திங்கள், 23 மே, 2011

சமச்சீர்கல்வியை நிறுத்த பெற்ற கோடிகள் எவ்வளவு?


மே 22 ஞாயிற்றுக்கிழமை தமிழக அமைச்சரவையின் முறைப்படியான முதலாவது கூட்டம் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில் கூடியது. இந்தக் கூட்டத்தில் தங்கள் கூட்டணிக்கு பெருவாரியான இடங்களை அள்ளித் தந்து தன்னை முதலமைச்சர் நாற்காலியில் அமரச்செய்த தமிழக மக்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அன்பாக பரிசினை அள்ளிக்கொடுத்திருக்கிறார்.
முதல் கூட்டத்திலேயே அதிரடி நடவடிக்கையாக, இந்த கல்வியாண்டிலிருந்து அமலாகும் என்று பெற்றோர்களும் மாணவ - மாணவியரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த சமச்சீர்க்கல்வி திட்டத்தை குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்தார்கள். அமைச்சரவையின் தான்தோன்றித்தனமான முடிவு என்பது அரசியல் காழ்ப்புணர்வைத் தான் வெளிப்படுத்துகிறது. ஆட்சி இழந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த அத்துணை காரியங்களும் - அத்துணை திட்டங்களும் சரியானது என்றோ, உள்நோக்கம் இல்லாதது என்றோ, குறைபாடுகள் இல்லாதது என்றோ சொல்லவில்லை. அந்த திட்டங்களை நடைமுறைப் படுத்திக்கொண்டே அதில் உள்ள குறைகளை நீக்க வேண்டுமேத் தவிர, இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுத்து நடந்துகொண்டால் மக்களின் அதிருப்திக்கும், சந்தேகத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகவேண்டிவரும்.

பள்ளிக் கட்டணக் கொள்ளையில் சிக்கித்தவிக்கும் பெரும்பாலான பெற்றோர்கள், ஒரே மாதிரியான கல்வி முறைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் கிராமப்புற மாணவ - மாணவியர், சமச்சீரான கல்விக்காக பலகாலமாய் போராடி வெற்றிபெற்ற இந்திய மாணவர்கள் சங்கம் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் மத்தியில் அரசின் இந்த முடிவு அதிர்ச்சியை தந்திருக்கிறது. இன்றைக்கு பல பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலிருந்து தேர்ச்சிபெற்று பத்தாம் வகுப்புக்குச் சென்ற பிள்ளைகளெல்லாம் ஒரு மாத காலமாக காலாண்டு வரையிலான பாடங்களை படித்து முடித்திருக்கிறார்கள்.

சமச்சீர்க்கல்வி படங்களோடு பழகிவிட்டனர். கிராமப்புற பிள்ளைகளும் புதிய பாடத்திட்ட புத்தகத்திற்காக ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படிப்பட்டச் சூழ்நிலையில் அரசின் இந்த முடிவு என்பது அந்த குழந்தைகளுக்கெல்லாம் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இந்த செயல் என்பது அந்தக் குழந்தைகளுக்கு மன உளைச்சலையும், மனஇறுக்கத்தையும் தான் அளிக்கும் என்பதை தமிழக அரசு மறந்துவிடக்கூடாது.

அது மட்டுமல்ல, இந்த சமச்சீர்க்கல்வி முறை என்பது தங்களின் கட்டணக் கொள்ளைகளுக்கு எதிரானது என்று நீதிமன்றம் சென்றிருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இந்த முடிவு என்பது கொண்டாட்டத்தைக் கொடுக்கும்.
கடந்த காலங்களில் சமச்சீர்க் கல்விக்காக போராடிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொறுப்பாளர் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு அரசின் இந்த முடிவைப்பற்றிக் கூறுகையில், “அமைச்சரவையின் முடிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மிகவும் துரதிர்ஷ்டவசமான முடிவு இது. கல்வியாளர் அடங்கிய வல்லுனர் குழு ஆராய்ந்து அளித்த அறிக்கையை, அரசு குப்பையில் போட்டுள்ளது வேதனையானது. இப்போது உள்ள பாடத் திட்டத்தில் தவறுகள் இருக்கலாம். அந்தக் தவறுகளுக்கு திருத்தத்தை அச்சடித்து அனுப்புவதில் சிரமமே இருக்காது. மேலும் சீர் செய்ய வேண்டும் என்று அரசு கருதினால், அடுத்த ஆண்டு பாடப் புத்தகங்களை தாராளமாக மாற்றலாமே.. இந்த சமச்சீர் கல்வியை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற, மெட்ரிகுலேஷன் லாபியினர் மகிழும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது. இது வெறும் பண நட்டம், பொருளாதாரம் மட்டும் சம்பந்தப்பட்ட முடிவு அல்ல. மாணவர்களின் உளவியல் சம்பந்தப் பட்டது. இரண்டு மாதகாலமாக 10ம் வகுப்பு பாடத்தை படித்து வரும் மாணவனுக்கு, புதிய பாடம் என்றால் எப்படி இருக்கும் ? இது மாணவர்களுக்கு கடும் மன உளைச்சலை தரும். ஜெயலலிதா அரசு, பெருந்தன்மையோடு, இந்த முடிவை மாற்றும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

குறிப்பிட்ட தேதியில் கட்டாய ஹெல்மெட் என்று உத்தரவு வந்த போது, உண்மையோ இல்லையோ, கருணாநிதி அரசு ஹெல்மெட் தயாரிப்பாளர்களிடமிருந்து லஞ்சம் பெற்று விட்டதென்று அப்போது பேச்சு எழுந்தது.

அதேப்போல் இப்போதும், கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர்களிடமிருந்து லஞ்சம் பெற்றுத் தான் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுவதற்கான வாய்ப்பை செல்வி ஜெயலலிதாவின் இந்த முடிவு ஏற்படுத்தியிருக்கிறது என்பது தான் உண்மை. அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலேயே இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை, அன்றாடம் லஞ்சம் - ஊழல் என்கிறச் செய்திகளிலேயே ஊறிப்போன மக்களுக்கு அத்தகைய சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.

எனவே தமிழக அரசு எடுத்த இந்த முடிவை மறுபரிசீலனைச் செய்து, தொடங்கப்பட்ட சமச்சீர்கல்வி முறையை நடைமுறைப்படுத்திக் கொண்டே அதில் உள்ளக் குறைகளை களைவதற்கு ஏற்பாடுகள் செய்யலாம் என்பது தான் தமிழக மக்களின் உடனடி வேண்டுகோளாகும்.

கருத்துகள் இல்லை: