புதன், 22 ஜூன், 2011

கோடிகளில் புழங்கும் கேடி பணக்கார “சந்நியாசி”கள்!


புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமப் பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வது என்ற கேள்விக்கு இன்னும் முழு விடை கிடைக்கவில்லை.

ஆனால் சாமிகளின் ஆசிரமத்தில் கோடி, கோடியாகப் பணம் (12 கோடி ரூபாய்), கட்டி, கட்டியாகத் தங்கம் (22 கோடி ரூபாய்), வெள்ளி(1.64 கோடி ரூபாய்) என்று தாராளமாகக் கொட்டிக் கிடக்கிறது. புட்டபர்த்தியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணம் இரண்டு இடங்களில் பிடிபட்டிருக்கிறது. வோல்வோ பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் மற்றும் மற்றொரு வாகனத்தில் 35 லட்சம் ரூபாய் ஆகியவை ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. இங்கு மட்டுமல்ல, பெரிய, பெரிய சாமியார்களின் சொத்து விபரங்களைப் (அதிகாரப்பூர்வ) பார்த்தால் மலைப்பூட்டும்.

மாதா அமிர்தானந்தமயி

இவர்தான் இந்தியாவிலேயே பணக்கார சாமியாரினியாக இருப்பார். மிகவும் குறைவாக மதிப்பிட்டால்கூட அவரது அமிர்தானந்தமயி டிரஸ்டின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும். தனது பதின்பருவ வயதிலேயே சாமியாரினியாக மாறிவிட்ட அமிர்தானந்தமயியின் சொந்த ஊரான வள்ளிக்காவு என்ற தீவில் அவரது ஆசிரமம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது ஐந்து அடுக்குமாடிக் கட்டிடமாகும். அவரது பக்தகோடிகளிடமிருந்து வரும் நன்கொடைகள் ஒருபுறம். கல்வி நிறுவனங்கள் மூலம் கொள்ளை லாபம். சந்தையில் உள்ள கட்டணங்களையே அவர்களும் வசூலிக்கிறார்கள். இதோடு ஒரு மருத்துவமனை, தொலைக்காட்சி நிறுவனம் என்று பணம் கொட்டுகிறது.

சொத்துகள் : அம்ரிதா விஸ்வ வித்யாபீடக் கல்லூரிகள், அம்ரிதா மருத்துவக்கல்லூரி(கொச்சி), அம்ரிதா பள்ளிகள், தொலைக்காட்சி நிறுவனம்.

ஆஷாராம் பாபு

இந்திய சாமியார்களில் அதிகமான அளவு சர்ச்சைகளில் அடிபட்டவர் இந்த ஆஷாராம் பாபு. ஏராளமான நில ஆக்கிரமிப்பு புகார்கள் இவரின் ஆசிரமங்கள் மீது உள்ளன. 2009 ஆம் ஆண்டில், இவருடைய ஆசிரமங்கள் கிட்டத்தட்ட 67 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான நிலங்களை ஆக்கிரமித்துள்ளன என்று நரேந்திர மோடி அரசு சட்டமன்றத்திலேயே அறிவித்தது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 350க்கும் மேற்பட்ட ஆசிரமங்களை ஆஷாராம் பாபு அமைத்துள்ளார். அமெரிக்காவில் நியூஜெர்சி உள்ளிட்ட பல இடங்களில் இந்த ஆசிரமங்கள் உள்ளன.

ஓஷோ
மத்தியப் பிரதேசத்தின் குச்வாடா என்ற இடத்தில் டிசம்பர் 11, 1931 அன்று பிறந்த ஓஷோவின் இயற்பெயர் சந்திரமோகன் ஜெயின். சோசலிசத்திற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தவர். அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் ரஜ்னீஷ்புரம் என்ற இடத்தை அவர் அமைத்தார். ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். 1990 ஆம் ஆண்டில் அவர் மறைந்தார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து அவரது அமைப்பிற்கு இருந்தது.


ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

151 நாடுகளில் 30 கோடி பக்தர்கள் அவருக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக, சாமியார்கள் காவி உடுத்துவதை வாடிக்கையாகக் கொள்வார்கள். இவர் மட்டும் வெள்ளை உடையை உடுத்துகிறார். 1980களின் துவக்கம் வரை அவர் யார் என்றே தெரியாது. கடந்த முப்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்பில் அவரது சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தின் பாபநாசத்தில் அவர் பிறந்தார். பெங்களூருவில் வாழும் கலை மையத்தை அவர் அமைத்தார். அவரது மையம் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக உருவானது. பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 15 ஏக்கர் நிலத்தை ரவிசங்கரின் ஆசிரமம் கபளீகரம் செய்ததாக வெளிநாடுவாழ் இந்தியரான பால் குற்றம் சாட்டினார். ஆனால் அந்த சர்ச்சை மறைக்கப்பட்டது.

சொத்துகள் : பெங்களூருவில் உள்ள வாழும் கலை மையம், ஸ்ரீஸ்ரீ சங்கர் வித்யா மந்திர் டிரஸ்டு, பி.யு.கல்லூரி(பெங்களூரு), ஸ்ரீஸ்ரீ ஊடகக்கல்வி மையம் (பெங்களூர்), ஸ்ரீஸ்ரீ பல்கலைக்கழகம், வாழ்க்கைக்கலை சுகாதார மற்றும் கல்வி டிரஸ்டு(அமெரிக்கா) மற்றும் இதர சொத்துக்கள்.

பாபா ராம்தேவ்

ராம் கிருஷ்ண யாதவ் என்ற இயற்பெயரைக் கொண்ட ராம்தேவின் சொத்து மதிப்பு 1,100 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஹரித்துவாரின் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த இவர், ஏழாம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் சமஸ்கிருதம் மற்றும் யோகா பயின்றார். பின்னர், உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசம் மேற்கொள்வதாக அறிவித்தார். பின்னர், திவ்யா யோக மந்திர் டிரஸ்டு ஒன்றைத் துவங்கினார்.

சொத்துக்கள் : 36க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டிரஸ்டுக்கு சொந்தமாக உள்ளன. இவையெல்லாம் வெறும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சொத்துக் கணக்குகளாகும்.

மகரிஷி மகேஷ் யோகி

1970களில் மிகவும் பிரபலமான இவர் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பிறந்தவர். மகேஷ் பிரசாத் வர்மா என்பது அவரது இயற்பெயராகும். உலகின் முக்கியமான நபர்கள் பலருக்கு அவர் ஆன்மீக ஆலோசகராக இருந்தார். 2008 ஆம் ஆண்டில் அவர் இறந்தபோது அவரது சொத்து மதிப்பு பத்தாயிரம் கோடி ரூபாயிலிருந்து 25 ஆயிரம் கோடி ரூபாய் வரையிருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஏராளமான நிலங்கள்அவரது அமைப்பின் வசம் இருந்தன.

ஆதாரம் : மெயில்டுடே நாளிதழ்

கருத்துகள் இல்லை: