கு தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி