திங்கள், 20 ஜூன், 2011

சங்பரிவாரத்தின் பாபா ராம்தேவ் முகமூடி







மத, ஆன்மீக அல்லது மற்ற காரணங்களுக்காக கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் ஒருவர் அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை அரசியல் கோரிக்கைகளுக்காக அணி திரட்டினார் என்றால் அது மதச்சார்பற்ற அரசியலை சீர்குலைக்கும் வேலையாகும். அத்தகைய ஒரு நபரை தாஜா செய்யும் ஒரு அரசாங்கம் அந்த சீர்குலைவு வேலைக்கு துணை போகின்றது-பிரபாத் பட்நாயக்

மாட்டுக் கறி சாப்பிடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றவர் ராம்தேவ். சங்பரிவாரம் அவரை ஏன் ஆதரிக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. ஆனாலும், அவர் தன்னுடைய லேகியங்களில் மாடுகள் உள்ளிட்ட பிராணிகளின் எலும்புகளைக் கலந்து விற்பவர். அதைவிட மனித எலும்புகளையும் கலந்து விற்பவராம். அதாவது, மனித எலும்பு கச்சாப் பொருளாகவும், மாட்டு எலும்பு லேகியத்திற்கு புனிதம் சேர்க்கும் பொருளாகவும் பயன்படுத்துகிறார் போல. ஆதலால், அவர் சங் பரிவாரத்திற்கு இன்னும் நெருக்கமாக ஆகிவிடுகின்றார்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் சங்பரிவாரின் தலைவர்களுடைய குழந்தைகள் மாட்டுக்கறி சாப்பிடுவது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அது போலத்தான் பாபா மாட்டு எலும்புகளை மகத்தான லேகியங்களாக மாற்றுவதும். மாட்டு இறைச்சி உண்மையில் உடம்புக்கு நல்லதுதான். நிற்க.

ராம்தேவின் சொத்து மதிப்பு 1000 கோடியிலிருந்து 11000 கோடி வரை மதிப்பிடப்படுகின்றது. ‘விக்கிடாப்5’ என்கிற இணையதளம் 15000 கோடி என்கிறது. இதில் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தீவும், அமெரிக்காவில் உள்ள 85 ஏக்கர் நிலமும் அடங்கும் என்கிறார்கள். எப்படியாயினும் ஒரு பரதேசிக்கு இவ்வளவு சொத்து எதற்கு என்கிற கேள்வி (நன்றி:அன்பரசன் மா, முகநுhல்) எழுவதைத் தவிர்க்க முடியாது. சாமியார்கள் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று எந்த ஆசையையும் துறக்கவில்லை என்பது மட்டும் நிச்சயம். பூசாரிக்கு பயன்படாத எதுவும் கடவுளுக்கு படைக்கப்படுவதில்லை என்று அறிஞர் இங்கர்சால் கூறுவார். அமெரிக்க நிலமும், ஸ்காட்லாந்து தீவும் அவரது பக்தர்கள் வாங்கிக் கொடுத்ததாம்.

ஏதோ ஒரு தமிழ் திரைப்படத்தில் ஆடு திருடிய சுனா பானா கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு அவரே ‘யார்ரா ஆட்டை திருடியது’ என்று பஞ்சாயத்தில் ரவுசு பண்ணுவார். அதாவது, திருடியவரே ‘யார்ரா திருடியது’ என்று மிரட்டுவார். அதுதான் எனக்கு ராம்தேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டச் செய்திகளைப் படிக்கும்போது நினைவிற்கு வந்தது.

சாமியார்கள் என்றாலே போலிகள்தான் என்பதை நாம் அறிவோம். உண்மைச் சாமியார்கள், போலிச் சாமியார்கள் என்கிற பேதம் எதுவுமில்லை. இந்த நிலையில் சொத்து சுகம் என்று வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த பாபாவிற்கு நாட்டு நலனில் என்ன திடீர் அக்கறை? வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தின் மீதும், ஊழல் ஒழிப்பின் மீதும் என்ன கரிசனம்?

உண்மையில் அவருக்கு ஊழல் ஒழிப்பின் மீதோ அல்லது கருப்புப் பணத்தை கணக்கில் உள்ள பணமாக மீட்க வேண்டும் என்பதில் அக்கறை இருக்கிறதா இல்லையா என்பதே சந்தேகத்திற்கு இடமானதாக இருக்கிறது. பிரதம மந்திரிகளை லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வரக் கூடாது என்கிறார்.நாட்டின் உச்ச அதிகாரம் படைத்த ஒருவரை விசாரிக்கவே கூடாது என்பது எந்த வகையில் சரியென்றே தெரியவில்லை.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு 18 கோடி ரூபாய் செலவழிப்பவர், தன்னுடைய யோகா வகுப்புகளுக்கு 1000 முதல் 50000 வரை கட்டணம் வசூலிக்கும் ஒருவர் எப்படி நியாயமானவராக இருக்க முடியும் என்றே தெரியவில்லை. (மாதம் வெறும் 500 ரூபாய்க்கு யோகா சொல்லிக் கொடுக்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள்).

திரை மறைவில் வேறு என்ன நடந்திருக்கிறது என்பது பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இந்து மதவெறி சங்பரிவாரம் அவருக்கு எல்லாவுமாக இருக்கிறது. சங்பரிவாரம் ஏன் இவர் பின்னால் போய் நிற்க வேண்டும்? அல்லது இவரை ஏன் துhண்ட வேண்டும்?

பாஜக மீண்டும் மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு மேலும் மேலும் அருகிக் கொண்டே வருகின்றது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெறும் 5 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. தனது அரசியல் அங்கமான பாஜக எல்லா வகையிலும் மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்பதால் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு வேறு வழி தெரியததால் ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற முகமூடிகளைப் போட்டுக் கொண்டு வருகிறது.

பாஜக ஊழலைப் பற்றிப் பேசினால் யாரும் பொருட்படுத்துவதில்லை. நனைகிற ஆடும் கவலைப்படுகின்ற ஓநாயும்தான் எல்லோருக்கும் நினைவிற்கு வருகிறார்கள். அதிலும் எடியூரப்பா அதை நினைவூட்டுவதில் முன்னணியில் நிற்கிறார்.  பிடிவாதமாக ஊழல் செய்கிறார்.  அதற்காக பிடிவாதமாக பதவியைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்.

மேலும், யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பது பற்றி தங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று சங்பரிவாரத்தின் உச்ச பட்சத் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பதையும் நினைவில் கொள்ளவும். கட்சி சார்பற்ற வேடந்தரித்து பாஜகவை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்கான வழக்கமான உத்தி. 

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று கூடிக் கூடி ஆலோசித்த சங்பரிவாரம் இந்த நிலையில் நேரடியாக பாஜக அடையாளம் இல்லாத ஒரு ‘கலகத்தைத்’ தூண்ட திட்டமிட்டிருக்க வேண்டும். தன்னுடைய பழைய உத்திகளில் ஒன்றையே மீண்டும் தேர்வு செய்கிறது. எந்த பழைய உத்தி?
1970களில் இந்திரா காந்தி அரசாங்கத்தின் ஊழலையும், அராஜகத்தையும் எதிர்த்து காந்தியவாதி ஜெயப்பிரகாஷ் நாராயண் நடத்திய இயக்கத்திற்கு தொண்டர் பலத்தை வழங்கி, அதற்குள் ஊடுருவி, அவசர நிலைப் பிரகடனத்திற்குப் பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதாக் கட்சியின் ஒரு அங்கமாக தன்னுடைய ஜனசங்கத்தை ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வைத்த அதே உத்தி.

அப்போதாவது மதச்சார்பற்ற அடையாளத்திற்குள் ஒளிந்து கொள்ள வேண்டியிருந்தது. இப்போது அதுவும் இல்லை. வெளிப்படையாகவே காவி அடையாளம் தரித்து வந்து விட்டார்கள். பாஜக ராம்தேவை ஆதரிக்கிறது. விஎச்பி ஆதரிக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் இருப்பது ஒன்றும் இப்போதைய நிகழ்வல்ல. அது மிகப் பழைய விஷயம். ஆறு வருடங்கள் அதிகாரத்தில் இருந்தபோது அது பற்றி எதுவும் செய்யாத சங்பரிவார பாஜக இப்போது படோடபமாக ஆர்ப்பாட்டம் செய்கின்றது.

கருப்புப் பணத்தை எதற்கு மீட்க வேண்டும்? ஊழலை ஏன் ஒழிக்க வேண்டும்? கருப்புப் பணம் அரசாங்கத்திற்கு வர வேண்டிய வரி வருவாயை ஏய்க்கிறது. ஊழல் அரசாங்கத்திற்கு வர வேண்டிய பணத்தைத் தின்கிறது. அதாவது ‘மக்களுக்கு’ வர வேண்டிய பணத்தை சில தனியார்கள் சுருட்டிக் கொண்டு போகிறார்கள்.

வரி ஏய்ப்பின் மூலம், ஊழல் மூலம் மட்டும்தான் மக்கள் பணத்தைப் பறிக்க முடியுமா? விலைகளை உயர்த்துவதன் மூலம் மக்களின் பணத்தை பறிக்கலாம். குறைவாகக் கூலி கொடுப்பதன் மூலம் மக்களின் பணத்தைப் பறிக்கலாம். கல்விக் கட்டணம் என்கிற பெயரில் பறிக்கலாம். மருத்துவ சேவைகள் என்கிற பெயரில் பறிக்கலாம்.  உணவுப் பொருட்களுக்கான மான்யங்களை வெட்டுவதன் மூலம் பறிக்கலாம். லட்சக்கணக்கில் மதிப்புள்ள மக்களின் நிலத்திற்கு ஆயிரக்கணக்கில் கொடுத்து விட்டு நிலத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் பறிக்கலாம். மக்கள் சொத்தை குறைவான விலைக்கு விற்பதன் மூலம் பறிக்கலாம். ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஆயிரம் வழிகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. பாபா இவற்றைப் பற்றியெல்லாம் எப்போதும் முணுமுணுத்தது கூட கிடையாது. ஊழல் பெருக்கத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் உலகமயத்தைப் பற்றி அவர் பேசியது கூட கிடையாது.

 பாஜகவோ மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதும், இப்போது அதிகாரத்தில் இருக்கும் இடங்களிலும் இவற்றில் பலவற்றைச் செய்தது. செய்கின்றது. உதாரணம் வேண்டும் எனில், தனியார் மயத்தின் பெயரால் மும்பையில் பொதுத்துறை நிறுவனமான செந்தூர் ஹோட்டலை அடிமாட்டு விலைக்கு விற்றதையும். அதை வாங்கியவர் சில மாதங்களிலேயே நுhறு கோடி ரூபாய்க்கு மேல் லாபத்திற்கு விற்றதையும் நினைவில் கொள்ளுங்கள். அது போல்தான் மாடர்ன் பிரட் நிறுவன விற்பனை ஊழலும். பால்கோ எனும் பெரிய பொதுத்துறை நிறுவனத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்றது வாஜ்பாய் அரசு.  கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு என வாங்கப்பட்ட சவப்பெட்டிகளுக்கு கூடுதல் விலை வைத்து வாங்கியதையும், அந்தக் கூடுதல் பணம் பாஜகவினரின் பாக்கெட்டுக்ளுக்குப் போனதையும் நினைவில் கொள்ளுங்கள்.

உலகமயம் ஊழலை சட்டபூர்வமாக்கிவிட்டது. வருவாய் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பெட்ரோல் விலையை, கேஸ்விலையை இடைவிடாமல் உயர்த்திக் கொண்டே இருக்கும் அரசாங்கங்கள். பட்ஜெட் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பொதுத்துறை நிறுவனங்களை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கின்றன.  ஆனால், உண்மையான நோக்கம் எல்லாவற்றையும் தனியார்மயமாக்குவது, சந்தைமயமாக்குவதுதான். விலைகளை சந்தை தீர்மானித்துக் கொளுமாம். சந்தைப் போட்டியில் விலைகள் குறைந்து   விடும் என்று அன்று சொன்னார்கள். ஆனால், அவை எப்போதுமே குறையவில்லை.
ஊழல் பணத்தை மீட்டால் மட்டும் அது மக்களுக்கு வந்துவிடப் போகின்றதா என்ன என்கிற கேள்வியும் இருக்கிறது. பட்ஜெட் பற்றாக்குறையைக் காரணம் காட்டி உணவு மான்யங்களை வெட்டி மக்களின் வயிற்றில் அடிக்கும் ஐமுகூ அரசாங்கம் ஆண்டுக்கு சராசரியாக சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள் அளவிற்கு பெரும் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகின்றது. ஊழல் மூலம் மட்டுமின்றி, சட்டப்படியாகவும் மக்கள் பணம் பெரு முதலாளிகளின் கல்லாப் பெட்டிகளுக்குத்தான் போகின்றது. ஊழல் பணத்தை மீட்டால் என்ன செய்வார்கள்? அதை சட்டப்படியாக அதே முதலாளிகளிடம் வரி விலக்கு என்கிற பெயரில் திரும்பவும் கொடுத்து விடுவார்கள். முதலாளித்துவ உலகமயக் கொள்கைகளை எதிர்க்காமல் ஊழலை எதிர்ப்பதாக ஐந்து நட்சத்திர ஆர்ப்பாட்டங்கள் செய்வதெல்லாம் மக்களுக்கு எந்த வகையிலும் பயன்தராது. ஆளும் வர்க்கங்களுக்கும், கட்சிகளுக்கும் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டுமானால் பயன்படலாம்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//ஏதோ ஒரு தமிழ் திரைப்படத்தில் ஆடு திருடிய சுனா பானா கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு அவரே ‘யார்ரா ஆட்டை திருடியது’ என்று பஞ்சாயத்தில் ரவுசு பண்ணுவார். அதாவது, திருடியவரே ‘யார்ரா திருடியது’ என்று மிரட்டுவார். அதுதான் எனக்கு ராம்தேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டச் செய்திகளைப் படிக்கும்போது நினைவிற்கு வந்தது//

இந்த சொத்து திருடி சேர்ததுன்னு சொல்ல வரீங்க... ஆதாரம்?? சரி... காங்கிரஸ் கவர்ன்மென்ட் ஏன் இவரை விட்டு வச்சு இருக்கு..
கொஞ்சம் டைம் எடுத்து கற்பனை பண்ணி அடுத்த கட்டுரை எழுதுங்க...

பெயரில்லா சொன்னது…

//சாமியார்கள் என்றாலே போலிகள்தான் என்பதை நாம் அறிவோம். உண்மைச் சாமியார்கள், போலிச் சாமியார்கள் என்கிற பேதம் எதுவுமில்லை. இந்த நிலையில் சொத்து சுகம் என்று வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த பாபாவிற்கு நாட்டு நலனில் என்ன திடீர் அக்கறை? வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தின் மீதும், ஊழல் ஒழிப்பின் மீதும் என்ன கரிசனம்?//

ஒரு பேச்சுக்கு கேக்குறேன்..சொத்து சுகம்.. அப்படீன்னு வாழுறவங்க ... லஞ்சம் / ஊழல் பத்தி கவலைப்பட கூடாதா...
சாமியார் சொத்து வச்சு இருக்கார்... இந்த டாபிக் விட்டுட்டு பார்த்தா... எதோ சொத்து வச்சிருந்தா கொலை குற்றம்னு சொல்லுவீங்க போல...

பெயரில்லா சொன்னது…

அப்படியே சங்பரிவார் இதுக்கு பின்னாடி இருக்குனு வச்சுகிட்டாலும், இவர் போராடுதுல என்ன தப்பு இருக்குனு சொல்ல வரீங்க...?
அப்படியே இவர் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்து இருந்தாலும், இல்ல கருப்பு பணம் வச்சு இருந்தாலும், ஆளும் காங்கிரஸ் அரசு அதுக்கு எதிரா
நடவடிக்கை எடுக்கலாம் இல்ல.. ?


அப்படியே சங்பரிவார் இதுக்கு பின்னாடி இருக்குனு வச்சுகிட்டாலும், இவர் போராடுதுல என்ன தப்பு இருக்குனு சொல்ல வரீங்க...?
அப்படியே இவர் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்து இருந்தாலும், இல்ல கருப்பு பணம் வச்சு இருந்தாலும், ஆளும் காங்கிரஸ் அரசு அதுக்கு எதிரா
நடவடிக்கை எடுக்கலாம் இல்ல.. ?

சாமியார்கள் கருப்பு பணத்துக்கு எதிரா போராட்டம் நடத்த கூடாதுன்னு எதாவது சட்டம் இருக்கா?

உங்களுக்கு சாமியார்கள் பிடிக்காதுனா, நாட்டுல அவங்க இருக்கவே கூடாதுன்னு சொல்லுவீங்க போல...