-ஞாநி
திமுக கூட்டணியில் ‘கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது’ என்ற உத்தியை எப்போதும் பிரயோகித்துவரும் கருணாநிதி, இப்போதும் அதே வேலையைச் செய்திருக்கிறார். அவ்வளவுதான். காங்கிரசுடன் உறவு எப்படியிருக்கிறது என்று நிருபர்கள் கேட்டபோது, “எனக்கும் உங்களுக்கும் (பத்திரிகையாளர்களுக்கும்) உள்ள அளவில் இருக்கிறது” என்று பதில் சொல்கிறார் கருணாநிதி. அவருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? சங்கடமான கேள்விகளைத் தப்பித் தவறி ஏதேனும் ஒரு நிருபர் கேட்டால், “யார்யா நீ?” “உனக்கு என்ன அதைப்பத்தி?” “உங்க வீட்டுலயா ரெய்டு நடந்தது?” என்று எரிந்துவிழும் உறவுதான் அவருடையது. தானே பதில் சொல்ல விரும்பும் கேள்விகளைக் கேட்பதற்கென்றே நிருபர்களில் ஒரு கோஷ்டியைத் தயார் செய்து வைத்திருப்பது அவரது உறவின் மறுபக்கம்.
இதே அணுகுமுறைதான் காங்கிரசுடனும் உள்ளது. ரெய்டு, ஸ்பெக்ட்ரம் போன்ற சங்கடமான பிரச்சனைகளில் தம் எரிச்சலைக் காட்ட பிரதமரைப் புறக்கணிப்பது; தாம் விரும்பும் அறிக்கைகளை வெளியிட காங்கிரசுக்குள்ளே ஒரு திமுக - காங்கிரஸ் பிரிவை வைத்திருப்பது, இவைதான் அவரது கூட்டணி அணுகுமுறை.
புலவர்களை எப்போதும் மதிக்கும் ‘மன்னன்’ நான் என்று கருணாநிதி சொல்லியிருப்பது இன்னொரு பொய். தம்மை விமர்சிக்காமல் புகழ்ந்து கொண்டேயிருக்கும் புலவர்களை மதிப்பது என்று அதைத் திருத்தி வாசிப்பதே பொருத்தமாக இருக்கும். வைரமுத்து மட்டும் வேறொருவரைக் கொண்டு தம் நூலை வெளியிட்டிருந்தால், அடுத்த நிமிடமே வேண்டாத புலவராகியிருப்பார் என்பது இருவர் மனசாட்சிக்கும் தெரியும். வாலி புகழ்வதை நிறுத்தின அடுத்த நொடியில் ஆரிய நச்சுப் பாம்பாகிவிடுவார் என்பதும் அவருக்குத் தெரியும்.
ஓரிரு வாரங்கள் முன்புதான் சாகித்ய அகாதமி பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பரிசு பெறும் நாஞ்சில் நாடனைப் பாராட்டி கருணாநிதியிடமிருந்து ஒரு அறிக்கை உண்டா? கேரளத்தில் இப்படிப்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டால், உடனே முதலமைச்சர், எழுத்தாளர் வீடு தேடிப்போய் பாராட்டுகிறார். இங்கே “யாருய்யா அவன் நாஞ்சில்நாடன்? யாரு ஆளு? கனி(மொழி) கூப்பிட்டா சங்கமத்துக்கு வரமாட்டேங்கறானாமே?” என்றுதான் ‘அரண்மனை’ உரையாடல்கள் நிகழும் வாய்ப்பிருக்கிறது. நாஞ்சில்நாடன் கிண்டலாகச் சொல்வது போல, பரிசு பெறும் எழுத்தாளன் தானே ஒரு மஞ்சள் சால்வையும் சிவப்பு சால்வையும் வாங்கிக் கொண்டு தலைமைச் செயலகத்துக்குப் போய் பல மணி நேரம் காத்திருந்து ஒரு சால்வையைப் போர்த்தி இன்னொன்றைப் போர்த்தவைத்து, தன் செலவில் படமும் எடுத்து, பத்திரிகைகளுக்குத் தரவேண்டிய நிலை.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் சாகித்ய அகாதமி ஏராளமான தமிழ்ப்படைப்புகளைப் பிற இந்திய மொழிகளிலும், பிற மொழிப் படைப்புகளைத் தமிழிலும் வெளியிட்டிருக்கிறது. இதுபோல ஒரே ஒரு ஆக்கப்பூர்வமான வேலையையாவது தமிழக அரசு செய்ததுண்டா? எழுத்தாளர் படைப்புகளை நாட்டுடைமையாக்குகிறேன் என்ற பெயரில் தகுதியானவர்களுடன் சேர்த்து, கும்பலோடு கோவிந்தாவாக எந்தத் தகுதியும் இல்லாத வேண்டப்பட்டவர்களின் படைப்புகளுக்குக் காசு கொடுத்ததுதான் ஒரே சேவை. இயல் இசை நாடக மன்றத்தின் கலைமாமணி விருதுகளை 25 ஆயிரம் ரூபாய் ரேட்டுக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர் பிரபஞ்சன் வாடகைக்குக் குடியிருக்கும் அரசுக்குடியிருப்பு ஒழுகுகிறது. வேறு வீடு மாற்றிக் கொடுங்கள் என்று மனு போட்டு அலுத்துப்போய்விட்டார் என்று வேதனையுடன் நாஞ்சில் நாடன் ஒரு மேடையில் குறிப்பிட்டார்.
சாகித்ய அகாதமியின் தென் மண்டல அலுவலகம் - நான்கு தென் மாநிலங்களுக்குமானது, சென்னையில்தான் பல காலம் இயங்கி வந்தது. தங்களுக்கென்று தனியே நிலம் ஒதுக்கித் தரும்படி தமிழக அரசைக் கேட்டது சாகித்ய அகாதமி. புலவர்களை மதிக்கும் அரசு, முரசுக்கட்டிலில் புலவரோடு சேர்த்துக் கோப்புகளையும் தாலாட்டு பாடித் தூங்க வைத்துக் கொண்டிருந்த வேளையில், கர்நாடக அரசு முந்திக்கொண்டது. கன்னடப் படைப்பாளிகளும் அரசும் கைகோர்த்து நின்றதால், தென் மண்டல அலுவலகமே அங்கே போய்விட்டது.
இங்கே எஞ்சியது சாகித்ய அகாதமியின் சென்னை அலுவலகம் எனப்படும் விற்பனை நிலையம்தான். அதற்கும் புலவர்களை மதிக்கும் அரசில் ஆபத்து வந்துவிட்டது. தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் ஒதுக்கிய இடத்தைக் காலி செய்யச் சொல்கிறது தமிழக அரசு. சாகித்ய அகாதமிக்கு சென்னையில் அலுவலகம் கூட இல்லாமல் போய்விடும் நிலை.
நன்றி : கல்கி (10.1.2011)
2 கருத்துகள்:
நல்ல பதிவு
சமுத்திர தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கருத்துரையிடுக