செவ்வாய், 13 ஜூலை, 2010

நந்தன் அழைக்கிறான்

நந்தன் அழைக்கிறான்

நந்தன் அழைக்கிறான்

நானிலமே கிளர்ந்தெழுக !பிறப்பின் தீட்டழிக்க

நெருப்பில் குளித்தெழுந்து

புறப்பட்டு வா எனவே

ஈசன் சொன்னான் எனக்

கட்டிவிட்ட கதைக்குள்ளே

எரிகின்றான் நந்தன் எரிகின்றான்.

அவன் உடலம் எரிந்து

எலும்புகள் தெறிக்கையில்

சிரித்துக் கைகொட்டிச்

சுற்றிநின்ற சாதியத்தின்

வேரறுத்து வீழ்த்திடவே

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக.அவன் நடந்து வந்த பாதை

நடராசன் கோவிலிலே

தீட்டுப் பட்டதெனச்

சுவரெழுப்பி மறித்தார்கள்.

நந்தன் மடிந்துவிட்டான்

நெருப்பிட்டுக் கொலை செய்த

அந்தணரும் மரித்து விட்டார்.

சுவர் இன்னும் நிற்கிறது -

சுற்றிவரும் போதெல்லாம்

சாதியால் தாழ்த்தப்பட்ட எம்

சரித்திரத்தை நினைவூட்டி.

அந்நினைவுகளின் வலி மறக்கத்

திமிர்ந்து நிற்கும் இச்சுவர் தகர்த்து

வரலாற்றை நேர் செய்ய வா.. .. ..

நெருப்புக்கு உள்ளிருந்து

கங்குகளில் சொல்லெடுத்து

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக!

நாட்டு மக்கள் நீர் அருந்த

நாடெல்லாம் குளம் வெட்டிக்

கோயிலும் கோபுரமும்

உயர்ந்திடவே மண்சுமந்து

கட்டி முடித்த கோவில்

எட்டி உதைத்ததாலே

காயம்பட்ட இதயத்தின்

எரிகின்ற நெருப்பாக

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக!வரலாற்றைப் படைத்தவர்கள்

வரலாறாய் வாழ்ந்தவர்கள்

வரலாற்றின் பக்கங்களில் ஒரு

வரியிலும் இடம் பெறாதவர்கள்

அவ்வலியின் நினைவை மட்டும்

சுமந்தபடி வாழ்பவர்கள்

வலிகளின் நினைவுகளை

நித்தம் புதுப்பிக்கும் இச்

சிதம்பரத்துச் சுவர் தகர்த்துச்

சீர்படுத்த வேண்டுமெனச்

சாதியரால் சதித்துக் கொலையுண்ட

சரித்திர நாயகனாம்

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக!தில்லைவாழ் அந்தணர்கள்

தின்று செழித்திடவே

சொந்தக்கோவிலாகச்

சிதம்பரத்து நடராசன்

சிறைப்பட்டுக் கிடந்த காலம்

தேவாரம் திருவாசகம் எனச்

செந்தமிழும் சிறைப்பட்ட கொடுங்காலம்.சாதிகாத்த அரசுகள்

சரிந்து வீழ்ந்தபின்னும்

சாதிக்கு எதிராகத் தமிழ்ச்சாதியை

எழுப்பி விட்ட காவிய நாயகனாம்

பெரியாரின் வழிநின்று

சமத்துவபுரம் எழுப்பும்

சனநாயக காலத்திலும் ஒரு

சாதிச்சுவர் இன்னும் நின்று சிரிப்பதா?

அரசின் கைகளில் கோவில் வந்தபின்னும்

அச்சுவர் மட்டும் இன்னும் அசையாமல் நிற்பதா?

நந்தன் கேட்கின்றான்

நானிலமே பதில் பேசு.

- ச.தமிழ்ச்செல்வன்

கருத்துகள் இல்லை: